பம்பாய், ஜனவரி 17, 1947

"சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக இந்துக்கள் இழைக்கும் கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை "ஐ.நா.சபையில் சமர்ப்பிக்க வேண்டுமென அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கட்டமைப்பினுடைய செயற் குழு இன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. கூட்டமைப்பின் தலைவர் திரு. என்.சிவராஜ் தலைமையில் இரண்டு நாட்கள் நடை பெற்ற குழுக்கூட்டம் முடிவடைந்தது.

ஐ.நா.சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்காக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தயாரித்த அறிக்கையை குழு ஏற்றுக்கொண்டது. மேலும் ஐ.நா.சபை செயலாளரிடம் இந்தப் பிரச்சினையைச் சம்பிரதாயமாகச் சமர்ப்பிப்பதற்கு வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கும்படியும் இதற்காக பேரமைப்பின் ஒரு தூதுக்குழுவை ஏற்பாடு செய்யும்படியும் தலைவரைக் கேட்டுக் கொண்டது.

அறிக்கையில் பிற குற்றச்சாட்டுக்களுடன்கூட, "இந்துக்கள் செய்யும் கொடுமைகளாலும், கூச்ச நாச்சமின்றி அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் வன்முறைகளாலும், தாழ்த்தப்பட்ட இன மக்களின் நிலை, தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலையைவிட மிக மோசமாக இருக்கிறது" என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. "தாழ்த்தப் பட்ட இன மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் ஆங்கில அரசு தவறிவிட்டது" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 'தேவையான சர்வதேச நடவடிக்கைக்காக தலையிடு மாறு ஐ.நா.சபையைக் கேட்டுக் கொள்கிறது.

ambedkar 2 350இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் எழும் பிரச்சினையைப் பொறுத்தவரை, ஒன்றுபட்ட இந்தியாவிற்காகவும் ஒரு வலுவான மத்திய அரசுக்காகவும் ''கூட்டமைப்பு நிற்கிறது என்ற மற்றொரு தீர்மானத்தை செயற்குழு அறிவித்தது. அத்தீர்மானத்தின்படி, "அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினைகளில் இணக்கமான தீர்வு காண்பதற்காகவும் அமைச்சரவையின் குழுக்கள் பற்றிய பிரேரேபணைகளை ஏற்றுக் கொள்ள கூட்டமைப்பு தயாராக இருக்கிறது'.

சமத்துவம் என்பதே அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும் 

சுதந்திரம், சமத்துவம் ஆகியவை எதிர்கால இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் அனைவரின் நியாயமான, இன்றியமையாத கோரிக்கைகளைக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது."

"இந்தியாவின் நலன் கருதி டொமினியன் அந்தஸ்தோடு அது திருப்தியடைய வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறும் உரிமைக்கு எவ்வித ஊறும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டொமினியன் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

சிறுபான்மையினர் குழுவிற்கு அறிக்கை 

அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தயாரித்த மற்றொரு அறிக்கையையும் செயற்குழு அங்கீகரித்தது. இந்த அறிக்கையானது, எதிர்கால இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பாதுகாப்புகள் பற்றி யோசனை கூறுகிறது.

"அரசியலமைப்பு ரீதியில் பாதுகாப்பிற்கான இறுதி ஒப்புதல் மத்திய அரசிடம்தான் இருக்க வேண்டும். சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய, தனித்தொகுதிதான் ஒரே வழி அது இல்லாமல் வேறு எந்த பாதுகாப்புகளும் காகித அளவிலான பாதுகாப்புகளாகவே நின்று போகும் என்பது நிச்சயம்" என்ற கருத்தை வலியுறுத்தும்படி அரசியல் நிர்ணய சபையிலுள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு செயற்குழு வழிகாட்டியது.

பம்பாய் நகராட்சிக் கழக உறுப்பினர் திரு.பி.ஜே.தியோருக்கர் மற்றும் ஆந்திராவிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு ஊழியர்களான திருவாளர்கள் ஹரி, டாக்டர் தர்மண்ணா ஆகியோரின் மறைவிற்கு குழு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

கூட்டமைப்பின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, பத்திரிகைகளுக்களித்த பேட்டியில் டாக்டர் அம்பேத்கர் விளக்கினார். தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் பிரச்சினையை விசாரிக்கும் சட்ட அதிகாரம் ஐ.நா.சபைக்கு இருப்பதைப் போலவே, இந்தியாவிலுள்ள எட்டுக் கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரச்சினையை விசாரிக்கும் அதிகார எல்லை ஐ.நா.விற்கு உண்டு என்பதை உறுதிபடக் கூறினார். அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களின் தலைவர் பால் துவாபாயிஸ் என்பவருடன் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் கூறினார். அவர் அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களின் பிரச்சினையை ஐ.நா.சபையில் சமர்ப்பித்திருப்பதாக டாக்டர் அம்பேத்கர் கூறினார். அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான பால் துவாபாயிஸ், அந்த நாட்டிலுள்ள நீக்ரோக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காகப் போராடி வருவதாக டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துயரங்களைக் குறிப்பிட்ட டாக்டர் அம்பேத்கர், அவர்களை அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களின் நிலைமையோடு ஒப்பிட்டார். ஜாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதைப்போல வெள்ளை அமெரிக்கர்களால் அவர்கள் கொடுமைப்படுத்தப் படுவதாகக் கூறினார்.

இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க டாக்டர் அம்பேத்கர், பிற கட்சிகளைச் சேர்ந்த சிறுபான்மையினரின் நலன்களையும், உணர்வுகளையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரைக் கொண்டு ஆட்சித்துறை அமைப்பதைத் தடுப்பதற்கான ஓர் அறிவார்ந்த திட்டம் வைத்திருப்பதாகக் கூறினார். அந்தத் திட்டம் பற்றிய விரிவான விளக்கங்களை வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், இன்றைக்கு உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு கட்சியைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், ஒரு மாகாணத்தின் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள் என்றும், அதன் மூலம் சிறுபான்மை இனத்தவர் மீது மிகக் கொடிய அடக்கு முறைகளைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் சொன்னார். ஒரு மாகாண அரசில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏகபோகமாய் ஆட்சித்துறையைக் கைப்பற்றுவதால், சிறுபான்மை இனத்தவருக்கு ஏற்படும் ஆதரவற்ற நிலையை எதிர்கால இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிலும், சட்டப்படியான ஏற்பாடுகள் செய்து தடுக்க வேண்டும். மத்தியிலும் பிற எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு அரசு அமைவதைத் தாம் விரும்புவதாகக் கூறினார்.

இன்றையச் சூழ்நிலையில் டொமினியன் அந்தஸ்தோடு இந்தியா திருப்தியடையவேண்டும் என்ற தன் கருத்தை டாக்டர் அம்பேத்கர் மீண்டும் வலியுறுத்தினார். "நாட்டின் தற்காப்பு என்ற கோணத்திலிருந்து மட்டுமே நான் இந்தியாவின் விடுதலைப் பிரச்சினையை அணுகுகிறேன். ஆனால் இப்போதைக்கு பிரிட்டனின் உதவியின்றித் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் முழு வலிமையுடன் இந்தியா இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். என்னுடைய திட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டால், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்துப் படையின் உதவி இந்தியாவிற்குக் கிடைக்கும் என்று அவர் முடித்தார்.

...

(ஜெய்பீம், தேதி 26 ஜனவரி 1947)

தொகுப்பு: முனைவர் எ.பாவலன்

Pin It