மார்ச் - 8 உலக மகளிர் நாளையயாட்டி, வழக். அருள்மொழி அவர்கள் நம்முடைய கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்கு வழங்கிய நேர்காணல். தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தன்னுடைய வாழ்க்கை நெறியாகவும், சமூகம் சார்ந்து தான் முன்எடுக்கின்ற செயல்பாடுகளின் அடித்தளமாகவும் கொண்டு இயங்கி வருபவர். திராவிடர் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மகளிர் நாள், பெண்ணியம், அரசியலில் பெண்கள் என அவர் முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு, ஆணித்தரமாக அவர் பதிலளித்தார்.

நேர்காணல்: இரா.உமா

மகளிர் நாள் குறித்த தங்களின் கருத்து என்ன? மகளிர் நாள் கொண்டாட்டங்கள் எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

arulmozhiஎனக்குத் தெரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்புவரை உழைக்கும் மகளிர் நாள் என்று மிக எழுச்சியாக  மார்ச் - 8 அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டு வந்தது. ஊடகங்கள் இதைக் கையில் எடுத்த பிறகு, விளம்பரத்திற்கானதாக, லிப்ஸ்டிக், பவுடர் பெண்களாகக் காட்டுகின்ற போக்கு வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதாக இந்த நாள் சுருங்கிப் போய்விட்டது. எதற்காக இதை உழைக்கும் மகளிர் நாள் என்று குறிப்பாகச் சொல்கிறோம், இந்த நாளில் என்ன நடந்தது, எதற்காக இந்த நாளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கான சரியான வரலாற்று நிகழ்வுகளை முறையாக எடுத்து வைக்க வேண்டும்.  பெண்களுக்கு எதிரானவர்களோடு போராடிக்கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால், இதுபோன்ற கொண்டாட்டக்காரர்களுடன் இன்னொரு விதத்தில் போராட வேண்டியிருக்கிறது.

ஊடகங்களில் நம்முடைய கருத்துகளை பதிவு செய்தாலும், அதிலுள்ள மென்மையான பகுதிகளை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு தனியார் அமைப்பு மகளிர் நாளுக்குக் கொடுத்திருந்த தலைப்பு பெண்மை!. இதேபோல் ஒரு தொலைக்காட்சியில் மெல்லினம் என்ற பெயரில் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் என்னை அழைத்திருந்தார்கள். பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் என்றாலே இப்படித்தான் பெயர் வைக்க வேண்டுமா என்ற கேள்வி நமக்குள் இருந்தாலும், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, விழாக்களுக்கு அழைக்கப்படும்போது அதைப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். காரணம் இதுபோன்ற முரண்பாடுகளுக்கு நடுவில் பயணம் செய்துதான் நம்முடைய  கருத்துகளைப் பெண்களிடம் விதைக்க வேண்டியிருக்கிறது. எப்படியாவது பெண்களைக் கூட்டம் கூட்டமாகப் பார்த்து, அவர்களைக் கருத்துகளால் தொட்டுவிட வேண்டும் என்பதுதானே நம்முடைய நோக்கம்.  எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிட இந்தக் கருத்துகள் ஒரு நாளுக்கு மட்டும் பேசப்பட வேண்டியவை அல்ல. நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்த வேண்டியவை என்ற சிந்தனைக்குப் பெண்கள் வரவேண்டும்.

இப்போது ஆண்களும் மகளிர் நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, கொண்டாடுவது பற்றிச் சொல்லுங்கள்.

ஆண்கள் மகளிர் நாள் கொண்டாடுவதால் மட்டும் பெரிய மாற்றங்கள் வந்துவிடும் என்று சொல்லவதற்கில்லை. ஆனாலும் ஆண்களில் சிலர் இந்த மாற்றங்களை வரவேற்கின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே ஆண்கள் இதைச் செய்து என்ன ஆகிவிடப்போகிறது என்று ஒதுக்கிவிடாமல், பெண்களும் அதை வரவேற்க வேண்டும். ஆண்களையும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொண்டால் ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வழி ஏற்படும்.

