முதல் பக்கம் திருப்புகையில்
உடன்சேர்ந்து வாசிக்கும் விருப்பத்துடன்
எங்கிருந்தோ பறந்துவந்து 
அப்பக்கம் மீதமர்ந்தது ஒரு வண்டு.
பின்பு மலையேறுவதுபோல கிடுகிடுவென  புத்தகத்தின் 
வலது மூலை மேலேறியதும்
சிறிது நேரம் ஆசுவாசித்து
பாறைகளைப் புரட்டுவது போல 
சிற்சில பக்கங்களைக் கால்களால்
நெம்பித் தள்ள முயன்றது.
அதன்பின்
என்ன நினைத்ததோ தெரியவில்லை
 ஒரு பாலத்தின் பரப்பில்  நடப்பதுபோல வேகவேகமாக மேற்புறம் கடந்து 
முன் அட்டையை  எட்டியதும்
எழுத்தாளர் பெயரை 
ஊர்ந்தவாறே தடவிப்பார்த்து  ரீங்காரமிட்டுப் பறந்தது.
இப்படியாக
ழாக் ப்ரெவெரின் "சொற்கள்" 
திடீர் இசையாகின. 
 
வான்மதி செந்தில்வாணன்
Pin It