1.மீள்வினை

ஒன்று தானாகவே நிகழ்ந்துவிடும்
என்பதால்
மௌனித்திருந்தேன்
அதை
எழுதிவைத்திருந்தேன்
ஒரு காகிதத்தில்

என் படுக்கையறைக்குள் என்னைத் தேடுவீர்கள்
அப்பொழுது
இந்தக் கடிதத்தால்
நீங்கள் இடறி விடக்கூடும்.

எழுத்துகளின் மீது இருக்கும்
பேப்பர் வெயிட்டின் அடிப்புற
வட்டத்தினுள்
விட்டுச்செல்கிறேன்
என் இடம்பெயர்தலின் வழிக்குறிப்பை

வெற்றுக்காகிதம் என
நீங்கள்
புறக்கணிக்கவும் நேரிடலாம்

உட்புறம் தாழிடப்பட்டிருக்கும் கதவுகளை
உடைத்துத் திறந்தபோது
தவறவிட்ட
உங்கள் கண்களை
முதலில்
தேடிக் கண்டடையுங்கள்.
.....
2.கருப்பு லேகியம்

எறும்புகள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன.
கரப்பான் பூச்சிகளின் காமம் எத்தகையது
குதிரைகள் என்றாலோ காமப் பேய்கள்
கார்த்திகை மாதங்கள்
நாய்களுக்கானவை
குரங்குகள்
சுய இன்பம் செய்யுமா

அந்தச் சுவரொட்டியில் தார் பூசியது யார்
நீலப்படத்தினை ஒளிப்பதிவு செய்கிறவன்
எவ்வாறு சமாளித்துக் கொள்கிறான்

ஒரு காலை மடித்தே வைத்திருக்கும்
சிலைகளுக்கு வலிப்பதே இல்லையோ
சாதா லேகியம் ரூ.500.
ஸ்பெஷல் எனில் ரூ.1000
சூப்பர் ஸ்பெஷல் ரூ.3000

என்ன வித்யாசங்கள் குறித்து
கவலைப்படுகிறாயா
யோசிக்கிறாயா

மௌனமாக இருப்பது
எதையோ கிளர்த்துகிறது
..................
3.மரணம்


தண்ணீர் வழிந்து நிரம்புகிறது
அந்தப் பாத்திரத்தில்

நதி ஒன்று 
தற்காலிகமாக உறைகிறது
அதன் தலை
வாசல்வரை நீள்கின்றது

முன்னறையில் தொலைக்காட்சி
ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.
.............................
4.புள்ளி

ஒரு வட்டம்
அதனுள் ஒரு சதுரம்
அதனுள் ஒரு சதுரம்
அதனுள் வட்டமில்லை
அதனுள் ஒரு சதுரம்
அதனுள் ஒரு வட்டம்
அதனுள் ஒரு வட்டம்
அதனுள் ஒரு சதுரம்
அதனுள்
முற்றுப்புள்ளி.
....................
5.அவள்

எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா

சைக்கிளுக்குப் பின் சீட்டிலேயோ
மாவரைக்கும் இயந்திரத்தின் முன்னமர்ந்தோ
தூணுக்குப் பின்னால் நின்றுகொண்டோ
தண்ணீர் குடத்தினைத் தலையிலும்
கையிலும் தாங்கி நடக்கையிலோ

பொது இடத்தில்
அடிவாங்கிய கன்னத்து அழுகையை
துடைக்கும் பொழுதோ

எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா

ஒடிசலான தேகமுடைய ஒருத்தியின்
குரலில் ஒலிக்கக் கூடிய
மேற்சுரம் ஒன்றினை
...........
6.கடவுச் சொல்

குருதிக்குழாய்களை
அறுத்தெறிவது நல்லது
எனச் சொல்லிச் சென்றாய்.

ஏதோ அதனொரு வழியில்தான்
உன் பற்றிய
எல்லாவற்றையும்
சேமித்து வைத்திருக்கிறென்
என ஐயங்கொள்கிறாய்

நினைத்த மாத்திரத்தில்
மனதை இயக்க
வழியின்றித் திகைக்கிறாய்

துயில் மயக்க நோயிரவில்
கடவுச் சொல்லை
மறந்துவிட்ட பிறகு
...................
7.சொல் மறதி

எதைப் பற்றியது
அதைப் பற்றியதாக இருக்கக்கூடும்
யோசனைகள் ஒவ்வொன்றாய்
இயலாமை பயமுறுத்துகிறது
ஒவ்வொன்றாய்த்தான் துவங்கிற்று.
ஒரு மூட்டையாக மாறி
நிறைந்து கிடந்த அறை முழுக்க
தேடிக் களைத்தேன்
காணாமல்போன சொற்களை.

நன்றி:. உயிர் எழுத்து ஏப்ரல் 2011

Pin It