முழுமதி உச்சிவானைக் கடந்திடும்
நடுநிசிப் பொழுதொன்றில்
பொன்னகை அலங்காரங்கள் மிளிர்ந்திட
வெண்ணிறப் புடவைதனில்
ஒரு பேருலாவுக்கு புறப்படத் தயாரானாள் பாரத மாதா..

என் தேசம் என் மக்கள் என்றொரு உவகைப் பெருக்குடன்
தாய்த்திருநாட்டின் மண்பரப்பினில்
வெற்றுக்காலுடன் நடக்கத் துவங்கினாள்.
நடுநிசிப்பொழுதினில் தேசம் சுற்றிக் காண்பதில்
அத்துணை காதலுண்டு அவளுக்கு.

பயணம் துவங்கிய
சிற்சில நிமிடங்களுக்குள்ளாகவே
மதுப்புட்டியின் உடைந்த பாகமொன்று
அவளது பாதங்களைப் பதம் பார்க்க,
கசிந்தோடும் பச்சைக் குருதியினையும் புறந்தள்ளி
பயணத்தைத் தொடர்ந்தாள் மாதா.

தேசத்தில் தலைவாயிலில்
தம் பிள்ளைகள் நிர்வாணப் போராட்டமிட
வேதனையினால் துவண்டு தான் போயினள் பாரத மாதா.

தொலைவினில் இன்னுமொரு கூட்டம்
காதல் இணையரை நிர்வாணமாக்கி துரத்தியடிக்க,
ஆங்காங்கு சில பிஞ்சு மழலைகள் மூச்சற்று மாய்ந்து கிடக்க ,
தலைசுற்றி தவித்து வெதும்பினள் மாதா.
இன்னுமொரு பிரதேசத்தில்
இறைச்சியின் பெயரால் கொல்லப்பட்ட
இளையவனின் சடலத்தைக் கடந்திடும் வேளையில்
நாமெப்பொழுது மாட்டின் ரூபத்தினில்
அவதரிக்கத் தொடங்கினோமெனும்
குழப்பத்தில் ஆழ்ந்து போனாள்
பரிதாபமான மாதா.

நாம் உலாவித்திரிவது நள்ளிரவென்பது குறித்து
முதன்முறையாக அச்சப்பட்ட மாதா
போதை தலைக்கேறி புத்திமழுங்கியதொரு
மூடர் குழுவினரின் பார்வையிலிருந்து
தப்புவதில் ஆயத்தமான அவள்,
காவிப்புடவையணிய மறந்திட்ட நிலையில்
மறைவிடம் தேடி தவித்து நின்றாள் அவள்.

இன்றோ நாளையோ உடைந்து நொறுங்கிடக் கூடியதொரு
சாலையோர மண்டபத்தின் மறைவினில்
மறித்த சிலநாட்களான
ஐந்தறிவு ஜுவனின் பிரேதத்திலிருந்து
கிளம்பிய ஓருயிரிகளைப் போன்றே
உடலை சுருக்கி பதுங்கிக் கிடந்தாள் அவள்
எனினும் இப்பொழுதொருமுறை உரக்கச் சொல்லுங்களேன்
'பாரத் மாதா கி ஜே' என்று.

- எஸ்.ஹஸீனா பேகம்

Pin It