அவனைக் காணவில்லை
கண்ணாமூச்சி விளையாட்டில்தான்
அவன் என்னை தொலைத்திருக்க வேண்டும்
காக்கா கடி கடித்த மிட்டாய்த் துகள்கள்
அப்பியிருந்த பாவாடையை
தூக்கிப் போட்டு விட்டார்கள்
பாவம் மரமேறி விளையாடிய போது
ஏற்பட்ட எலும்பு முறிவில்
இடைப்பட்ட ஒரு மாதத்தை போல்தான்
இவளுக்கு இதுவென நினைத்திருப்பான்
நானும் பாவம்தான்
கோலி கில்லி கபடியில்
சேர்த்துக் கொள்ளாமல் சண்டையிட்டதற்கு
பழிவாங்குவதாய் நினைத்து
அவனின் தவிப்பை அப்போது
குரூரமாக ரசித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறேன்
நங் நங்குனு கொட்டும் அவன்
கையைக் கடித்தது போல் அவ்வப்போது கனவு வரும்
காம்பஸில் விளையாடி
நானே குத்திக் கொண்டு
இரத்தம் வர
நீதான் டா குத்தினே என்று
சண்டை போட்டதுதான் கடைசி சண்டை
அழுமுஞ்சி கருப்பியெனும் பட்டப் பெயரை
இட்டவனே திருடிச் சென்று விட்டிருந்தான் அதே முட்டைக் கண்ணன்
கூட்டாஞ்சோறு பொங்கி
மணல் வீட்டில் கட்டிய
ஞாபக மாளிகையை மீட்க
தூரத்தின் விதி மாற்றிய பாதையில்
நானும் என் பால்ய தோழனும்
ஹார்மோன் விளையாட்டால்
அவன் ஆணாக மாறி என்னைத் தொலைத்து
அவனை தேடிக் கொண்டிருந்தான்
நான் பெண்ணாக மாறி
என்னைத் தொலைத்து அவனையும் தொலைத்து விட்டேன்
கண்ணாமூச்சி விளையாட்டில்
தொலைந்தவள் திரும்பவே முடியாது
இதே போல அவனும் தேடி எழுதிக் கொண்டுதானிருப்பான்
அவளைக் காணவில்லையென

- சீதா

Pin It