உருளைக் கல்லு ருள்வதைக் கண்டு
அருமைச் சக்கரம் படைத்தாய் தோழா
கூர்முனைக் கோபுரம் கல்லணை சமைத்த
சீர்மிகு உழைப்பும் என்றும் உனதே
பாரினில் வர்க்கப் போரில் உந்தன்
நேரிய கொடையே மாற்றம் கொணர்ந்தது
உழைப்பும் போரும் உனதே யாயினும்
பிழையாய்ப் பயனும் பிறரை யடைந்ததே
ஆதலின் ஞானமும் உழைப்பும் கொடையும்
மேதகு சிறப்புக் கிலக்கணம் அல்ல
சுரண்டல் முறையை ஒழிப்பதி லேயே
மறையாது நிலைக்கும் உந்தன் சிறப்பு
 
(தோழா! உருளை வடிவமான கல் உருள்வதைக் கண்டு (மனித நாகரிகத்திற்கு அடிப்படையான) அருமையான சக்கரத்தை உருவாக்கினாய். கூர்முனைக் கோபுரம் (பிரமிட்), கல்லணை முதலிய பிரம்மாண்டமான படைப்புகளில் உள்ள சிறப்பான உழைப்பும் உன்னுடையதே. இவ்வுலகில் நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான வர்க்கப் போரில் உன்னுடைய பங்களிப்பால் தான் மாற்றம் நிகழ்ந்தது. ஆனாலும் இவற்றால் விழைந்த பயன்கள் அனைத்தும் உனக்குக் கிடைக்காமல் மற்றவர்களை அடைந்து விட்டன. ஆதலால் அறிவும், உழைப்பும், (மற்றவர்களுக்கு உதவும்) கொடைத் தன்மையும் மேன்மையான சிறப்பு நிலைப்பதற்கான வழிமுறை அல்ல. சுரண்டல் முறையை ஒழிப்பதில் தான் உன் சிறப்பு மறையாது நிலைத்து இருக்கும்.)

‍ - இராமியா

Pin It