உலகமும் சரி வாழ்க்கையும் சரி பலருக்கும் புரியாத புதிர். சில விடயங்கள் ஏன் நடக்கிறது? எப்படி மாறுகிறது? என்று புரியாமல் பலரும் கடவுளின் காலடியில் சரணடைகிறார்கள். பலரும் இப்படிச் சரணடையக் காரணம் “எல்லாம் அவன் செயல்” என்று அது எளிதான தீர்வைத் தருவதும் கொடும் நோயினால் ஏற்படும் வலிக்கு வலிநிவாரணி போல உடனடியாக அதிலிருந்து விடுபட்டது போல ஒரு உணர்வைத் தருவதும்தான். ஆனால் அது ஒருபோதும் நோயைத் தீர்க்காது. அந்நோயைத் தீர்க்க வேண்டுமானால் ஒரு அறிவியல் பார்வையில் புரிந்து நோய் தீர்க்கும் மருந்தைக் கண்டறிய வேண்டும். அதுபோல வாழ்க்கை சார்ந்த பிரச்சனைகளையும் ஒரு அறிவியல் மூலம் ஆய்ந்து புரிந்து கொள்வதன் மூலமே தீர்க்க முடியும். நோய் தீர்க்கும் மருந்துக்கு இயற்கை அறிவியல் என்றால் வாழ்க்கை சார்ந்த தீர்வுக்கு சமூக அறிவியல். சமூக அறிவியலில் குறிப்பாக வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாத அறிவியல். காண்பதற்கு புரியாத கோட்பாட்டு சூத்திரமாகத் தோன்றும் இந்த அறிவியல் குறித்த ஒரு அறிமுகத்தை வழங்குவதே கட்டுரையின் நோக்கம்.
இருமைகளின் இயங்கியல் விதி இயங்கியலின்படி பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் மட்டுமல்ல மனிதரில் நல்லவர்-கெட்டவர், வாழ்க்கையில் வாழ்வு-சாவு, கணிதத்தில் கூட்டல்-கழித்தல், வேதியியலில் அணுக்களின் இணைவு-பிரிவு, அணுவுக்குள் நேர்-எதிர் மின்னூட்ட துகள்கள் என உலகிலுள்ள ஒவ்வொன்றிலும் இந்த எதிரெதிர்த் தன்மைகளைக் கொண்ட இருமைகள் கூட்டாக (unity of opposites) இருக்கின்றன. அதுவே முரண்பாடுகளின் விதி (Law of contradiction) ஆகும்.
இப்படி ஒவ்வொன்றிலும் இருக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய, ஒன்றை மற்றொன்று விலக்கக் கூடிய, ஒன்றுக்கொன்று நேரெதிரான, ஒன்று இல்லாமல் இன்னொன்று இருக்க முடியாத, அதேசமயம் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கவும் முடியாத இந்த இருமைகளே உலகிலுள்ளவற்றின் இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் காரணம் என்கிறது.
தத்துவார்த்தமான மொழியில் சற்று புரியாத ஒன்றாகத் தோற்றமளிக்கும் இதை நமது வாழ்க்கைக்குப் பொருத்தி பார்ப்போம்.
சற்று எண்ணிக் பாருங்கள். என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறோம் என்றாலும் அப்படிச் சாகாமல் வாழ்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறோம். வாழ்வில் எது எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையற்ற தன்மை நிலவினாலும் அப்படி நிகழாமல் வாழ்வை நிலைப்படுத்த இடையறாது முயற்சி செய்கிறோம். இப்படி வாழ்வு-சாவு, நிலைமை-நிலையின்மை ஆகிய இருமைகளுக்கு இடையிலான வாழ்க்கைப் போராட்டம்தானே நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
மனிதரிலும் வாழ்விலும் நிலவும் இருமைகள் தினமும் உண்பது, உழைப்பது, உறங்குவது என்பதில் உள்ள இயல்பான உயிர்களின் நடவடிக்கையின் சாரம் வாழ்வும் சாவும்தானே! வாழ்க்கையில் உள்ள எதிரெதிரான இந்த இருமையில் வாழ்வு இல்லாமல் சாவு இருக்க முடியுமா? நிலையின்மை இல்லாமல் நிலையானது இருக்க முடியுமா? வாழ்வும் சாவும் ஒன்றாக இருக்க முடியுமா? அதேசமயம் இரண்டும் தொடர்பற்றது என்றுதான் சொல்லமுடியுமா? எனவே வாழ்க்கையில் மட்டுமல்ல உலகிலுள்ள ஒவ்வொன்றிலும் எதிரெதிரான தன்மைகளைக் கொண்ட இருமைகள் கூட்டாக இருக்கின்றது. அதுதான் அவற்றின் இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது. இதைப்போல ஒவ்வொன்றின் சாரத்திலும் (essence) இருக்கும் எதிரெதிரான இருமைகளின் கூட்டை ஆய்ந்தறிவதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் (dialectical materialism).
