எழுத்தாளர் சி துரைக்கண்ணு அவர்களின் தன் வரலாறு நூல்தான் 'நிற்க அதற்குத் தக'.
தமிழில் ஏராளமான தன் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உ.வே.சா தொடங்கி ப.சிவகாமி வரை தன் வரலாறுகள் ஏராளம். ஒரு விசாவுக்காக காத்திருத்தல் என்கிற அண்ணல் அம்பேத்கரின் தன் வரலாறும், என் ஜீவிய சரித்திரம் என்கிற இரட்டைமலை சீனிவாசன் தன் வரலாறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் துரைக்கண்ணுவின் தன் வரலாறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்று , பட்டப்படிப்பின் போதே தீவிர இடதுசாரி இயக்க அரசியலில் களப்பணியாற்றி , தொடர்ந்து ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளராகி நேர்மையாக பணியாற்றி அந்த நிறுவனத்தில் நடந்த ஊழலுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து , அந்த நிறுவனம் நடத்திய கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறுப்பை ஏற்று அதை தரம் உயர்த்தி வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் உண்மைக்காக நின்று போராடி வெற்றி கண்டவர் துரைக்கண்ணு அவர்கள்.
இரட்டை வாக்குரிமை , தலித் அரசியல் முதலிய கருத்தாடல் உருவாகவும் அண்ணல் அம்பேத்கர் கருத்துக்கள் பட்டி தொட்டி எங்கும் பரவவும் தலித் தலைவர்களோடு ஒரு இணக்கமான செயல்பாட்டை கொண்டு இயங்கியவர் துரைக்கண்ணு அவர்கள். அவர் சந்தித்த போராட்டங்கள், நெருக்கடிகள், சவால்கள். அதில் சற்றும் துவளாத மனம் நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது.
நேர்மையின் வடிவாக வாழ்ந்தவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர். அம்பேத்கரை உள்வாங்கிய துரைக்கண்ணுவும் சமரசம் இல்லாத நேர்மையாளர் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார். நம் சமூகத்தில் நேர்மையாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல. ஊழலும் ஒழுங்கீனங்களும் சமூகமயமாகிவிட்ட சூழலில் ஒரு மனிதன் நேர்மையாகவும் வாழ்ந்து வெற்றி பெற முடியும் என்பதை நூல் நெடுக பதிவு செய்துள்ளார்.
நூலில் அவர் கையாண்டிருக்கிற மொழி மிக எளிய மொழி. இடர்பாடு இல்லாமல் எல்லோரும் வாசித்து புரிந்து கொள்ளும் இனிய நடை. உண்மையே நூலின் அழகியலாக மிளிர்கிறது.
இந்த நூலில் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களின் அணிந்துரையும், இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்களின் அணிந்துரையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியர் கல்விமணி அவர்களுக்கு இந்நூலை காணிக்கை ஆக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது.
மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்நூலை நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எல்லோரும் வாசிக்கவும் அதன்படி வாழவும் நம்மை நெறிப்படுத்தும் நூல்.
நிற்க அதற்குத் தக அருமையான தலைப்பு.
நூலைப் பெற - நீலம் பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ 180
தொடர்புக்கு 9894525815
- பேரா. அரச. முருகுபாண்டியன்