இருவரில் ஒருவருக்குத்தான்
விடுதலை கிடைக்கும் என்று
அந்தக் காவலாளி தணிந்த குரலில்
அந்த அதிபரிடம் ரகசியமாகக் கூறினான்.
தனி அறையில் அவனுடன்
அவனைப் போல இருந்த
ஒருவனையும் அடைத்திருந்தார்கள்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு
அவனைப் போல இருந்தவன்
ஆம் இல்லை என்று
அதற்குறிய கட்டத்தில் குறியிட்டு
இறுதியாகக் கையொப்பமும் இட்டு
அவனிடம் நீட்டி மெலிதாகச் சிரித்தான்.
அவனைப் போல இருந்தவன்
பல கொலைகளுக்கும்
பல கற்பழிப்புகளுக்கும்
பலரைத் தூண்டியவனாகவும்
இன ஒழிப்பிற்குக் காரணமான
இரக்கமற்ற சர்வாதியாகவும்
சந்தர்ப்பவாதியாகவும் இருந்தான் என்று
படிவத்திலிருந்து அறித்து கொண்ட அவன்..
காவலன் கூறிய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு
இடுப்பில் மறைத்து வைத்திருந்த
குத்துவாளை எடுத்து
அவனைப்போல இருந்தவனை
கொன்று தீர்த்தான்.
அடுத்த நாள் வெளிவந்த செய்தி.
இரக்கமே இல்லாத ஒரு அதிபர்
தன் மக்களுக்குச் செய்த
துரோகத்தை ஒப்புக்கொண்டு
தனிமைச் சிறையில் தற்கொலை
செய்து கொண்டார் என்பதே

Pin It