இதன்படி எல்லா மனிதர்களும் பொருள்களும் முரண்பட்ட இருமைகளினால் ஆனது. அந்த இருமைக்குள் நடக்கும் போராட்டம்தான் அவற்றை இயக்குகிறது. என்றால், எல்லா பொருள்களும் மனிதர்களும் ஒன்று என்றாகிறதே! உண்மையில் நாம் ஒன்றுபோல இருப்பதில்லையே! வேறுபடுகிறோமே! என்று கேட்கலாம். இதற்கான பதில் எல்லோரும் முரண்பட்ட இருமைகளினாலானவர்கள் என்ற பொது்ப் பண்பைப் (universal) பெற்று மனிதர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் நமக்குள் நிலவும் பண்புநலன்களைப் பொறுத்து நல்லவர்-கெட்டவர், தன்னலவாதி-பொதுநலவாதி, படித்தவர்-படிக்காதவர் என்ற குறிப்பான (particular) தன்மையால் அறியப் பெறுகிறோம் என்று விரித்துரைக்கிறது முரண்பாட்டு அறிவியல்.
மனிதர்களைப் போல அணுக்கள் அனைத்தும் பொதுவான நேர்-எதிர் மின்னூட்டத் துகள்களினால் ஆனது என்ற பொதுவான தன்மையைப் பெற்று இருந்தாலும் அதன் எண்ணிக்கையைப் பொறுத்தும் அதனால் மாறுபடும் அவற்றின் பண்புகளைப் பொறுத்தும் உலோகம், அலோகம், திட, வாயுப் பொருள்கள் என குறிப்பாக அறியப்படுகிறது. எனவே ஒவ்வொன்றும் முரண்பட்ட இருமைகளினால் ஆனது என்ற பொதுமைக்குள் ஒரு குறிப்பான தன்மை இருக்கிறது. அதுதான் ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரித்துக் காட்டுகிறது.
இதனடிப்படையில் பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வு-சாவு, நிலைமை-நிலையாமை, நல்லவர்-கெட்டவர், தன்னலவாதி-பொதுநலவாதி என பல முரணான இருமைகள் இயங்குகின்றன என்றாகிறதே! எனில் ஒன்றை அல்லது ஒருவரை எப்படிக் குறிப்பாக வேறுபடுத்தி அடையாளம் காண்பது அல்லது காட்டுகிறது? ஒருவருக்குள் இயங்கும் பல முரண்களில் எந்த முரண் முதன்மையாக (principle contradiction) அவரிடம் வெளிப்படுகிறதோ அதனடிப்படையிலேயே அதன்பால் அவர் அறியப்படுகிறார். அதிலும் முதன்மை முரணுக்குள் இருக்கும் இருமையில் (two aspects) எந்தப் பண்பு அவரிடம் ஆதிக்கம் செலுத்துகிறதோ (principle aspect) அதுவே அவரின் பண்பாகிறது.
