மனதைப் பழக்குதல்
அது அவ்வளவு
எளிதல்ல!

மனதை
ஒரு பூனையாகக் கருத வேண்டும்
மடி மீது கிடத்தி
மெல்ல அதன் முடிகோதிட வேண்டும்
இமை சொக்கி
விழி மூடுந்தருணத்தில்
மெல்ல தன்வயப்படுத்திடல் வேண்டும்
இரைதனை அதன்
முகமருகே
நுகரச் செய்தலாகா!
பின் அது
விழித்தெழுந்து பின்
வேடிக்கை காட்டும்

மனதை
ஒரு குட்டி நாயைப் போல்
கழுத்தணைத்து
கொஞ்ச வேண்டும்
மூக்கோடு மூக்கு
வைத்துப் பார்க்க மட்டுமே வேண்டும்
மறந்தும்
அதன் முன்
ப்ரியமானவொன்றை
கொஞ்சித் தொலைக்காதீர்கள்
கோபந் தலைக்கேறிய பின்
குதறித் தீர்த்துவிடும்!

மனதை
ஒரு பூவினைப் போல்
வாடவிடாது
நீர் தெளித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
மெல்ல அதனை நுகர்ந்து
நுரையீரல் நிரப்பிட வேண்டும்
வேகமாய் நுகர்ந்தால்
வெப்ப பெருமூச்செறிந்தால்
வெந்து வாடி விடும்!

மனதைப் பழக்குதல் என்பது
ஒரு வித்தை!
மனதைப் பழக்குதல் என்பது
ஒரு கலை!
மனதைப் பழக்குதல் என்பது
ஒரு வேள்வி!
மனதைப் பழக்குதல் என்பது
ஒரு தவம்!
மனதைப் பழக்குதல் என்பது
ஒரு பிரசவம்!

- இசைமலர்

Pin It