பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப்
பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில்
கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர்
கடுகளவும் அஞ்சாதே கோட்சே கூட்டம்
திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும்
வெளிப்புரத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த
விரிவுதனை நீர் அறிவீர் அஞ்சவேண்டா;
கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்
ஏழைக்கும் செல்வனுக்கும் பன்மதத்தார்
எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி
வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல்
மார்பு பிளந்தார்; காமராசரே, எம்
தோழரே! திராவிடரே உமது மேன்மை
தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்!
ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத்
ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!
(1.3.1948இல் ‘குயில்’ ஏட்டில் புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை)
வரலாற்றுக் குறிப்பு: ................ காந்தியை கோட்சே சுட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வராக இருந்த ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) மற்றும் காமராசர் ஆகிய இருவருக்கும் சேர்த்து - புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இது. காமராசர் மீதான பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். புரட்சிக் கவிஞர் எச்சரித்தபடியே 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்கு தீ வைத்து வெறியாட்டம் போட்டது கோட்சே கூட்டம். காமராசர் - உதவியாளர் உதவியுடன் தப்பினார்.