அவன் சாகடிக்கும் கலையை
அரசாங்கத்திடம் கற்க விரும்பினான்
அரசாங்கம் சொன்னது கொலை செய்வது என் தொழிலல்ல
நீ சட்டத்தைக் கேள் என்றது
சட்டம் நான் அமைதியை விரும்புகின்றேன்
என்னால் எப்படி கொலை செய்ய இயலும்
நீ நீதியைக் கேள் என்றது
எனக்கு மன்னிக்கும் அதிகாரமில்லை
சாகும் வரை தூக்கிலிடலாம்
என பரிந்துரைப்பது என் வேலை
கொலை செய்வதல்ல
காவல் துறையைக் கேள் என்றது
எங்கள் கைகளில் லத்திகள் இருக்கின்றன
அதற்குள்ளும் ஈரம் இருக்கிறது
நாங்கள் கொலையை விரும்புவதில்லை
குற்றவாளியென்று முடிவு செய்ய அதிகாரமில்லை
சிறையைக் கேள் என்றது
நாங்கள் கைதிகளை மனிதர்களாகப் பார்க்கின்றோம்
எங்களால் எப்படி கொல்லமுடியும்
தூக்கு மேடை சொன்னது
நான் யாரையும் வாவாவென்று அழைப்பதில்லை
யாரோ ஒருவன் அழைத்து வரப்படுகின்றான்
நாங்கள் வெறும் கதாபாத்திரங்களுக்குப்
பின்னால் நிற்கும் திரைகள்
கொலை செய்ய கற்றுக் கொள்வதில்லை என்றது
சிறையின் கதவுகளுக்குப் பின்னால்
எப்போதும் ஓர் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது
யார் கொலை செய்யப்போகிறார்கள்
அந்தக் கொலை எதை நிறுத்தப்போகிறது
கேள்விகள் நீதியின் வராந்தாவில்
நடந்துக்கொண்டிருக்கின்ற‌ன‌
அது இன்னும் திரும்பவில்லை.
திரும்பும் போது கொலையைக் கற்க ஆசைப்பட்டவன்
இந்தக் கவிதையிலிருந்து வெளியேறி விடுவான்.

- கோசின்ரா

Pin It