நம் நாட்டில் தொழிலாளர் பிரச்சினையானது மற்ற மேல் நாட்டுத் தொழிலாளர் பிரச்சினைபோல் இல்லாமல் மிகச் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது. இந்தியா பூராவிலுமே தொழிலாளர் பிரச்சினை என்றால் யந்திரஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களுக்கும் ஒரு முதலாளியின் கீழ் கும்பலாக கூலிக்கு வேலை செய்பவர்களுக்கும் சம்பந்தப்பட்டவைகளாக மாத்திரம் கருதப்படுகின்றனவே ஒழிய, கைத் தொழில் செய்யும் சுதந்திரத் தொழிலாளரையும் அவ்வப்போது செய்கூலி பேசிக் கொண்டு சாமான்கள் பணிகள் செய்யும் தொழிலாளிகளையும் அன்றன்றைய பணியாளாக இருந்து வேலை செய்யும் நித்திய கூலிகளையும் பற்றிய பிரச்சினைகளைக் கவனிக்க எவ்வித பொது ஸ்தாபனமும் இல்லை. இதனாலேயே நம் நாட்டு வேலைப்பாடான தொழில் திறங்களும் கைத்தொழிலாளிகள் நிலைமைகளும் மிக்க சீர்கேடான நிலைமைக்கு வந்துவிட்டன.
உதாரணமாக, நெசவு முதலான கைத்தொழிலாளிகளின் நிலைமை மிக மிக மோசமாகிக் கொண்டே வருகிறது. அது போலவே கொல்லு, தச்சு முதலிய உலோக மர முதலான தொழிலாளர்கள் நிலைமையும் சீர்கேடாகி வருகின்றன. மில் கூலித் தொழிலாளியும், பெரும் ஸ்தாபனத்தில் வேலை செய்யும் தொழிலாளியும் தவிர மற்ற தொழிலாளிகள் நம் நாட்டில் பெரிதும் ஜாதியின் பேரால் தொழிலாளிகளாய் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக சங்கம் வைத்து தங்கள் முன்னேற்றங்களுக்குப் பாடுபடுவது என்றால் பெரும்பாலும் சமுதாயத்தில் தங்கள் தங்கள் ஜாதி என்பதை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறார்களே ஒழிய, தொழிலில் மேம்பாடு அடைவதைப்பற்றியோ பொருளாதாரத்தில் உயர்நிலை அடைவதைப் பற்றியோ கவலை கொள்ளுவது மிகச் சிலவேயாக இருக்கின்றன.
இந்தச் கஷ்டம் ஒழிய வேண்டும்
ஏனெனில், இந்நாட்டில் கைத்தொழிலாளிகள் எல்லாம் சமய ஆதாரங்களின் பேரால் சமுதாயத்தில் கீழ் ஜாதியாராகவே கருதும்படியாக கற்பிக்கப்பட்டுவிட்டார்கள். ஆதலால், உண்மையும் மேன்மையுமான கைத்தொழிலாளிகள் பொருளாதாரத் தொழில் திற முன்னேற்றத்தைவிடத் தங்கள் ஜாதியை உயர்த்திக் கொள்வதிலேயே ஈடுபட வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். மில் யந்திரத் தொழிலாளிகள், பெரிய ஸ்தாபனத் தொழிலாளிகள் ஆகியவர்களுக்கு ஜாதி இல்லை; யார் வேண்டுமானாலும் அவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆகையால், அவர்கள் பொருளாதாரத்தையும் வாழ்க்கை சவுகரியத்தையும் மாத்திரமே கவனிக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
மேல் நாடுகளில் தொழில்களுக்கு ஜாதிப் பாகுபாடு இல்லையானதால் அதில் வர்க்கத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதாரத்துக்கும் வாழ்க்கை நலத்திற்கும் பாடுபடுகிறார்கள். இந்தக் கஷ்டம் ஒழிந்தால்தான் நம் நாட்டிலும் கைத்தொழிலாளிகள் நிலை சீர்பட முடியும்.
