lady 600

வேரோடு பெயர்த்து
வேறிடம் நட்டீர்கள்.
முளைத்து வருவேன்
எனும் நம்பிக்கையில்!

வீட்டிற்கு வரும்போதெல்லாம்
காதிற்குள் கிசுகிசுத்தாள் அம்மா!
"புது இடம் " பழகிக்கொள்
பதட்டமடையாதே என்று!

விழித்தும்
விட்டம் வெறித்து படுத்திருப்பது
வழக்கம்தான்..
ஆனால்
விழித்ததும் விரைகிறேன்
அடுக்களை நோக்கி!

தேநீர் மணம்
நாசி நுழைந்து எழுப்பிய
நாட்களைக் கடந்து
தேநீரோடு
எழுப்புகிறேன் என்னவரை!

முதல் நாள் மழையைப்
பிடித்து வைத்த மரத்திடம்
கைகுலுக்கி விடைபெறும்
சோம்பல்
இப்போது இல்லையம்மா!
அடித்து பொரண்டு ஓடுகிறேன்
துவைத்த துணிகள்
மீண்டும் நனையாதிருக்க!

இரவில் படித்து முடித்திடாது
முனை மடித்த புத்தகம்
விடியலில் உயிர்பெறும்!
இப்போதெல்லாம்
நாலு வரி வாசிப்பதற்குள்
நாற்பது முறையாவது எழுகிறேன்!

"கடல்புரத்தில்" படித்து
பிலோமியையும் ரஞ்சியையும்
பேசியதுவும்..
"சந்திரகிரி ஆற்றங்கரையில்"
படித்து "நாதிராவுக்காக"
அழுததுவும்..
"கண் தெரியாத இசைஞன்"
படித்து சிலேகித்ததுவும்
எல்லாம்
புரட்டி போட்டாற் போலிருக்கிறது..
நாளிதழில் வருகிற
உணவுக்குறிப்பை..
மருத்துவக் குறிப்பை
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

நான் தானா?
நானே தானா?
முளைத்துவிட்டேன் நான்..
முற்றிலும் புதுமையாய்..
நட்ட சூழலுக்கேற்றாற் போல
நான் வாழ!

Pin It