அழுதுகொண்டிருப்பதென்பது மற்றெல்லாவற்றையும் விட
மிக நெருக்கமானது தான்,
பிறகு இப்போதிருந்து இந்த உலகின் சுவரைத் துளையிடத் துவங்க வேண்டும்.
அழுதுகொண்டிருப்பதென்பது மற்றெல்லாவற்றையும் விட
மிக இரகசியமானது தான்,
பிறகு அதன் ஆணிவேரை மெதுவாக அறுக்க வேண்டும்.
அழுதுகொண்டிருப்பதென்பது மற்றெல்லாவற்றையும் விட
மிகுந்த ஆறுதலானது தான்,
பிறகு பயங்கரமானவற்றைத் திடீரெனச் செய்யப் பழகவேண்டும்.
அழுதுகொண்டிருப்பதென்பது மற்றெல்லாவற்றையும் விட
மிக அபத்தமானது தான்,
பிறகு நம்பவே முடிந்திடாத காரியங்களையும் நம்ப வேண்டும்.
அழுதுகொண்டிருப்பதென்பது மற்றெல்லாவற்றையும் விட
மிகுந்த வலியுடையது தான்,
பிறகு அதன் ஆன்மாவின் அமைதியை அனுபவிக்க வேண்டும்.

***

எவ்வளவு தொலைவிலிருக்கின்றன இந்த நட்சத்திரங்கள்!
உலகம் ஒரு மனப்பிறழ்வு குழந்தைக்குத் தூரத்தைக்
கற்பிக்க முடியாது.!

***

சிலவேளைகளில் இந்த வாழ்வு பிரகாசித்துக்கொண்டிருக்கும் போது
அது தன் வெறுமையை மறைத்துக்கொள்கிறது,
தன்னிலிருந்து வெளியேறிய ஒரு அலையை
கடல் நினைத்துக்கொண்டிருப்பதில்லை

- ஜீவன் பென்னி

.

Pin It