முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பைக் கட்டி வலுப்படுத்துவீர்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறைகூவல், ஏப்ரல் 2, 2017 தொழிலாளர் தோழர்களே,

13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த கொடூரமான அநியாயத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் பெருகி வருகின்ற சூழ்நிலையில் நாம் இந்த ஆண்டின் மே தினத்தை நெருங்கி வருகிறோம். மாருதி தொழிலாளர்கள் செய்த ஒரே குற்றம் என்னவென்றால் அவர்கள் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காக திரண்டெழுந்ததும், ஒரு போராட்ட தொழிற் சங்கத்தை அமைக்க முன்வந்ததும் ஆகும்.

குர்காவூனில் உள்ள அமர்வு நீதிமன்றம் மார்ச் 18 அன்று இந்தக் கொடூரமான தீர்ப்பை வழங்கியதிலிருந்து அதற்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் எங்கும் பெருகி வருகின்றன. வீரத் தியாகிகள் பகத் சிங், சுக்தேவ், இராஜ்குரு ஆகியோரின் நினைவு நாளாகிய மார்ச் 23 அன்று குர்காவூன்-மானேசர்-பாவால் தொழிற் கூடத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குர்காவூன் தொழிற் சங்க கவுன்சில் என்ற பெயரில் ஒரு பேரணியை நடத்தினர். நீதிமன்றத் தீர்ப்பு மாற்றப்படும் வரையிலும், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு வைக்கும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்வதென எல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உறுதி கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, நாடெங்கிலும் தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை ஏப்ரல் 5 அன்று நடத்துவதென மத்திய தொழிற் சங்க கூட்டமைப்புக்கள் இணைந்து முடிவு செய்திருக்கின்றன.

மாருதி தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஒட்டுமொத்தத் தொழிலாளி வகுப்பின் மீதும் நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். இது, மிகப் பெரிய இந்திய மற்றும் அன்னிய முதலாளித்துவ ஏகபோகங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகும். “உங்களுடைய உரிமைகளுக்காக முன்வந்துப் போராடினால், இது தான் உங்களுக்கும் நேரும்” என எல்லா தொழிலாளர்களிடையே அச்சத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு கொடுத்துவரும் பதில், தொழிலாளி வகுப்பு தன்னுடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியாக இருக்கிறது என்பதையும், முதலாளி வகுப்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அது ஓதுங்க தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் குர்காவூனிலும், பல இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடெங்கிலும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய ஒன்றுபட்ட குரல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. எல்லாத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும், எல்லா மாருதி தொழிலாளர்களையும் வேலைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் கோரி வருகின்றனர்.

தோழர்களே,

இந்தியத் தொழிலாளி வகுப்பின் போராட்டம், மனிதாபிமானமற்ற முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். தொழிலாளி வகுப்பு மற்றும் மக்களுடைய போராட்டங்களின் எண்ணிக்கையும் அளவும் அண்மை ஆண்டுகளில் நமது நாட்டிலும், உலக அளவிலும் கண்கூடாக அதிகரித்திருக்கிறது. ஏகபோக முதலாளித்துவப் பேராசையை நிறைவு செய்வதற்காக தொழிலாளர்களுடைய உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இறையாண்மை கொண்ட நாடுகளின் அரசாங்கங்களை முதலாளித்துவ பெரும் நிறுவனங்களுடைய கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யும் வணிக மற்றும் மூலதன ஒப்பந்தங்களுக்கு எதிராக பரந்துபட்ட எதிர்ப்பு இருந்து வருகிறது.

எதிரெதிரான நலன்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளுக்கிடையே ஒரு கடுமையான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கத்தில் ஏகபோகக் குடும்பங்கள் தலைமை தாங்கும் முதலாளித்துவ வகுப்பு இருக்கிறது. அவர்கள் அதிகமான இலாபத்தை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்களை பயங்கரமாக அச்சுறுத்தி, மேலும் மேலும் தீவிர சுரண்டலுக்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தொழிலாளி வகுப்பு நிற்கிறது. நாம் மனிதர்கள் என்பதாலும், பாடுபடும் உழவர்களோடு இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்ற காரணத்தாலும் நமக்கு உரிய உரிமைகளைத் தொழிலாளர்கள் நாம் கோருகிறோம்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய ஏகபோகங்கள், பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அறுதிப் பெரும்பான்மையோடு தில்லி பாராளுமன்றத்தில் திட்டமிட்டு அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களுடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோத, சமூக விரோத உலகமயம், தனியார்மயம், தாராளமயத் திட்டத்தை மேலும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஏகபோக முதலாளிகள் மோடி அரசாங்கத்திற்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்”, “இந்தியாவே துவங்கு”, “தொழில் செய்வதை எளிதாக்குவது” என்ற முழக்கங்களின் கீழ், தொழிலாளர்களுடைய உரிமைகளை இந்திய அரசாங்கம் காலில் போட்டு நசுக்கி வருகிறது.

கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக, தொழிற்சாலைகள் சட்டமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டமும் திருத்தப்பட்டு வருகிறது. இளம் தொழிலாளர்களை பயிற்சித் தொழிலாளர்களாக, துவக்கத் தொழிலாளர்களாகவும் வேலைக்கு எடுப்பதன் மூலம் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். ஆடைத் தொழில் துறையில் குறிப்பிட்ட கால ஒப்பந்தங்கள் வழக்கமாக ஆகிவருகிறது. இதன் மூலம், வேலைக்கு பாதுகாப்பை மறுக்கவும், வேலை நிரந்தரமற்ற நிலையைப் பயன்படுத்தி மேலும் கடுமையான சுரண்டலை ஒப்புக் கொள்ளுமாறு தொழிலாளர்களை நிர்பந்திக்கவும் செய்கிறார்கள்.

