காலணிகளை கழற்றிவைத்துவிட்டு

கோவிலுக்குள் தெய்வமானவன்

திரும்பி வந்து அணிந்ததும்

மனிதனாகிப் போனான்!

------------------------------

கட்டை விரல் பகுதியில்

தேய்ந்தும்,

மற்ற விரல்கள் பகுதியில்

அச்சு பதிந்தும்,

உழைத்து நிறம் மங்கிய

அப்பாவின் காதி செருப்பால்

பக்கத்தில் பளபளக்கிறது

மகனின் ரீபோக்.

-------------------------------

ஒன்றில் சற்றே

வார் அறுந்த வுட்லாண்ட்ஸ்.

இன்னொரு காலில்

தையல்கள் சந்தித்த

ரப்பர் செருப்பு என

வறுமையிலும் சமத்துவத்தை

பறைசாற்றி அலைகிறான்

பேப்பர் பொறுக்கும் சிறுவன்.

------------------------------

இருச்சக்கர விபத்து,

கடற்கரை களிப்பு,

கலவர துப்பாக்கிச்சூடு,

ஜோடி மாறிடும்

திருமண வீடு,

தேய்ந்துவிட்ட அலட்சியம்...

என நிகழ்ந்த சம்பவத்தின்

மௌன சாட்சியாய் இருக்கிறது

ஒவ்வொரு ஒற்றை செருப்பும் !

---------------------------------

விசேஷ வீட்டின்

வரவேற்பறையில்...

நிறத்தில்,

தரத்தில்,

அளவில்,

சிதறிக் கிடந்த

காலணிகளுக்கு நடுவில்

அழகாய் சிரித்தது

மிக்கி மௌஸ்

படம் போட்ட

குழந்தையின் செருப்பு. 

- சஜயன்

 

Pin It