அருகிருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
பிரிவைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம்.
சண்டையிடுகிறோம்
மிட்டாய்க்கு சண்டையிடும்
நம் குழந்தைகள் போல.
நம் எண்ணக் கரிசனங்களின் விரிசல்களுக்கு மத்தியில்
இடைவிடாது இழையோடுகிறது காலம்.

அறை முழுக்க நிறைந்திருக்கும்
புத்தக நறுமணமானது
குழந்தையின் பால்வாசனைபோல் அவ்வளவு மென்மையானது.
நீ விரும்பினால்
போகும்போது உன் புத்தகங்களை தாராளமாக எடுத்துச் செல்லலாம்.
குளிர்காலமும், இளவேனிலும் போய்விட்ட மாலைப்பொழுதில்
உன் அறையில் அமர்ந்து
தேநீர் பருகியவாறு
இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நீ வந்தபிறகு நமக்குச் சொந்தமான இந்த பியானோவில்
உனக்குப் பிடித்தமான இசையினை மீட்டப் போகிறேன்.
நீ அளிக்கும் பரிசு எதுவாயினும் மிகச்சிறந்த சிம்பொனியாய்
என் இசைக் குறிப்பேட்டில் சேர்த்துக் கொள்வேன்.
வாழ்வின் கதியில்
இனி இணைந்திருக்கப் போகும்
நம் பிரிவானது,
பரிமாறிக் கொண்ட
நம் முத்தகணங்களின் நீட்சி.

தற்போது வீட்டின் ஏகத்திற்கும்
படர்ந்து கிடக்கும் உன் மௌனம்போல்
சித்ரவதை செய்கிறது கோடை.
தகிப்பான இக்கோடையை
பொறுத்துக் கொண்டாலும் ஆசிர்வதிக்கப்பட்ட
நம் குழந்தைகளுக்காகவேனும்
நாம் அவசியம் பிரியத்தான் வேண்டும்.
ஆகவேதான்
பிரிவெனும் அகாலம் நெருங்குவதற்குள்
வா சேர்ந்து விளையாடலாம்
பிரியமுடன் ஒரு கண்ணாமூச்சி.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It