70 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இயக்கங்களில் பங்குகொண்டு, வீதிகளில் வந்து சமூக சீர்திருத்தத்திற்கான போராட்டங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அளவிற்கு இன்று பெண்கள்  வெளிவரவில்லையே, காரணம் என்ன?

இந்திய சுந்திரப் போராட்டத்திற்காக காங்கிரஸ், சமூக சீர்திருத்தத்திற்காக சுயமரியாதை இயக்கம் போன்ற இயக்கங்கள் அன்று பெண்கள் பங்கேற்ற இயக்கங்களாக இருந்தன. போராடுவதற்கான தேவை பெண்களுக்கு நிறைய இருந்தது. 1960 களுக்குப் பிறகு போராட்டத் தலைமுறையிலிருந்து பயன்பெறுகின்ற  தலைமுறைக்கு மாறியிருக்கிறோம். எந்த ஒரு போராட்டத்தின் விளைபொருளையும் அனுபவிக்கின்ற தலைமுறை அதற்கான போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளவில்லை. நாமும் சமூக நீதிக்காக நடந்த அந்தப் போராட்டங்களை நம்முடைய குழந்தைகளுக்குச் சரியாக எடுத்துச் சொல்கிறோமா என்பது ஒரு கேள்வி.

இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்கும் பிள்ளைகள், இந்த வாய்ப்பு நமக்கு எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ளக்கூட முயற்சி செய்வதில்லை. இன்னும் சொன்னால் விரும்புவதுகூட இல்லை. அப்படித்தான் பெண்களும் இருக்கின்றனர். உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த நாம், இன்று வெளிஉலகோடு தொடர்பு கொண்டு இயங்க முடிந்திருக்கிதே, இது எப்படி சாத்தியமாயிற்று, இதற்கு யார் காரணமாக இருந்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பதே இல்லை. பெண்களின் வாழ்க்கையில் கல்வி, பொருளாதாரம் போன்ற பலதுறைகளில்  மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் அவர்களின் சமூக வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.

கல்வி மேலே போகப்போக, மூட நம்பிக்கைகளும், சாஸ்திரங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றி வாழ்வதுதான் சமூக மரியாதை என்ற போலிக் கருத்தாக்கத்திற்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். சமூக சீர்திருத்தம் பேசுவது என்பதை பொதுவான வாழ்க்கை நீரோட்டத்திற்குப் பொருந்தாத  ஒன்று என்பதாகப்     பார்க்கின்றனர். ஒரு வித மந்தைப் மனப்பான்மை அவர்களிடத்திலே உருவாகியிருக்கிறது. கூட்டத்தோடு பால்குடம் எடுத்துப்போனால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆனால் ஒரு கொள்கை சார்ந்த வாழ்க்கைக்குள் வந்துவிட்டால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.  சுயமரியாதை வாழ்வுதான் சுகவாழ்வு. ஆனால் அதற்குக் கொஞ்சம் அதிகமாகப் போராடவேண்டும் என்பதால் எண்ணிக்கையில் குறைவாகவே வெளிவருகிறார்கள். இதைச் சரி செய்வதற்கு நம்முடைய பிரச்சார உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பிரச்சார உத்திகளைக் கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மேடை நாடகங்கள், சொற்பொழிவுகள், துண்டுப் பிரசுரங்கள் என்று பழைய உத்திகளை மேற்கொள்கின்ற அதே நேரத்தில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவோயிஸ்டுகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதும், அவர்களின் கொள்கைகள், செய்திகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களிடம் சென்று சேர்கின்றன. அவர்களுடையது ஆயுதப் புரட்சி என்றாலும், நம்முடைய கருத்துப் பரப்பல்களுக்கு அதை எடுத்துக்கொள்வது தவறில்லை. அதே போல அழிவு சக்திகளான மதவாதக் கூட்டங்களின் பிரச்சாரங்களும் உடனுக்குடன் மக்களைச் சென்றடைகின்றன. அவை தன்னுடைய வி­க் கருத்துகளை மக்களோடு மக்களாகக் கலந்திருந்து விதைத்துவிடுகின்றன. பலர் முழுநேர ஊழியர்களாக தீவிரமான செயல்திட்டங்களுடன், பயிற்சிகளுடன் களப் பணியாற்றி வருகின்றனர். நமக்கு நேர்எதிராக இருந்தாலும், மக்களைச் சுரண்டுகின்ற பெருமுதலாளிகள், அடிப்படைவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற அழிவு சக்திகளிடமிருந்து இந்தப் பிரச்சார உத்திகளை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதை இன்னும் வலிமையாக மாற்றிப் பயன்படுத்த வேண்டும். எதிரியின் ஆயுதத்தைப் போலவே, ஆனால் அதைவிட வலிமையான ஆயுதத்துடன் களத்தில் நின்றால்தான் நம்முடைய கொள்கைகளை, கருத்துகளை மக்களிடம் ஆழமாக விதைக்க முடியும். நான் சார்ந்துள்ள திராவிடர் கழகம் இத்தகைய முயற்சிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