தீர்மானகரமான அகநிலையும் சூழலின் பங்கும் உதாரணமாக நல்லவர்-கெட்டவர் என்ற முதன்மையான முரணில் உள்ள இரண்டு கூறுகளில் நல்லது ஆதிக்கம் செலுத்தினால் நல்லவர் என்றும் கெட்டது ஆதிக்கம் செலுத்தினால் கெட்டவர் என்றும் அறியப்படுகிறார். என்றால், அது எப்போதும் மாறாததா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. நல்லவர் கெட்டவர் ஆவதும் கெட்டவர் நல்லவர் ஆவதும் நம் கண்முன்னால் நடக்கும் ஒன்றுதானே! எனவே அது எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியது. எனவேதான் எவரையும் எப்போதும் நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நாம் பார்ப்பது கிடையாது. அவரிடம் வெளிப்படும் எண்ணம் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே அவரை அவ்வப்போது அதன்பொருட்டு அடையாளம் காண்கிறோம்.
அப்படி ஒருவரிடம் மாறுபடும் பண்பும் இயக்கமும் மாற்றமும் அவரை மட்டுமே சார்ந்ததா? என்றால் நிச்சயமாக இல்லை. அது அவர் வாழும் சூழலையும் பொறுத்தது. ஆனால் ஒரே சூழலில் வாழும் ஒருவர் நல்லவராகவும் இன்னொருவர் கெட்டவராகவும் இருக்கிறார்களே! உண்மைதான்.. வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவர் திருடுவதும் வாய்ப்பு இருந்தும் இன்னொருவர் எடுக்காமல் செல்வதையும் பார்க்கிறோமே! என்றால், இங்கே தீர்மானகரமானது ஒருவரின் அகநிலை. அதுதான் அவரின் பண்பைத் தீர்மானிக்கிறது. புறநிலை அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது அவ்வளவுதான். அதற்காகப் “புறச்சூழல் முக்கியமல்ல” என்று எண்ணலாகாது.
முரண்பாடுகளின் இயக்கமே உலகின் இயக்கம் தொகுப்பாக உலகில் உள்ளவைகள் அனைத்தும் முரண்பாடுகளினால் ஆனது. ஒவ்வொன்றிலும் இருக்கும் எதிர்மறைகளின் கூட்டொருமைகளினால் (முரணான இருமையின் கூட்டு) ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்றன. இந்த முரண்களின் இயக்கமும் மாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒவ்வொன்றிலும் பல முரண்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று முதன்மையானதாக இருக்கிறது.
முதன்மையான முரணில் உள்ள இரண்டு கூறில் எந்தக் கூறு ஒன்றில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அதன் பண்பைத் தீர்மானிக்கிறது. அது எப்போதும் இயங்கி மாறக்கூடியது. இந்தப் பண்பு மாற்றத்தில் அதன் அகநிலையே தீர்மானகரமானது. புறநிலை இந்த மாற்றத்திற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது.
இப்படி உலக உருவாக்கம் மற்றும் வளர்ச்சி நிலைமாற்றத்தை (developments and processes) ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறைகளின் கூட்டொருமையாக அந்தக் கூட்டொருமையின் அங்கமாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதாகப் பார்ப்பது இயங்கியல் பொருள்முதல்வாதம்.
ஒவ்வொன்றையும் தனித்தனியாக தொடர்பற்றதாக மாறாததாக நிலையானதாக ஏதோ கொஞ்சம் கூடுதல் குறைதல் ஏற்படுவதாகவும் உலகில் நடந்ததே திரும்பத் திரும்ப நடைபெறுவதாகவும் காண்பது கருத்துமுதல்வாதம்.
எனில் ஒன்றிலிருந்து இன்னொரு எப்படி உருவாகிறது? எதிரெதிரான தன்மைகளைக் கொண்ட ஆணும் பெண்ணுமாகிய முரண்பட்ட இருமைகள் தங்களைப் போன்ற வாழ்வு-சாவு என்ற முரணைக் கொண்ட புதிய குழந்தையை உருவாக்குவதைப் போல அணுக்களின் இணைவும் பிரிவும் புதிய நிலைமை-நிலையற்ற முரணைக் கொண்ட புதிய மூலக்கூறிணை உருவாக்குவதைப் போல எதிர்மறைகளின் கூட்டொருமையினாலான ஒன்று இன்னொன்று எதிர்மறைகளின் கூட்டொருமையினாலான இன்னொன்றைத் தோற்றுவிக்கிறது.