வரப்போகும் ஆபத்து
ஜாதிப்பாகுபாட்டை அஸ்திவாரமாகக் கொண்ட கைத்தொழிலாளிகளுக்கு மற்றொரு ஆபத்து வரயிருக்கிறது. என்னவென்றால், இன்றுள்ள பெரும்பாலான கைத் தொழில்கள் வெகு சீக்கிரத்தில், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குள் யந்திரத்தின்மூலம் சாதிக்கக்கூடிய தொழில்களாக ஆகிவிடுமென்பது எனது அபிப்பிராயம். அந்தப்படி தானாகவே ஆகாவிட்டாலும் முயற்சி செய்தாவது ஆக்கப்பட வேண்டிவரும் என்பது எனது ஆசையுமாகும். இப்படி ஆவதானது மனித சமூகத்தின் முற்போக்கைக் காட்டுவதாகும். இம்மாதிரி ஆவதற்கு முயற்சி செய்வது மனித சமூக ஜீவகாருண்யத்திற்குப் பாடுபடுவதுமாகும். ஏனெனில், இந்த 20ஆவது நூற்றாண்டில் உலகம் எவ்வளவோ அற்புதத்தைக் கண்டுபிடித்து ஆனந்த வாழ்க்கை வாழ முன்னேறிக் கொண்டிருக்கிற காலையில், நம் நாட்டு மக்கள் 100-க்கு 90 பேர் அன்றாட வயிற்றுப் பாட்டுக்குப் பகல் முழுவதும் சரீரத்தில் பலர் வெய்யிலிலும் நெருப்பு முன்னும் இருந்தும் யந்திரம்போல் சரீரப் பாடுபடுவதென்றால் இது இன்னும் காட்டுமிராண்டி வயதைத்தான் காட்டுவதாகும். ஆதலால், இவை மாறும்படியான சமயம் வந்தால் இந்த ஜாதி கைத்தொழிலாளிகளின் நிலை மிகக் கஷ்டமானதாக ஆகிவிடும்.
வார்தா திட்டம் வெற்றி பெறாது
காங்கிரசின் வார்தா திட்டக் கல்வி என்பது இப்படிப்பட்ட ஒரு மாறுதல், அதாவது யந்திர உலகம் ஏற்படாமல் தடுத்து உடல் உழைப்புத் தொழிலாளர்களை ஜாதிப் பிரிவினைப்படி நிலைநிறுத்தி வர்ணாச்சிரம தர்மத்தைப் புதுப்பித்துக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற உள் கருத்தைக் கொண்டிருப்பதால், இக்கல்வி ஒரு நாளும் வெற்றி பெறாது என்பதுடன் இது இயற்கைக்கு முரணானதுமாகும். ஏனெனில், உலக முற்போக்கு இந்தியாவை மாத்திரம் கல் ஆயுத காலத்திற்குத் தள்ளிவிட்டுக் கொண்டிருக்காது. ஆதலால், ஒவ்வொருவகைத் தொழிலாளி வர்க்கமும் ஒன்று சேர்ந்து ஜாதியையும், வகுப்பையும் மறந்து ஒரே வர்க்கத் தொழிலாளராக ஆகி யந்திர உலகத்திற்குத் தயாராய் இருக்க வேண்டும்.
ஜஸ்டிஸ் கட்சி அக்காரியத்திற்குப் பாடுபடுவதுடன் அதன் மூலம் அந்தந்த வர்க்கத் தொழிலாளிகளுக்கும் பூரணப் பாதுகாப்பளிக்கும். எப்படியெனில், யந்திரங்களின் மூலம் தனிப்பட்ட நபர்கள் தொழிலாளிகளைவிட அதிக லாபம் சம்பாதிக்க வகையில்லாமல் செய்து விட்டால் தொழிலாளிகளுக்குக் கஷ்டமே வராது. அந்தப்படி ஜஸ்டிஸ் கட்சியால்தான் செய்ய முடியுமே தவிர காங்கிரசுக் கட்சியால் முடியாது என்று தயங்காமல் சொல்வேன்.
