ரஷ்ய எழுத்தாளரான விளாதிமிர் நபகோவ் (1899_1977) அவர்களின் பெரும் சர்ச்சைக்குரிய இலக்கியப் படைப்பு "லோலிதா". அக்காலகட்டத்தில் வாசகர்களின் பார்வைக் கோணத்தில் மிகுந்த பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய தவிர்க்க இயலாத நாவலென "லோலிதா"வைக் குறிப்பிடலாம்.

Eyes wide shut, The shining உள்ளிட்ட திரைப்படங்களுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் "Stanley Kubrick" அவர்களின் முயற்சியால் 1962ல் 'லோலிதா' முதன்முதலாக கருப்பு, வெள்ளைப் படமாக திரைதொட்டது. த்திரைப்படமானது சிறந்த எழுத்து மற்றும் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றது. பின்னர் மீண்டும் 1997ல் இயக்குநர் "Adrian lyne" அவர்களால் திரையில் மறுமலர்ச்சி பெற்றது.

lolitaAdrian lyne ன் கதாப்பாத்திரத் தேர்வுகள்:
Humbert _ Jeremy Irons
Dolores haze _ Dominique swain(Lolita)
Charlotte haze _ Melanie Griffith
Claire Quilty _ Frank Langella.

பிரெஞ்சு விரிவுரையாளர் பணிக்கென பிரான்ஸிலிருந்து அமெரிக்கா செல்லும் Humbert, விதவையான Charlotte haze ன் வீட்டில் தங்குகிறார். அங்கு அவளது 12 வயது மகளான Dolores haze(Lolita) ஐ எதேச்சையாய்ப் பார்க்கையில் அவரது பதின்வயதுக் காதல் மீண்டும் உயிர்ப்பு பெறுகிறது. தவிர்க்க இயலாத சூழலில் Charlotte haze ஐ மணந்துகொண்ட Humbert , Dolores ன் வளர்ப்புத் தந்தையாகிறார். ஒரு வளர்ப்புத் தந்தைக்கும் அவரது பதின் வயது மகளுக்குமான உறவுச் சிக்கல்கள்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம். சர்ச்சைக்குரிய இம்மையக்கருத்தும், திரைக்கதையும்தான் இத்திரைப்படத்தின் ஆளுமைக்குப் பலமாக அமைந்துள்ளன.

திரையின் முதற்காட்சியில், தன் காதலையும், அதன் கற்பிதங்களையும் சுமந்தபடி பயணிக்கும் கதாநாயகன் Humbert தனது பால்ய காதலியை உன்னத உயிர்ப்புடன் நமக்கு அறிமுகம் செய்கிறார். தன் வாழ்வின் ஆசிர்வாதங்களையும், சாபங்களையும் எடுத்தியம்பும் கதைசொல்லியாய் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

Jeremy Irons(Humbert), தனது மன உணர்வுகளின் பரிபூரண ஆளுமைகளை அவ்வளவு அழகாக தன் முகவெட்டில் செதுக்குகிறார். எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வில்லன் மற்றும் கதாநாயகன் என்ற இருவித நடத்தைப் பாங்குடன் படம் முழுக்க அடக்கமாகவும், மிகவும் அற்புதமாகவும் உலாவருகிறார். நடுத்தர வயதுடைய கதாப்பாத்திரமான இவரைச் சூழ்ந்தபடி ஒரு மென்மையான இழையோட்டம் இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தன் வாழ்வின் பெருமளவு அர்ப்பணிப்புகளை இவர்தம் காதலுக்கென நிகழ்த்துவதால் ஹம்பர்ட்டை காதலுக்கான குறியீடாக உணர்கிறது மனம்.

Humbert தன் 14 ம் வயதில் எதிர்கொள்ளும் முதற்காதலானது அவரை பல சுபசங்கடங்களில் எல்லைகளற்று சஞ்சரிக்க வைக்கிறது. எதிர்பாராமல் தனது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடும் அத்தருணத்தில் தாங்கவொண்ணாத வேதனையால் கதறுகிறது அவரது நெஞ்சம். துளியும் கருணையற்று காலம் நிகழ்த்தும் அம் மரணமானது தீராவலியுடன் அவரது பால்யத்தில் சுவடு பதிக்கிறது.

