மண்போர்த்திய உடலெங்கும்
பாளபாளமாய்
வெடித்துக் கிடக்கிறது பசி
பசியின் நாவில் மிஞ்சுகிறது
உயிரின் சுவை
இமைகளைத் தைத்த வறுமையின்
ஊசிமுனையில் சுழல்கிறது
வாழ்வதற்கான நம்பிக்கை
வற்றிய அடிவயிற்றில்
கைவைத்து நிரப்பிக் கொள்கிறது
பசித்த மானிடம்
நிலங்களைப் பறித்து
உணவினை அபகரித்து
வறுமையை விளைத்துச் சென்றவன்கள்
எவன்கள்?
காற்றை மெல்கின்றன
நரநரவென பற்கள்
கயவன்களின் நினைப்பில்

Pin It