அரசியலில் பெண்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

அரசியல் இயக்கங்களில் பெண்களின் செயல்பாடு அவர்களுக்குப் பயன்படுவதாக இல்லை. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்கள் அரசியலில் இருந்தாலும், பெண்கள் சமூகத்திற்கு அதனால் கிடைத்திருக்கின்ற பலாபலன்கள் என்ன என்ற கேள்வி நம்மிடம் மிஞ்சி இருக்கிறது. அரசியலில் குடும்பப் பின்னணி, அதிகார வட்டத்தின் தொடர்புகள் உள்ள ஒரு சிலர் அரசியலில் சுடர் விடுவதைப் பார்க்க முடிகிறது. மற்றபடி பொதுவாகப் பெண்களுக்கு, தன்னுடைய கட்சியைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமையை குடும்பம் இன்னும் அளிக்கவில்லை. பெண்களும், திருமணத்திற்கு முன் அப்பாவுக்குப் பிடித்த கட்சி, திருமணத்திற்குப் பின் கணவன் கைகாட்டுகின்ற கட்சி என்று இருந்து விடுகின்றனர். பெண்களுக்கென்று ஒரு அரசியல், பெண்களுக்கான அரசியல் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்வேன்.

ஒரே கருத்தைப் பெண் சொல்லும்போது வேறு மாதிரியாகவும், ஒர் ஆண் சொல்லும்போது வேறு மாதிரியாகவும் இங்கு பார்க்கப்படுவது ஏன்?

இதைப் பெண்ணை வீழ்த்துகின்ற ஆயுதமாகப் பலகாலமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அந்தநிலை மாறியிருக்கிறது. கருத்து ரீதியாகப் போராடுகின்ற பெண்கள் இதையயல்லாம் பொருட்படுத்துவதில்லை. என்னுடைய கருத்தைச் சொல்வது என்னுடைய உரிமை. அதற்காக என்னைப்பற்றி உனக்கு அறிவிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையை ஆதரித்து ஒரு பெண் பேசினால், உடனே அதை அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கின்ற மனக்குழப்பம் இங்கு இருக்கிறது.   ஆஸ்திரேலியாவில் இருந்து என்னைப் பார்க்க வந்த ஒரு பெண்ணிடம், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டேன். காரணம் அவர் அதுதொடர்பான அமைப்பில் இருக்கிறார். அவர் என்னை விநோதமாகப் பார்த்துக்கொண்டே, அதைப்பற்றிக் கருத்து வைத்துக்கொள்ள நான் யார்? அதைப்பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அது அவர்களின் பாலியல் விருப்பம். மற்றவர்களுக்கு அதைப்பற்றிய ஆராய்ச்சி தேவையற்றது.

நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை. சமூகம் அவர்களின் இயல்பான வாழ்க்கைத் தேவையை அநீதிக்குள்ளாக்குவதை நான் எதிர்க்கிறேன் என்று சொன்னபோது, இடைவெளி புரிந்தது.  சுஜாதா மார்பகங்களை வர்ணித்து எழுதிய போது வராத எதிர்ச்சொற்கள், சிவசங்கரி எழுதிய போது வந்து விழுந்தன. பெண்ணின் உடற்கூறுகளை முன்னிலைப்படுத்தி எழுதுகின்ற பெண் கவிஞர்களுக்கு விடுக்கப்படுகின்ற மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் சமூகத்தின் சமமற்ற தன்மையைத்தான் காட்டுகின்றன. சமூக மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கின்ற அதே நேரத்தில், இந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்திடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் முன்னேறுவதற்கு இவையயல்லாம் தடைகளாக இருக்கின்ற என்று எவற்றைச் சொல்வீர்கள்?

குடும்ப அமைப்பு, சமூகத்தில் பெண்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ள இறுக்கமான மனநிலை இவைதான் முதன்மைக் காரணங்கள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டுத்தான், தன்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான செயல்களில் பெண்ணால் ஈடுபட முடிகிறது. ஆயிரம் இருந்தாலும் நீ ஒரு பெண் என்ற வேதாந்தம் ஒரு பக்கம். நாட்டுக்குத்தான் ராணியப்பா, வீட்டுக்கு அவ மனைவியப்பா என்ற ஆணாதிக்கச் சிந்தனைகள். இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை, வயதாகிவிட்டால் யார் கட்டிக்கொள்வார்கள் என்ற கேள்விகளை இருப்பு வைத்துக்கொண்டு பெண்கள் மீது வீசுவது போன்ற பொதுபுத்தியில் புகுத்தப்பட்டுள்ள விசக்கருத்துகள்தான் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருக்கின்றன.

பெருநகரங்களில் பெண்ணியம் பேசுகின்றவர்களின் மொழி சாதாரண பெண்களுக்குப் புரியாததாக இருக்கிறது. அது கிராமப்புறப் பெண்களைச் சென்றடைகிறதா? அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

எப்போதும் என்னைப் பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்வதைவிட, பெரியாரியல்வாதி என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வேன். இப்போது பேசப்படுகின்ற பெண்ணியத்தின் அடிப்படையாகப் பெரியாரின் பெண்ணுரிமைக் கோட்பாடுகளே இருக்கின்றன. பல்வேறு நூல்களைப் படித்து, அனுபவப்பட்டுப் பேசுகின்றவர்களால் அப்படித்தான் பேசமுடியும். நான் திராவிட இயக்க மேடைகளில், பொதுமக்கள் மத்தியில் பேசத்தொடங்கினாலும், முதலில் மேடைப்பேச்சு வடிவில்தான் என்னுடைய பேச்சு இருந்தது. பிறகு பெரியாரின் கருத்துகளைப் படிக்கப் படிக்க, பலதரப்பட்ட மக்கள் மத்தியில் பேசத் தொடங்கியபோது பெரியாரிய மொழியாக, மக்கள் மொழியாக மாறிவிட்டது. அறிவு வட்டத்தில் இயங்குகின்ற பெண் கருத்தாளர்கள், உலக அளவிலான பெண்ணியக் கருத்துகளை நேரிலும், படித்தும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ள அந்த அறிவுப் பெண்களின் படிப்பும், விவாதங்களும்தான் பெரிதும் உதவுகின்றன. பெண்விடுதலைக்கான பல படிநிலைகளில், அறிவாளர்கள் வட்டம் என்பதும் மிக முக்கியமான ஒன்று. அவர்கள் சொல்கின்ற கருத்துகளைத்தான் என்னைப் போன்றவர்கள், எளிமைப்படுத்தி சாதாரண பெண்களிடமும் கொண்டு சேர்க்கிறோம்.

Pin It