இந்தியாவில் 2001 முதல் 2007 வரையில் நடைபெற்ற 4,845 மதக்கலவரங்களில் மட்டும் 1,947 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 16,792 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதக்கலவரம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், இத்தகைய இந்து பயங்கரவாதத் தாக்குதல்களில் சிறுபான்மை மதங்களில் உள்ள மேல்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை; அங்கும் மசூதி மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அதற்கடுத்த நிலையில் குடிசைகள் தான் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்து மதத்தின் சாதி தீண்டாமைக் கொடுமைகளை சுமக்கும் தலித்துகள், அடங்க மறுத்து ஆர்த்தெழும்போதெல்லாம் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இம்மதத்தை மறுதலித்து, சமத்துவத்தைத் தேடி பிற மதங்களைத் தழுவினாலும் ‘வேற்று மதத்தவன்’ என்று அங்கும் தலித்துகள் தான் கொல்லப்படுகின்றனர்.

தலித்துகள் வேறு என்னதான் செய்வது என்ற கேள்வியே நம்முன் மீண்டும் மீண்டும் எழுகிறது. “நீங்கள் எவ்வித பலமுமின்றி, உங்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்க்கவே முடியாது. வன்கொடுமைகளை எதிர்க்க உங்களிடம் போதிய பலம் இல்லை. வன்கொடுமைகளை முறியடிக்க, வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெற்றாக வேண்டும். வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளாமல் வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளாமல் -வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெறவே முடியாது'' என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர்.

படிநிலைப்படுத்தப்பட்ட இந்து சமூக அமைப்பில் நீடித்திருக்கும்வரை, தலித்துகள் பலம் பெற துளியளவும் வாய்ப்பில்லை. அதனால் தான் 25 சதவிகிதம் இருக்கும் தலித் மற்றும் பழங்குடியினர், அவர்களைப் போலவே வன்முறைகளுக்கு ஆட்படும் 15 சதவிகித (முஸ்லிம், கிறித்துவ, பவுத்த, சீக்கிய) மத சிறுபான்மையினருடன் இணைந்தாக வேண்டிய ஒரு தேவை எழுகிறது. அதற்கான வாய்ப்புகள் இரு தரப்பிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கு, வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இந்த 40 சதவிகித மக்கள் -இந்துக்கள் அல்லர் என்ற பேருண்மையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து சமூக அமைப்பின் கடைநிலையில் ‘சூத்திரர்'கள் என இழிவுபடுத்தப்பட்டு, முதல் மூன்று வர்ணத்தினருக்கும் உடலுழைப்பை மட்டுமே நல்க நிர்பந்திக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகளை தாக்கும் ஏவல் படையினராகப் பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும், தலித்துகள் நாள்தோறும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது, அவர்களுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் கொதித்தெழுவதில்லை என்பதும் கசப்பான உண்மையாகவே இருக்கிறது. இன்றளவும் இத்தகைய வேதனைகளையும், தாங்கொணா வலிகளையும் சுமந்து கொண்டுதான் -இந்து பயங்கரத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடனேயே தலித் மற்றும் பழங்குடியினருடன் -சிறுபான்மையினரும் -பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று இடையறாது குரல் கொடுக்கிறோம். ‘இந்து -முஸ்லிம் ஒற்றுமை’ என்று சொல்லப்படும் கண்துடைப்பு நாடகமல்ல, நாம் முன்வைக்கும் செயல்திட்டம்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் மதக் கலவரங்களைப் பட்டியலிட்டு, அதன் கொடூரங்களை உணர்வு ரீதியாக வெளிப்படுத்துவது மட்டுமே நம் பணியாக இருக்க முடியாது. வருமுன் காப்பதே ‘இந்துத்துவ’ செயல்திட்டங்களை தவிடுபொடியாக்கும். தீர்வுகளை நோக்கி நாம் தீவிரமாக செயல்பட்டாக வேண்டும். அதற்கு கருத்தியல் ரீதியான புரிந்துணர்வே அடிப்படை. இந்து மதம் நீடித்திருக்கும் வரை, அதன் வெளிப்பாடுகளான ஜாதி -மத வெறியை கட்டுப்படுத்திவிட முடியாது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தீர்வுகள், தேர்தல் ஈவுகளை மட்டுமே இலக்காகக் கொண்டவை. ஆக, இந்து பயங்கரத்தை வேரறுக்க, ஆழ்ந்த புரிதலுடன் கூடிய அம்பேத்கரிய -பெரியாரிய செயல்திட்டமே இன்றைய முதன்மைத் தேவை.

தமிழ்ச் சூழலில், சச்சார் குழு பரிந்துரைகள் பற்றிய முதல் அட்டைப்படக் கட்டுரையை ‘தலித் முரசு' (டிசம்பர், 2006) வெளியிட்டது. இந்நூற்றாண்டின் மிகக் கொடூரமான குஜராத் இனப்படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகளின் வாக்குமூலங்களை, நாம் தனி நூலாகவே (‘குஜராத் 2002 இனப்படுகொலை' -‘தெகல்கா' புலனாய்வு முழு தொகுப்பு ; தமிழில் அ. முத்துக்கிருஷ்ணன்; சனவரி 2008) வெளியிட்டோம். அந்த வகையில், இனி மதக் கலவரங்கள் நடைபெறாமலிருக்கவும், ஒரிசா இன்னொரு ‘குஜராத்'தாக மாறுவதைத் தடுக்கவும்; குறிப்பாக தமிழ் மண்ணில் இந்து வெறி நஞ்சூட்டப்பட்டு வருவதை முறியடிக்கவுமே தலித் முரசின் ஓர் இதழை (மதவெறி: விதை விழுந்தது முதல் வேர் பிடித்தது வரை -ராம் புனியானி) அர்ப்பணித்திருக்கிறோம்.
Pin It