அதன்பின் Humbert தனது வயதுகளைக் கடக்க இயன்றதே ஒழிய காதலைப் பொறுத்து, அதன் உணர்வுகளைப் பொறுத்து பால்யத்தைக் கடக்க இயலவில்லை. மனிதன் தன் இச்சையின் ஆழ ஆழங்களில் சுழலும் எண்ணங்களுக்கு அபரிமிதமான முக்கியத்துவம் அளித்து அவற்றை தனது செயல்களால் தீவிரமாக நெருங்குகையில்தான் அவனது சோதனைகளும், சாதனைகளும் ஆரம்பமாகின்றன. தடுத்து நிறுத்த திராணியற்ற வகையில் எதிர்பாரா மாற்றங்களும் , திடீர்த் திருப்பங்களும் நொடியில் நிகழ்ந்து விடுகின்றன.

இயக்குநர் அட்ரியன் லைன், "லோலிதா" கதாபாத்திரத்திற்கென 'Dominique swain' ஐ தேர்வு செய்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. லோலிதாவின் உடல்மொழி அதீத கவர்ச்சியுடையது. ஒரு பதின்வயதுச் சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் அவ்வளவு அருமையாய் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். முரட்டுத்தனமும், கொச்சைத்தனமும், குறும்புத்தனமும், ஆக்ரோசமும் ததும்பும் குட்டி தேவதையென அவளைக் குறிப்பிடலாம். ஒட்டுமொத்த காமத்தின் குறியீடாக மனதில் வேரூன்றி கிளை பரப்புகிறாள் லோலிதா. அந்த தேவதையின் கொச்சைத்தனமான குறும்புகளை மனத்தால் முற்றிலுமாக ஏற்கவோ, மறுக்கவோ இயலவில்லை. எனினும், அப்படியான ஒரு பாலியல் சித்தரிப்பை இறுதிவரை கண்மூடித்தனமாக போதுமட்டும் ரசிக்க முடிக்கிறது. எதார்த்தமும், மாய எதார்த்தமும் கலந்த கலவையாய் மனதை இறுகப் பிசையும் லோலிதா, நொடிக்கு நொடி அதிர்வதும், நம்மை அதிரவைப்பதுமாய் அமர்க்களப்படுத்துகிறாள். அந்த மாயதேவதை படத்தின் இறுதிக் காட்சிவரை ஒரு மென்மையான வன்முறையுடன் மனதினுள் கும்மாளமிட்டபடி குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறாள்.

Lo (lolita) பள்ளி முகாமிற்குச் செல்லுமுன் தனது அதீத அன்பை Humbert ற்கு வெளிப்படுத்தும் அணுக்கமான நிகழ்வில் முதன்முதலாக அவர்கள் இருவர் மீதான பன்முகப் பார்வையின் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. இக்காட்சி முதற்கொண்டு பார்வையாளரின் புரிதலில் உறவுச்சிக்கலானது மென்மேலும் பலப்படுகிறது. இந்த உறவுச்சிக்கலை மையமாய்க் கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாகவும் , விறுவிறுப்பாகவும் நகர்கின்றன.

Lo வின் செய்கைகளை ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ தடுமாறும் மனமானது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தவும், அதன் பின்வாங்கலுக்கும் ஒரே சமயத்தில் தயாராகிறது.

சமூகம் என்பது உறவு ரீதியான சில ஒழுங்கு கட்டமைப்புகளுடன் கூடிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்டுள்ளது. அதனை மீறியதான உறவுச் செயல்பாடுகள் சமூக ஒழுக்கச் சீர்குலைவிற்கு அடித்தளமிடுவதாகவே எண்ணப்படுகிறது. தனிமனித ஒழுக்க சீர்கேடென்பது ஒட்டுமொத்த சமூகத்தின் சர்வநாசத்திற்கு ஒப்பநோக்கப்படுகிறது எனும் கருத்தியலை நாம் மறுக்க இயலாது. இவ்வகையான உறவுச்சிக்கல்களில் தோய்ந்த மனமானது நினைவுகளை ஆதிக்காலத்திற்கு அடியோடு நகர்த்துவதோடு மட்டுமன்றி நாகரிகத்திற்கு முந்தைய காலம், பிந்தைய காலமென பகுத்து அவைகளுக்குக் குறுக்கிடையாய் ஒரு கோடு கிழிக்கிறது. அதன்பின் நாகரிகத்திற்கு முந்தைய காலங்களில் தன்னை இருத்திக்கொள்ளும் மனமானது பிரபஞ்சம் முழுமைக்குமான உறவுப்புரிதல்களின் அலசல்களில் எல்லாமும் சரி, எல்லாமும் தவறு என்பதான குழப்பத்தில் உழன்று, ஸ்தம்பித்து உறைந்துபோய் நிற்கிறது.

