என் கனவுகளுக்கும்
நிறமிருப்பதாய்ச் சொன்னபோது
குறுக்கும் நெடுக்குமாய்
கல்லறைகள் எழும்பின  

கர்ப்பம் சுமக்க மட்டுமே
கனவுகள் என்றாகி
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டு
முக்கோடி வருடங்கள்
கடந்து வந்த சகோதரிகளுக்கு  

இரத்தமும் சதையுமாய்
உங்கள் குறைமாதத்துக்
குழந்தை போலாகாமல்
விதைத்தவர்கள் தோட்டத்திலேயே
நடக்க மறுத்தது
என் கனவுகளின் கால்கள்  

நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்
என்று ஆற்றாதவர்
அரிவாளோடும்
அவர்களுக்கேயான பகற்கனவோடும்...  

பயத்தின் சிரத்தைக்
கொய்து எடுத்த பின்
எனது கைவிலங்குகள்
உடைக்கப்பட்டன
சிறைக் கதவுகள்
திறக்கப்பட்டன  

ஒவ்வொரு விடியலிலும்
திணிக்கப்படும் கனவை
தின்று தணிக்கிறது
எனது விழி  

என் கனவின் நிறங்கள்
கோர்த்தெடுத்து
வானவில்லைத் தரையிறக்கிப்
பரந்து வாழப்
பாலம் கட்ட...
இதோ
எனது முதற் கல்.  

நான் இதுதான்
இப்படித்தான்
என்றால் மட்டுமே
சாத்தியமாகிறது. 

என் கனவு

- கவிதா நோர்வே

Pin It