போதும் நிறுத்துங்கள்
என்னுடனான இவ் ஆயுதப் போரினை!!

ஒருவேளை நான்
நீங்கள் அறிந்த நபராக இருக்கும் பட்சத்தில்
உங்கள் பிஸ்டலிலிருந்து
கொப்பளித்துக் கிளம்பும்
வார்த்தைத் தோட்டாக்கள்
என் இதயம் பிளந்து
உயிரை வெளித்தள்ள எத்தனிக்கின்றன.

சில சமயம்
உங்கள் துப்பாக்கி விழிகளிலிருந்து
சீறிப் பாயும் புல்லட்டுகள்
உயிரோடெனைக் கருக்கிச் சாம்பலாக்குகின்றன.

போதாக்குறைக்கு அவ்வப்போது
உங்களின் செயலெனும் வெடிகுண்டு
என் இருப்பைப் பொய்ப்பிக்க
வெகு பிரையாசை கொள்கிறது.

உயிரைக் குறிபார்த்து சுடும்
உங்கள் வல்லமை உண்மையில் பாராட்டிற்குரியது.

நிற்க,
உங்களை நீங்கள் நிராயுதபாணி என்று
ஒருபோதும் உரக்கச் சொல்லிக்கொள்ள வேண்டாம்.
ஏன்..மெதுவாகக்கூட...

எத்தனை முறைதான்
நான் தற்காலிகமாய்ச் சாவது?
தயைகூர்ந்து
நீங்கள் தயார்நிலையில் வைத்துள்ள
என் மீது அலாதி பிரியம் கொண்ட
உங்கள் ஒட்டுமொத்தத் தோட்டாக்களை
ஒரே வீச்சில் குறிபார்த்து
நெற்றிப்பொட்டில் பாய்ச்சி
என் இறப்பை உறுதி செய்யுங்கள் நிரந்தரமாய்.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It