ஆகச் சிறந்த தொடக்கமாக
இரு தாய்ப்பறவைகள்
தன்னிரு மென் பூஞ்சிறகுகளுடன்
இனிதே பறக்கத் துவங்கின
வெக்கை நிலத்திலிருந்து
அதிவெக்கை நிலம்நோக்கிய
ஒரு பயணம் இது
இவ்வளவு வெம்மையிலும்
விழி நனைக்கிறது பனியருவி
மனம் முழுக்க உருள்கின்றன பனிச்சருகுகள்
ஏதுமற்றதும், எல்லாமுமான இந்த
ஏகப்பெருவெளியில்
மீஉயரப் பறவைகளாய்
மேகங்களுக்கு மேலாக
காற்றில் மிதந்து கொண்டிருக்கிறோம்.
நீலம், கறுமை, இளஞ்சிவப்பு, வெள்ளையென
விதவிதமான கம்பளங்களை எங்களுக்கென விரித்திருக்கிறது வானம்.
பிறந்தது முதல்
அண்ணாந்தே வானம் பார்த்து பழக்கப்பட்ட
இரு பறவைகளும்
தன் குஞ்சுப் பறவைகளை
விடாப்பிடியாய்த் தூக்கிக்கொண்டு
விண்ணிற்குப் பறந்தேவிட்டன
ஆக, குஞ்சுகளுக்கு பறக்காட்டியாயிற்று
இனி தன் சிறகுகளுடன்
மெல்ல அவர்கள் பறந்து கொள்வார்களெனும் நம்பிக்கையில்
உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்.....

- வான்மதி செந்தில்வாணன்

Pin It