காங்கிரசின் முக்கிய லட்சியம்
ஏனெனில், காங்கிரசின் முக்கிய லட்சியம் நான் மேலே குறிப்பிட்டபடி வர்ணாச்சிரம உலகத்தைச் சிருஷ்டிப்பதேயாகும். ஆதலால் காங்கிரசுக்கு முதலாளியும், தொழிலாளியும் இருந்தாக வேண்டும். அன்றியும், காங்கிரசின் மூலம் தொழிலாளிகளுக்கு உண்மைப் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் முடியாத காரியமாகும். கிடைத்துவிட்டால் தொழிலாளிகள் முதலாளிகளையும் சோம்பேறி வாழ்வுக்காரர்களையும் மிஞ்சிவிட முயற்சிப்பார்கள் என்பது காங்கிரசுக்குத் தெரியும். உதாரணம் வேண்டுமானால் கூறுகிறேன். சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது தொழிலாளிகளுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டு திட்டம் எழுதிக் கொடுத்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாராகும். சைமன் கமிஷனும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு பிரதிநிதித்துவம் கொடுக்கச் சிபார்சு செய்தது. 1935ஆ-ம் வருஷம் சீர்திருத்தத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால், அந்தப் பிரதிநிதித்துவம் பெரிதும் ஜாதியிலோ தொழிலிலோ தொழிலாளி அல்லாதவர்களுக்கும் உடலுழைப்பு என்பதே பரம்பரையில்கூட இல்லாதவர்களுக்கும்தான். அதாவது, பார்ப்பனர்கள்தான் அதிகமாய்க் கைப்பற்றிக் கொண்டதோடு சென்னைக் காங்கிரஸ் ஆட்சி அரசாங்கத்தில் தொழில் இலாகா மந்திரியும் ஒரு பார்ப்பனராகத்தான் இருக்க முடிந்தது. இதுதான் உடலுழைப்புக் கூலித் தொழிலாளருக்கும் ஜாதித் தொழிலாளருக்கும் காங்கிரசால் ஏற்பட்ட நன்மையாகும்.
ஜஸ்டிஸ் கட்சியால் அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஜஸ்டிஸ் கட்சியானது ஜாதி பேதமற்ற சமரசக் கட்சியானாலும் அது ஏற்படும்வரை ஜாதிகளின் நியாயமான, உணர்ச்சியான, பாதிக்கத்தக்க எந்தக் காரியத்தையும் எந்த ஒரு ஜாதியினது சுயநலத்திற்காகவும் ஒருக்காலும் செய்யாது. தொழில் முறைகளில் உண்மைத் தொழிலாளரையே கவனிக்கும். காங்கிரஸ் ஒரு நாளும் அப்படி இருக்க முடியாது. ஒரு ஜாதியின் மேன்மைக்காக மற்றொரு ஜாதியை இழிவுபடுத்தவோ, குறைவுபடுத்தவோ, பலி கொடுக்கவோ சற்றும் அது பின்வாங்குவதில்லை.
ஒன்று சேர வேண்டும்
கைத் தொழில்களும், தொழிலாளர் சமூகங்களும் முன்னேற்றமடைந்து வாழ்வில் பெருக்கமடைய வேண்டுமானால் கைத்தொழில் துறையை சர்க்கார் கைப்பற்றியாக வேண்டும். காங்கிரஸ் ஒரு நாளும் அப்படிச் செய்யாது. ஏனெனில், அந்த மாதிரி செய்தால் காங்கிரசின் வர்ணாச்சிரமக் கொள்கை பாழ்பட்டுப் போகும். ஆதலால் காங்கிரசரசானது தெழிலாளர் சமூகம் என்று ஒன்று இருக்கப் பாடுபடுவதுடன் அச்சமூகம் என்றும் அன்றாடப் பிழைப்புக்குத் திண்டாடும்படியாகவேதான் வைத்திருக்க முயற்சிக்கும்.
