புதிதாய் உதித்த முதலிகள் சந்தையில்
அதிக நேர்த்திப் பொருட்களைக் குறைந்த
விலையில் கொடுத்து நன்முகம் காட்ட
நிலையிலா சந்தையின் முதலாம் நெருக்கடி
தோன்றிய காலை முதலிகள் தாமே
ஈன்ற வினைஞரின் வேலையைப் பறித்து
வாங்கும் திறனை அழித்தது முதலாய்
ஆங்கே வெடிக்கும் நெருக்கடி யாவிலும்
மாட்டுவது வினைஞரே என்பது யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது; பொய்யாகாதே!

((தொழிற் புரட்சியின் மூலம்) புதிதாக உதித்த முதலாளி வர்க்கம், சந்தையில் அதிக நேர்த்தியான பொருட்களைக் குறைந்த விலையில் கொடுத்து (முதலாளித்துவத்தின் சிறப்பு இது என்று கூறித் தங்களை நல்லவர்கள் என்றும் வல்லவர்கள் என்றும்) நன்முகத்தைக் காட்டி நின்றது. (ஆனால்) நிலையற்ற சந்தையில் முதல் நெருக்கடி தோன்றிய போது, முதலாளிகள் தங்களாலேயே உருவாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் வேலையைப் பறித்து அவர்களுடைய வாங்கும் சக்தியை அழித்தது முதற்கொண்டு, ஆங்கே வெடிக்கும் எல்லா நெருக்கடிகளின் போதும் தொழிலாளர்கள் தான் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு (சந்தை விதிகளால் தவிர்க்க முடியாதபடி வெடிக்கும் நெருக்கடிகளின் போது) தொழிலாளர்களே பாதிக்கப்படுவது என்பது யானைக் கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம், அதனை விட்டு ஒரு நாளும் தவறாதது போல உறுதியானதாகும்.)

- இராமியா

Pin It