உன்னிடம் பேச நினைத்த
சொற்கள் முழுதும்
அம்பாரமாய்
குவிந்து கிடக்கிறது

உன் முத்தம் பெறாத
என் முன் நெற்றி
வெறுமை
சூடிக்கிடக்கிறது

உள்ளங்கைப் பற்றி நீ
அனுப்புகிற உயிர்சூடு பெறாமல்
என் ஆயுள்ரேகை
உறைந்து போய் கிடக்கிறது

உன் தோள் சாய்ந்து
என் துயர் சொல்லாது
மனமோ துவண்டு
போய்க்கிடக்கிறது

கரங்கோர்த்து
கழுத்தணைத்து
கன்னத்தில் நீ தருகிற
முத்தமின்றி
காணாமல் போகிறது
என் பொழுதத்தனையும்

பெய்கிற மழையுள்
நனைந்தும்
அணைய மறுக்கிறது
என் அன்பின்ஜூவாலை

அடுத்தடுத்த
மழை கிளர்த்துகிற
வெக்கை நீக்க
உன் உள்ளங்கை வேண்டும்
கன்னம் வைத்து படுத்துறங்க
காத்திருக்கிறேன்
வா!

- இசைமலர்

Pin It