வாழ்வு-சாவு என்ற இருமையில் வாழ்வின் கூறு ஆதிக்கம் செலுத்தும் அந்தக் குழந்தை சாவைத் தவிர்த்து வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னுடைய பழுதற்ற அகநிலை உறுப்புகளைப் பொறுத்தும் கிடைக்கும் புறச்சூழலைப் பொறுத்தும் வாழ்ந்து கெட்டவன்/ள்-நல்லவன்/ள், தொழிலாளி-முதலாளி, தலைவர்-தொண்டர் என பல முரண்களில் ஒன்றை தனது அகநிலையைப் பொருத்தும் காலசூழலுக்கு ஏற்பவும் இதில் ஏதாவது ஒன்றை முதன்மையாக வெளிப்படுத்தி அந்தக் கூறிணைக் கொண்டவன்/ள் என்ற குறித்த பண்பைப் பெறுகிறது. அதாவது உலகிலும் சரி மனிதரிலும் சரி பல முரண்கள் இயங்குகின்றன. கால சூழலுக்கு ஏற்ப அதில் ஒன்று முதன்மை முரணாக மாறுகிறது. அதற்கு ஏற்ப அவரின் பண்பும் அவரின் அடையாளமும் அவர் வாழும் காலத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது.
அப்படி என்றால் மற்ற முரண்கள்? பிறக்கும் போது உருவான முதன்மையான வாழ்வு-சாவு முரண் என்னவானது? அவை யாவும் இல்லாமல் மறைந்து போவதில்லை மாறாக பின்னுக்குச் சென்று இரண்டாம்பட்ச துணைமுரணாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே ஒரு நேரத்தில் ஒரு முரண்தான் முதன்மை முரணாக இருக்கும். மற்றவை துணைமுரணாக அதனுடன் இயங்கும். இன்னொரு நேரத்தில் துணைமுரண் முதன்மை முரணாக மாறும்.
இப்படி வாழ்வுக்கும் சாவுக்குமான நீண்ட நெடிய போராட்ட காலத்தில் வாழ்வில் பல முரண்கள் மாறிமாறி முதன்மை பெற்று அதில் உள்ள இரண்டு கூறில் ஒன்று அவரின் பண்பாக மாறுகிறது. இறுதியில் ஆதிக்கத்தில் இருந்த வாழ்வு படிப்படியாக தனது இடத்தை இழந்து சாவு அதனைப் பிடிக்கும் போது இந்த முரண் மீண்டும் முதன்மையாக மாறுகிறது. அந்த முரணின் ஒரு கூறான வாழ்வின் இடத்தை இன்னொரு கூறான சாவு முழுமையாகப் பிடிக்கும்போது அந்த உயிரின் இயக்கம் அதாவது அந்த முரண்பட்ட இருமையின் இயக்கம் முடிவுக்கு வருகிறது. இறப்புக்குப்பின் உயிரின் அணுக்களுக்குள் இயங்கிய வளர்சிதை மாற்ற முரண் முன்னுக்கு வந்து வளர்ச்சியின் இடத்தை சிதைவு பிடிக்கிறது.
இது இயங்கியல் குறித்தும் அதன் மூலம் வாழ்வைப் புரிந்து கொள்ளவுமான ஒரு அறிமுகம்தான். இதுவே முழுமையான இயங்கியல் அறிவியலோ அதன் வழியான தனிமனித பண்புநலன் சார்ந்த புரிதலே வாழ்க்கை குறித்த முழுமையான புரிதலாகவோ இருக்க முடியாது. அது தனிமனிதரின் பண்பைத் தீர்மானிக்கும் அவர் வாழும் சமூகம் சார்ந்த புரிதலின் மூலமும் அந்தச் சமூகத்தின் உருவாக்கம், இயக்கம், மாற்றத்தை இயங்கியல் அறிவியல் கொண்டு புரிந்து கொள்வதன் மூலமும்தான் முழுமை பெறும். அது குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.
- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு - தமிழ்நாடு
தொடர்பு எண்: +91 77083 02843