வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும்
இடையில்
ஊஞ்சலாடுகிறேன்
என்னிலிருந்து
வந்தவனாய்..

என்னிலிருந்து வந்தவன்
நானாகவோ அல்லது
நீங்களாகவோ கூட
இருக்கலாம்.
ஏன் நானும் நீங்களும் சேர்ந்த கலவையாய்
வந்திருக்கலாம்

புதிய முகமும்
புதிய வார்த்தைகளும் பேசி
உங்களில் மனம் நிரப்பி
சிந்தை கலக்கி
செப்புகளில் எழுத வந்தவன்
என்னிலிருந்து வந்தவனாகவே இருக்கக்கூடும்

உங்களின் கட்டாயத்தாலும்
சூழ்நிலை சுருக்குகளாலும்
கட்டவிழ்க்கப்பட்டவன்
அவனே

என்னிலிருந்து வந்தவன்
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் மாறி மாறி போய் வரக்கூடியவன்

என்னிலிருந்து நான்
இன்னொருவனாய்
வருவதற்குக்
காரணம் நீங்களே

நீங்கள் கேட்கிறீர்கள்
மனம் கசக்குறீர்கள்
திசை திருப்புகிறீர்கள்
புதுமை வேண்டுமென என்னை
புரட்டிப் போட்டதால்
வந்தவன் வேறு யாருமில்லை
நான் தான் நம்புங்கள்

- வாசகன் வெங்கடேசன்

Pin It