இன்றிரவு பெய்யப்போகும் மழைக்காக
நான் காத்திருக்கிறேன்.
அது
தன் குளிர் கற்றைகளால்
என்னை வசப்படுத்தும்.
அது வராமலும் போகலாம்.
ஆனால்,
அந்த மழை
என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதாய்
உறுதியளித்திருக்கிறது.

அதன் வரவை உணர்கிறேன்.
நீண்டநாள் பிரிந்த காதலர்களைப் போல
ஆரத் தழுவிக்கொள்கிறோம்.
என்மீது படிந்திருந்த
கண்ணுக்குத் தெரிந்த
தெரியாத கறைகளை
இழுத்துப் போகிறது அது
ஒரு நத்தையைப் போல.
வெளிறிய என் ஆன்மா
செருப்பில்லாத கால்களுடன்
அலைகடலை நோக்கிப் பயணிக்கிறது.
கடற்கரையில்
ஆன்மாவின் கால்களைத் தழுவி
தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டது
கடல்.

- மனுஷி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It