தமிழ்நாடு பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் ஆணையத்தின் தலைவராக நீதியரசர் எம்.வி.முரளிதரன் நியமனம் குறித்த தமிழ்நாடு & புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை!
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.வி. முரளிதரன் இருந்த பொழுது, தனது ஒற்றை அமர்வின் வாயிலாக 27-03-2023 அன்று மெய்தி இன மக்களை பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கு நான்கு வாரத்துக்குள் ஒன்றிய பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் அமைச்சருக்கு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். மெய்தி இனத்தவர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் அடர்த்தியாக வாழ்ந்து வருபவர்கள்; இவர்கள் சமூக- பொருளாதார அடிப்படையில் நன்கு முன்னேறியவர்கள்; ஆதிக்கமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர்கள்; மொத்த மக்கள் தொகையில் 53 விழுக்காடு உடைய பெரும்பான்மையர்; ஏனையோர் மலை வாழ் பழங்குடியினர்; இவர்களில் குக்கி, நாகா மற்றும் இன்ன பிற பழங்குடிகள் அடங்குவர்; இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள். அந்நாள் முதல்வர் பிரேன் சிங் மெய்தி இனத்தவர்.
இந்த உயர் நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, அங்கே பழங்குடியினருக்கும் பழங்குடி அல்லாதோருக்கும் இடையே கலவரம் வெடித்தது! இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்! பல்லாயிரம் பேர் இடம்பெயர்ந்தனர்! "குக்கி இனத்தவர் வந்தேறிகள்; கிறித்தவர்கள்; கிறித்தவத்தின் பெயரால் மணிப்பூரை அழிக்கின்றார்கள்" என்று குக்கி இனத்தவர் மீது வெறுப்பை உமிழ்ந்து கலவரத்தை ஊதிப் பெருக்கினார் முதல்வர் பிரேன் சிங்! மேற்கண்ட சர்ச்சைக்குரிய ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது; அது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூவர் அமர்வின் முன் வந்தது; அதில் "நீதியரசர் எம்.வி. முரளிதரன் ஒற்றை அமர்வு" அரசியல் அமைப்பு வேலியைத் தாண்டி உள்ளது!
பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான அளவுகோல்களை உச்சநீதிமன்ற அரசியல் அமைப்பு அமர்வுகளின் பல தீர்ப்புகள் முடிந்த முடிவாக தீர்மானித்துள்ளன (Settled law); எனவே இந்த ஆணை உண்மைகளின் அடிப்படையில் முற்றிலும் தவறானதாகும்" எனக் கூறியது. பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் மட்டுமே உண்டு" என அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 341 மற்றும் 342 கூறுகின்றன. மெய்தி இன மக்கள் பட்டியல் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், குக்கி இனத்தவர் வாழும் மலைப் பகுதி இடங்களை வாங்குவதற்குரிய சட்ட உரிமை பெற்றவர்களாக மாறுவர்; சமூக- பொருளாதார - அரசியல் செல்வாக்கு உள்ள இவர்கள் நாளடைவில் குக்கி மற்றும் இன்ன பிற பழங்குடி மக்கள் இடங்களை கபளீகரம் செய்வர் என்பதை நன்கு உணர்ந்தே இதைப் பழங்குடியினர் கடுமையாக எதிர்த்தனர்!
மணிப்பூரில் பழங்குடி மக்களின் மலைவாழ் மாவட்டங்களைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 371-C வழிவகை செய்கிறது. இதைப் பாதிக்கின்ற செயல்களை விவாதித்து முடிவு செய்வதற்கு சட்டமன்ற மலைப் பகுதி குழுக்கள் உள்ளன. ஆளும் ஒன்றிய- மாநில பாசக அரசுகளின் ஊதுகுழலாகச் செயல்பட்டு- மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டு- சமூக நீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானமாகிய மதச்சார்பின்மைக்கும் எதிராகச் செயல்பட்டவர் தான் நீதியரசர் எம்.வி. முரளிதரன்! இவரை பட்டியலின பழங்குடி மக்கள் ஆணையத்தின் தலைவராக அறிவித்து தமிழ்நாடு அரசு 10-11-2026 அன்று ஆணை பிறப்பித்துள்ளது! மணிப்பூர் கலவரத்திற்கு வித்திட்ட இவருக்குக் கிடைத்த பரிசாகவே இதைக் கருத வேண்டியுள்ளது.
நீதியரசர் எம்.வி. முரளிதரன் நியமனம் - சமூக நீதிக்கும், மதச்சார்பின்மைக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரானது! இவரின் நியமனத்துக்கு தமிழ்நாடு & புதுச்சேரி மக்கள் சிவில் உரிமை கழகம் (பியூசிஎல்) தமிழ்நாடு அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது!
- இரா.முரளி, தலைவர் & து. சேகர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர், தமிழ்நாடு & புதுச்சேரி பியூசிஎல்