தோழர்களே,

சுரண்டலையும் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்தாமலும், எல்லா இடங்களிலும் சாவையும், அழிவையும் பரப்பாமலும் ஆளும் முதலாளித்துவ வகுப்பால் ஆட்சி நடத்த முடியாது. மாறி மாறி ஆட்சி நடத்திய முதலாளி வகுப்பின் போட்டிக் கட்சிகள், நாட்டைப் பாதுகாப்பது குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நமது உழைப்பைச் சுரண்டவும், உழவர்களைத் திருடவும், நமது இயற்கை வளங்களை அதிக அளவிற்குக் கொள்ளையடிக்கவும் ஏகாதிபத்தியர்களோடு கூட்டாகச் செயல்படுகிறார்கள். தொழிலாளர்களையும், மனித உரிமைகளைக் கோருபவர்களையும், சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தை எதிர்ப்பவர்களையும் “தேச விரோதிகளென” அவர்கள் முத்திரை குத்துகின்றனர்.

எல்லா சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களில், முதலாளி வகுப்பை அதிகாரத்திலிருந்து நீக்குவதன் மூலம் நமது சமுதாயத்தின் அழிவுப் போக்கை நிறுத்தி அதன் திசையை மாற்றக்கூடிய வலிமையும், திறனும் தொழிலாளி வகுப்பிற்கு இருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியை மாற்றி தொழிலாளர்கள் – உழவர்களுடைய ஆட்சியைக் கொண்டு வருவதற்கு போதுமான பலத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தோடும், குறிக்கோளோடும் நாம் நம்முடைய உடனடிப் போராட்டங்களை மேற் கொள்ள வேண்டும். தொழிலாளி வகுப்பின் அரசியல் ஒற்றுமையும், தொழிலாளி – உழவருடைய கூட்டணியை வலுப்படுத்துவதும் முன்னேறுவதற்கான பாதையாகும்.

நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசின் நீதிமன்றங்களை நாம் நம்பியிருக்க முடியாதென்பதை நமது வாழ்க்கை அனுபவம் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டியிருக்கிறது. தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயகத்தையோ, அதனுடைய அரசியல் வழிமுறையையோ நாம் சார்ந்து இருக்க முடியாது. அவையனைத்தும் முதலாளி வகுப்பின் சேவைக்கான நிறுவனங்களாகும். எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியல் அதிகாரத்தின் அங்கங்களாக ஆவதற்கு தயாரிப்பாக, நாம் நம்முடைய சொந்த ஐக்கியப் போராட்ட அமைப்புக்களைக் கட்டி வலுப்படுத்த வேண்டும்.

நம்மை எதிர் கொண்டுள்ள ஒரு முக்கியமான உடனடிக் கடமையானது, தொழிற்சாலைகளிலும், தொழிற் பேட்டைகளிலும் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டி அவற்றை வலுப்படுத்துவதாகும். அப்படிப்பட்டக் குழுக்கள் ஏற்கெனவே பல இடங்களில் உருவாகியிருக்கின்றன. தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெவ்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும் ஒன்றிணைந்து வருகிறார்கள். தொழிற் பேட்டைகளிலுள்ள எல்லாத் தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு, தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களும், அமைப்புக்களும் கூட்டுத் தலைமையை அளித்து வருகின்றன.

தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டுவதற்கும், அவற்றை வலுப்படுத்துவதற்கும் அடிப்படையானது, எல்லாத் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்து தொடர்ந்து போராட்டங்களை மேற் கொள்வதாகும். தொழிலாளர்கள் நமக்கு, மனிதர்களாகவும், தொழிலாளர்களாகவும் உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளில், மாண்புடைய மனித வாழ்க்கை, நாம் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைக்கும் உரிமை, 8 மணி நேர வரையறை கொண்ட வேலை நாளுக்கான உரிமை, ஓய்வு, பொழுதுபோக்கு, சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள் ஆகியன அடங்கும். இப்படிப்பட்ட உரிமைகளுக்கான அரசியல் சட்ட பூர்வ உத்திரவாதத்திற்கான கோரிக்கை, ஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பின் கோரிக்கைப் பட்டியலின் முன்னணியில் இடம்பெற வேண்டும்.

அரசை மாற்றியமைத்து, பொருளாதார அமைப்பைத் திருத்தியமைக்கும் இந்திய மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் கண்ணோட்டத்தோடு நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். சமூக உற்பத்தியின் நோக்கமானது, தற்போது நிறைவு செய்ய முடியாத ஏகபோக முதலாளிகளுடைய பேராசையை நிறைவேற்றுவதற்காக இல்லாமல், தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய வளர்ந்து வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை நம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு, முக்கிய சமூக உற்பத்திக் கருவிகளை தனிப்பட்டவர்களுடைய கைகளிலிருந்து பறித்து அவற்றை சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் எல்லா மனிதர்களுக்கும் உரிய எல்லா உரிமைகளுக்கும் அவற்றை மீறமுடியாத உத்திரவாதத்தை அளிக்கும் ஒரு புதிய அரசை நிறுவி, ஒரு புதிய அரசியல் சட்டத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாருங்கள், 2017 மேதினத்தை இந்தியத் தொழிலாளி வகுப்பின் இதுவரை என்றுமில்லாத பலத்தோடும், ஐக்கியத்தோடும் ஏற்பாடு செய்வோம். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உத்திரவாதத்தோடு அளிக்கக் கூடிய ஒரு புதிய இந்தியாவைக் கட்டும் நோக்கத்தோடு நாம் அணி திரள்வோம்.

Pin It