ஓயாது ஓலமிட்டுக் கொண்டுள்ளது
காற்று
இப் பூத உடம்பினுள்.

ஒரு மீப்பெரு முயற்சியில்
இக்கூட்டிற்குள்
அடைபட்டுக் கிடக்கும் காற்றை
முழுமையாய் வெளித்தள்ள
எத்தனிக்கும் அவ்வேளையில்தான்
காற்று நிரப்பித் தரவென
பலூனைக் கையளிக்கிறாள்
பாப்பா.

இப்போது
பிரபஞ்சக் காற்று முழுவதையும்
உள்ளிழுத்துக் கிடக்கிறேன்
ஒரு இராட்சத பலூனாய்
அவள் கைகளில்.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It