நீ விட்டுப் போனது நல்ல வேளை இந்த நாட்களில் தெரிந்தது... . அழத் தோன்றும் போதெல்லாம் மழைக்குள் ஓடி விடுகிறேன்... கவிதை செய்யும் தந்திரம் தூக்கி போட்டு விட்ட தனிமைக்குள்ளும் ... எப்படியாவது கவிதையாய் வந்து அமர்ந்து விடுகிறாய்... மெல்ல சிரித்து விடுகிறேன்... . நான் அப்படி சிரிப்பது பிடிக்கும் என்பாயே... அதை நினைத்து... .சரி... . தொடங்குவது எப்புள்ளியில் என்று தெரியாத பக்கத்திலேயே முடிக்கும் புள்ளியை தேடுவதால்... இது உனக்கு எழுதும் கடைசிக் கடிதம்... என்று தோன்றுகிறது...

love separationகடிதம் ஆரம்பித்து பாதி வரை வந்த பின்னும்... நீ முதல் வரியிலேயே எப்போதும் போல் நிற்காதே... .அலங்கோலமாய் நிற்கும் வரிகள்... உன் உதடு பட்டுத்தான் இப்போதும் மலரும்.. எப்போதும் போல... நிறைய கேள்விகள்.. எனை சூழ்ந்து கொண்டு... . உனைப் பற்றியே கேட்பதை... நான் எப்படி சமாளிக்க... .அனாதையாய் விட்டு விட்ட நம் குறுஞ் செய்திகளை என்ன செய்யலாம்... . நீ அழைத்த போது நான் எடுக்காமல் விட்ட, நான் அழைத்த போது நீ தவற விட்ட அழைப்புகள்... அலையும் காற்றுக்கு... இப்போது நமக்குள் ஒன்றுமில்லை... என்பதை யார் உரைப்பது... . எப்போதும் போல நானே சொல்லி விடுகிறேன்... உன் ரகசிய பாஷை அதற்கு புரியாது... எனக்கு புரியவே அத்தனை காலம் ஆனது... புரிய... புரியவே... புரியாமலும் போனதில்.. புரியவே முடியாத புரிதலின்... புரிதல்... நீயாகவே இருந்து விட்டு போ... எனக்கு புரிந்து விட்டது... ... .

வலிக்கையில் உணர முடியும் உயிரைத்தான் மனதென்கிறோமா... ..வழுக்கி விட்ட உச்சி பாறையில்... தட்டுத் தடுமாறி நிற்கும் பாதங்கள்... நிலைத்து... முளைத்து பூவாகி விட்ட கற்பனையை.. காட்டாறு கொண்டு... கவிதை செய்தே மூழ்கடித்தது... .. நியாயம் தான்... நியாயங்களில்... முத்தங்கள் ஏது.. மிச்சங்கள் என்ன... மாய யதார்த்தத்தில் முயல் தேசங்கள் காலச் சுவடுகள்... ... எல்லா வரிகளும் மறந்து விட்ட அல்லது மறக்க வைத்த கைவிடப் பட்ட நூலகத்தின் கடைசி புத்தகம் போல... மௌனிக்கிறேன்... இழுத்து பூட்டி விட்டு போன கைகளின் ஓசைகள்... . இன்னமும்... வளையல் உடைக்கின்றன... வந்தாய் அமர்ந்தாய்... . பறந்தாய்... மெல்லிய பாதங்களில் உந்தித் தள்ளியதிலேயே என் மரம் வேரோடு சாய்ந்து விட்டதாக என் காதுக்குள் ரகசியிக்கிறது... . உன் மௌனம்... ... மீண்டும் துளிர் விடும் என்பது என் காலக் கதை... அது வரை கீழே கிடக்கும் என்... . முகம் பட்ட அழுகைக்குள்... உன் நிற மழை... . மிதக்கிறது... .

கடந்து போன எல்லாமும்... அப்படியே... . அது இன்னும் தீரா நதி செய்ய... இதயம் பிசைந்து ரத்தம் கேட்பதில்தான்... . கிடந்தது தவிக்கிறது... எல்லாமும் தாண்டிய கடக்க இருக்கும் ஒன்று... எங்கிருந்து வந்தாய்... பெண்ணே... என் இலையுதிர் காடுகளை பூக்க வைத்தாய்... பின்... காக்க வைத்தாய்... . இப்போது மீண்டும்... உதிர வைக்கிறாய்... .சொல்லுக்கும்... சொல்லுக்கும்... இடைவெளி தராத நீ தான்... இடைவெளியையே நிரந்தரமாக்கியிருக்கிறாய்... இனம் புரியாத அழுகையை சுமந்து கொண்டு திரியும்... ... தாய்ப்பறவையை போல.. அல்லாடுகிறேன்... . காணும் மரத்திலெல்லாம்... ... உன் கிளைகள்... இலைகளாய் உதிர்வதைத் தவிர யாதுமறியா மொழிக் குளறுபடிக்குள் ஒரு சிறகை நானே வெட்டிக் கொண்டு... நொண்டுவது போல... . என் யோசனை... ...

தனியாய் வருவேன் என்று தானே சொன்னாய்... . பனி செய்து... உறைய வைத்து சுத்தியல் கொண்டு உடைத்து போகவா தூரதேசத்தையும் அழைத்து வந்தாய்... .அறிந்தும் புரியாத அர்த்தங்களின் சூது செய்யும் முரண்பட்டு சித்திரமாக நான் இருப்பினும்.. உனக்காகத்தானே சுவர் வரைந்தேன்... எனக்காக செய்த எல்லாமும்... எனக்கே இருக்கட்டும்... . அதை உனக்கு தர உத்தேசமில்லை... இப்போதும் நீ எனை நினைத்துக் கொண்டுதானிருப்பாய்... என்பது கவிதைக்கான சாத்தியம்... வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறவே முடியாத காதலையே நாம் கொண்டோம்... . கொண்டவைகளில்... கண்டவைகள்... நம் அவைகள்... .நம்மோடே முடிந்து போகட்டும்... நம் குழந்தையாக... . அது பிறக்காமலே மடிந்தும் போகட்டும்...

சாத்தியக் கூறுகளின் சகிப்புத்தன்மையோடு ... சறுக்கி விழுந்து விட்ட... பார்வைகளின் இடையே... நான் வெற்று சிராய்ப்பு என்று நகர்ந்து விடுவதில் உனக்கு ஆனந்தமெனில் அதையும் செய்கிறேன். என்று, நீ சொல்லி... தாண்டி இருக்கிறது... என் சாரல்... .அல்லது என்று, நீ அடைத்து, வர மறுத்திருக்கிறது என் ஜன்னல்... ... தொடர் கதையை உன் வசமாகி எனைக் குறுங்கதை எழுத வைத்த வாக்கிய அமைப்பில்... நமக்கான ரகசிய புன்னகையை இனி ஒரு போதும் உதிர்த்து விடாதே... . அது தொடர்கதையின் தடுமாற்றம்... ..காவியம் பாட... கதாபாத்திரங்கள் போதும்... அது நினைவுகளைக் கொண்ட நிழற்படங்கள்... சேமித்துக் கொண்ட மூளையின் சிறுமடிப்பில் உன் பெயரை என்ன சொல்லி அழிக்க?... தாங்குமா... .மடிப்பின் தாகம்... ஏங்கித் தவிக்கும், சிறு போதைக் கவசத்தில், புத்தனின்... பசியாக.. நெளிந்து கொண்டே இருக்குமே... . உன் நினைவு... . 

தனியாக புலம்புவதில்... கவிதை சாகிறது... என் கனவும் செத்ததைப் போல... உனைக் காணாத தேசம் வேண்டி சிறு பிள்ளை போல.. கை கால் உதறி.. கதறும்... ஏசுவுக்கு இடப்பக்கம் தொங்கிய சிலுவைக்குள் நானாகவே ஏறி நின்று கொண்டேன்... என்னைப் போல ஒரு திருடன் காண்பதுண்டோ... . அல்லது திருடக் கொடுத்த உனைப் போல... . பெரும் மனதுக்காரியின் வரங்கள்... ஞாபகமோ... .? இதே போல் ஒரு மழை காலத்தில் தானே.. உன் காட்டுக்குள் எனை நடக்க விட்டாய்... . சாரலும்... தூரலும்... காற்றும்... தனிமையும்.. ஈரம் சுமந்து..எனை சிலிர்க்க உன் ஒற்றையடிக்குள் நான் சுற்றித் திரிய நீயே வழி காட்டிப் போனாய்... காட்டுக்குள் நம் குடிசை... பெரும்பாலும் அலைபேசியாகவே இருந்தது... குடிசை முழுக்க ஜன்னல்கள் கொண்ட நம் இரவுகளை... நீயே முடித்து வைப்பாய்...