வரலாற்றில் விடுபட்டுப்போன ஆதிக்கால ஸ்நேகங்களை ஸ்பரிசிப்பதாக நம்புகிறது மனம். இப்படியொரு சர்ச்சைக்குரிய உளவியலை, உயிரோட்டமான உறவினை உருவாக்கிய நபகோவ் வாசகர்களை மதில்மேல் பூனையாக நிறுத்தி ஒருசில "ம்யாவ்"களைக்கூட உதிர்க்கமுடியாதபடிக்கு இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். அதன்படிக்கு Adrian lyne கதைவழியிலான திரைக்காட்சிகளில் மிகையளவு அமர்க்களப்படுத்துகிறார்.

Humbert ம், Lo ம் தங்களின் பெரும்பான்மை இரவுகளை வெவ்வேறு விடுதிகளில் கழிக்கின்றனர். ஒருமுறை Humbert வெளியே சென்று திரும்புகையில் அவளது இன்ப அலங்கோலங்களின் நிலையுணர்ந்தவராய் அந்த ரகசிய நபர் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி மன்றாடுகையில்கூட Lo தனது காமாஸ்திரத்தைத்தான் பண்பட்ட கருவியென உபயோகிக்கிறாள். என்ன மாதிரியான ஒரு காட்சி அது! பெண்ணானவள், ஆணின் உணர்வுகளை சிதைத்து அதனை காமத்தின் வழி ரசித்து அனுபவிக்கிறாள். அதிரடியான அவ்வன்புணர்வு காட்சியின் உருக்கங்களிலிருந்து உடனடியாக விடுபட இயலாமல் சிறிது நேரம் அவ்விடத்திலேயே தேங்கி நிற்கிறது மனம். அக்காட்சியில் Lo தனக்குத்தானே வன்முறையை வலிந்து திணித்துக் கொள்பவளாக அடையாளப்படுத்தப்படுகிறாள். மென்மையான காமக் குரூரத்தின் தோற்றமென மிளிர்கிறாள் Lo.

Lo வின் காமம் எவ்வளவுக்கெவ்வளவு நெகிழ்வை ஏற்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு Humbert ன் காதல் ஆழங்களை உண்டாக்குகிறது. மிகவும் அற்புதமான காட்சியமைப்பு இது.

இத்திரைப்படத்தின் உச்சகட்ட நிகழ்வுகளுள் ஒன்று Quilty ன் மரணம். கதாப்பாத்திரத்திற்கேற்ற அபார நடிப்பு. இவருக்கென ஒருசில காட்சிகள் மட்டுமே வாய்ப்பாக அளிக்கப்பட்டிருப்பினும் தனக்குரிய பகுதியை நிறைவாகச் செய்திருக்கிறார்.குறிப்பாகச் சொல்லப்போனால் மரணிக்க விருப்பமற்ற ஒரு மரணத்தின் நேரடிக்காட்சியென இக்காட்சியினைக் குறிப்பிடலாம். Quilty ன் யதார்த்த நடிப்பும், காட்சியாக்கிய விதமும் பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமென மனதை நிரப்புகிறது.

அவ்வப்போது மேலெழும்பும் பின்னனி இசையானது மனதை மென்மையாக வருடிச் செல்கிறது.

அந்நிய நாடுகளில் நாவலைத் தழுவிய திரைப்படங்கள் ஏராளம். இதுவும் நாவலைத் தழுவிய திரைப்படமென்றாலும் காட்சியமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவின் மெனக்கெடல்களை உள்ளூர உணர முடிகிறது. பெரும்பான்மை காட்சியமைப்புகளில் கவித்துவம் இழையோடுகிறது. ஒருவேளை இந்நாவல் வாசிக்கப் பெற்றிருந்தால் நாவலுக்கும், இயக்குநரின் காட்சியமைப்புகளுக்கான ஒப்புமை மற்றும் வேற்றுமைகளை பேசும் வாய்ப்பு அமைந்திருக்கலாம்.

துரதிஷ்டவசமாக, "லோலிதா" விற்கு இணையான ஒரு நாவலையோ அல்லது திரைக்கதையையோ மேற்கோளாகக் குறிப்பிட இயலவில்லை. முடிவாக , சர்ச்சைக்குரிய திரைப்பட வரிசையில் தனித்து நிற்கும் "லோலிதா"விற்கு நிகர் லோலிதா மட்டுமே!!!

- வான்மதி செந்தில்வாணன்

Pin It