மற்றப்படி காங்கிரசானது தொழிலாளர்களுக்கோ தங்கள் சமூகத்திற்கோ இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்பதையும் வார்தா கல்வித் திட்டம் தொழிலாளர் முன்னேற்றத்தைத் தடுக்கும் சூழ்ச்சி என்பதையும் தங்கள் சமூகம் அறிந்து கொண்டதாக தாங்களே எழுதி இருப்பதைக் காண நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆகவே, நம் மாகாணத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர் ஒழிந்த மற்ற சமூகத்தார்கள் எல்லாம் சகலவிதத் தொழிலாளர் உட்பட ஒன்று சேர வேண்டும் என்பதும் ஒன்று சேருவதோடு மட்டுமல்லாமல் ஒற்றுமைப்பட்டு மனித சமூக முன்னேற்றத்திற்கே பெரும் பீடையாய் இருக்கும் காங்கிரசைப் பலமாக எதிர்த்து ஒழிக்கச் செய்ய வேண்டும் என்பதும்தான் நான் தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொல்லும் யோசனையாகும். இதுதான் இப்போது நம் மக்களுக்கிருக்கும் முதலாவதும் முக்கியமானதுமான வேலை என்று கருதுகிறேன்.
இதற்காகவே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தத் தனிப்பட்ட ஜாதி வகுப்பாருடைய சுயநல நன்மைக்கும் இல்லாமல் இம்மாகாண எல்லா வகுப்பு மக்களுக்கும் சமநீதி வழங்கும் நோக்கத்தோடு இருந்து வேலை செய்து வருகிறது. ஆதலால், தாங்களும் தங்கள் சமூகமும் சமூக ஸ்தாபனமும் இவைகளை நன்றாய் ஆலோசித்து நீதிக்கட்சியை ஆதரிக்க முன்வர வேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
கடைசியாக எனது பொது வேண்டுகோள் ஒன்றுண்டு. அதாவது, தாங்கள் எக்கட்சியை ஆதரிப்பதானாலும் தங்கள் சங்கம் குறைந்தது ஒரு லட்சம் மக்களையாவது அங்கத்தினர்களாகக் கொள்ள வேண்டும். போதுமான பெருநிதி சேர்க்கப்பட வேண்டும். நல்லதொரு பத்திரிகை இருக்க வேண்டும். அய்க்கிய நாணய சங்கமூலம் தொழிலுக்குச் சலுகை பெற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறுவர் சிறுமியர் எல்லோரும் கட்டாயமாய்ப் படிக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தொழிலில் தேக சிரமம் குறையும்படியாக யந்திர சௌகரியம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சமூக ஒற்றுமையும், ஸ்தாபனக் கட்டுப்பாடும், தலைவர்களுக்கு அடங்கி நடத்தலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகள் சரிவர செய்யப்படுமானால் தங்கள் சமூகம் சர்க்காராலும் மற்ற பொதுநல ஸ்தாபனங்களாலும் நன்கு மதிக்கப்படும் என்பதோடு இந்த வலுவைக் கொண்டு இந்த நாட்டில் எப்படிப்பட்ட பொதுநல ஸ்தாபனத்தையும் தங்கள் சமூகமே நடத்தும்படியான தலைமையைக்கூடப் பெறலாம்.
மற்றும் உங்கள் மாநாடுகளில் கதரையும் வார்தா திட்டத்தையும் எதிர்ப்பதையும் முக்கியத் தீர்மானமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவை தொழில் முன்னேற்றத்தையும் பொருளாதார, முன்னேற்றத்தையும் தடைப்படுத்துவனவாகும். மற்றும் பல விஷயங்களைப்பற்றி நாம் நேரில் பேசி இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தங்கள் அன்புள்ள ஆளான ஈ.வெ. ராமசாமி, "குடிஅரசு" - 18.02.1940
--அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா