என்னறை யன்னலில்
வந்தமரும் சிறுகுருவி..
என் உறக்கம் விழிப்பு
சிரிப்பு அழுகை அறியும்..
நான்கு சுவர்களுள் என்
நடமாட்டம் தெரியும்..
தன் சிறு கண்களில்
உலகை அளந்த
நம்பிக்கையைத் தேக்கி
சிறகுகள் பிரித்து
காத்திருக்கும் தினமும்
என் வானம் விரிய....
இருளின் துணையில்
இரவின் கனவுகளில்
இவ்வுலகம் துறந்து
பறந்து திரிகிறேன்
தொடுவானம் தாண்டி.....
விடியல் பொழுதில்,
கலைந்து கிடக்கும்
படுக்கையைத் தட்டி
விரிப்பை மடித்து
விழித்துக் கொள்கிறேன்
வழக்கம் போல...

அருணா சுப்ரமணியன்

Pin It