இதோ அடுத்த மழையும் வந்து விட்ட நினைவில்... காணாமல் போன நீ திரும்பிய அவசரத்தில் காடு அழித்து பெரும் வீடு கட்டிக் கொண்டு... .. ஜன்னல் அடைத்து... ... 'சீ... .போ... ' என்று என் மழையையும் சேர்த்தே விரட்டுகிறாய்... ... .!

கோபங்கள் இல்லை... . வஞ்சங்கள் இல்லை... . வருத்தங்கள் கூட இல்லை... . என்ன செய்து தொலைக்க... .. காதல் மட்டும் கூடிக் கொண்டே போவதை... முத்தம் கொண்ட நினைவுகளோடு, நான் தொலையத்தான் வேண்டும்... தொலைதலின் கூட்டுக்குள் உன் சூடு என்னோடுதான் இருக்கும்... . அது, நீ தந்தது... .. நீ எடுத்துக் கொள்வதாக இருந்தால்... . அப்போதும் என் கூடு கலைய சம்மதமே... .அடுத்த கதையில் உன் கதாபாத்திரத்தை எப்படியாவது,... . மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு... . அல்லது கல்லையே மனதாக்கிக் கொண்டு.. கொன்று விடுகிறேன்... ..அது உனக்கான ஆசுவாசமாக இருந்தால்... அதில்தான் என் சுவாசம்... . பீறிடும்... ... உன் வாசம் வாழ்ந்திடும்... எனக்குள்... அதுதான் பொக்கிஷம்... .

நிஜம் வேறாய் இருக்கையில் என் வேரின் நடுக்கம் வீண்... . அது அறுபட்டு போகட்டும்.. ஆத்திரக் கார... அழுகையின் மிச்சமென.. அது தன்னை அடைத்துக் கொள்ளட்டும்... .. சுவடுகளை சேகரிக்கவாவது தனக்குள்ளாகவே உன்னை வைத்துக் கொள்ளட்டும்.. முடியாத பக்கத்திலும்... திருப்ப வேண்டாத கட்டுப்பாட்டு காகிதம்... என் மூளையின் பரணில் இருந்து விட்டு போகட்டும்.. மனதுக்குள் போராடுவதைப் போல... கதை சொல்லிகள்... வெளியே இருப்பதில்லை..அவர்கள்... . சிரித்துக் கொண்டும்... வாழ்த்திக் கொண்டும்.. கடந்து விடுவார்கள்.. நானும் ஒரு கதை சொல்லியே.. என் கதைகள் உன்னிடம் ஏராளம் இருக்கிறது... .உனக்கான கதைகளும்..என்னிடம் ஏராளம்... வாழ்வின் சூட்சுமத்தில்.. பெருங்காற்று ஒளித்தல் என... உன் கூட்டுக்குள் எப்படியோ வந்து விட்ட நான் இனியும் கூட்டை சுற்றிக் கொண்டே இருப்பது சரி அல்ல.. என் வெளியும்.. அதுவல்ல... . நான் பறவைக்கு சொந்தக்காரன்... . நிரந்தரமில்லாத நித்தியங்கள் இங்கு சூழ்ந்து இருக்க... நான் சென்றுவிடவே வந்தவன்... உன் பயணங்களில்... பூந்தோட்டம் வைத்து விட்ட என் பாதங்கள் இனி ஒரு போதும்.. திரும்பாது... ..

இந்தக் கடிதம் சொல்ல முடியாத வார்த்தைகளை உன்னிடமே விட்டு விட்டேன்... நீ படித்தாலும் சரி... கிழித்தாலும் சரி... . யாரும் அறியா நம் மழைக்குள் பதித்துக் கொண்டாலும் சரி... உன் தீர்த்தங்களின் திரை எனை விட்டு விலகுகிறது... .. நான் உன்னில் தங்கிய பறவை... என்பது மட்டும்... . எங்கேயாவது பதிந்திருந்தால் போதும்... அது உன் மனமாக இருப்பின், என் சிறகசைப்பு இன்னும் தூரமாகும்... ..

கண்ணீர் தேசம் தாண்ட வேண்டிய மனதுக்குள் ஒரு முறை... ஒரே முறை உன் பெயர் உச்சரித்துக் கொள்கிறேன்... .

- கவிஜி 

Pin It