"இந்தியா"
என்கிற பிம்பம்
எங்களுக்குள்
உடையும் வரை
உடைத்துக்கொண்டிருங்கள்..

எங்களுக்கும்
எப்பொழுதுதான்
சூடு சொரணை
வருவது?

அண்ணலை உடைத்தீர்கள்
தலித்துகள்
ஒன்றிணைகிறார்கள்…!

லெனினை உடைத்தீர்கள்
பொதுவுடமைத் தோழர்கள்
ஒன்றானார்கள்...!

பெரியாரை உடைத்தீர்கள்
பகுத்தறிவாளர்கள்
பக்குவம் அடைந்தார்கள் ...
ஓர் அணியில் இணைந்தார்கள்

உடையுங்கள் ....
இந்தியன் என்கிற
பிம்பம் எனக்குள்
இருந்து
உடையும் வரை
உடையுங்கள்...!

அப்பொழுதுதான்
நானும்
போராளியாவேன்
பெருங்கோபம் கொள்வேன்...!

பொறுத்தது போதும்
என்று
இந்தியத்தை உடைக்க
அலைபோல் எழுவேன் ...!

எனைப் போல்
தூங்கும் சராசரி மனிதர்கள்
சமுதாய விழிப்புணர்வோடு
விழித்துக்கொள்ள ....
உடையுங்கள்
காவி தீவிரவாதிகளே!

எங்களது தலைவர்களின்
சிலைகளை உடைத்து,
அவர்களின்
சிந்தனைகளை
எங்களுக்குள்
விதையுங்கள் ......

அண்ணலும், லெனினும், பெரியாரும்
உங்களுக்கு
எதிரி என்றால்
அவர்கள் மட்டுமே
எங்களுக்கான
தலைவர்கள் என்பதை
ஆணித்தரமாக எங்களுக்கு
சொல்லிக் கொண்டிருக்கும்
உங்கள்
உடைப்புகள் தொடரட்டும்!

உடையுங்கள்!
என்னைப் போன்ற
தோழர்களை
உணர்வுள்ள மனிதர்களாக்க
உடையுங்கள் ...!

எங்களை நாங்களே
செதுக்கிக் கொள்ள
அவர்களின்
சிலைகளை
உடையுங்கள்!

- பெ.பாண்டியன்

Pin It