இன்று உலகைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இயற்கைப் பேரிடர்தான் ‘எல் நினோ’ என்பது. இயற்கை அவ்வப்போது ஒரு பேரிடரை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இயற்கைக்கு எதிரான மனிதரின் அயராத போரில் இயற்கையின் பக்கம்தான் எப்போதும் பலமானது. அத்தகைய ஒரு இயற்கைப் போராக வந்திருப்பதுதான் இந்த ‘எல் நினோ’ என்பது.
‘எல் நினோ’ என்றால் என்ன? பசிபிக் பெருங்கடலில் வெப்ப மண்டல மேற்பரப்பில் உள்ள நீரின் வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைக் குறிக்கும் ஒரு சூழல்தான் ‘எல் நினோ’ ஆகும். இது ஒரு ஸ்பானிஷ் சொல். ‘கிறிஸ்துவின் குழந்தை’ என்பது இதன் பொருள். கிறிஸ்துமஸ் காலத்தில் இது உச்சத்தை அடைவதால் மீனவர்களால் வைக்கப்பட்ட பெயரே இது. இது அதிகளவில் வெப்பமான நீரோட்டமாகும்.
எப்படி உருவாகிறது ‘எல் நினோ’? பசிபிக் பெருங்கடலில் வர்த்தகக் காற்றுகள் நிலநடுக்கோட்டில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகின்றன. தென் அமெரிக்காவில் தொடங்கி ஆசியா வரை இவை வெப்பமான காற்றைக் கொண்டு செல்கின்றன. குளிர்ந்த சத்துக்கள் நிறைந்த நீர் ஆழத்திலிருந்து மேற்பரப்புக்கு உயர்கின்றது. இது ‘மேலெழுதல்’ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான நிலையாகும்.
‘எல் நினோ’: எல் நினோ நிலையில் கிழக்குக் காற்றுகள் பலவீனமடைகின்றன அல்லது எதிர்த்திசையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசத் தொடங்குகின்றன. வெப்பமான மேற்பரப்பு நீரானது காற்றின் வேகத்தால் மேற்கு பசிபிக்கிலிருந்து தென் அமெரிக்காவின் கடற்கரையை நோக்கி நகர்த்திச் செல்லப்படுகிறது. சாதாரண மேலெழுதலை வெப்பத்தின் அடுக்கு அனுமதிப்பதில்லை. ஊட்டச்சத்து நிறைந்த குளிர்ந்த நீர் சரியாக மேலெழும்பாது கடல் மேற்பரப்பின் வெப்பநிலை 0.5°C-க்கு மேல் உயர்ந்தால் அது ‘எல் நினோ’ நிலையாகும்.
எல் நினோ - வரலாறு: பெரு நாட்டின் வடக்குக் கடற்கரையில் 1578-ல் முதன்முதலாக எல் நினோ பதிவு செய்யப்பட்டது. அப்போது கனமழை, நிலச்சரிவு, பயிர்கள் அழிவு, ஏரிகளின் படையெடுப்பு போன்ற அழிவுகள் ஏற்பட்டன. 1525-ல் பிரான்சிஸ்கோ பிசாரோ என்பவர் பெரு நாட்டில் தரையிறங்கியபோது பாலைவனங்களில் மழையைப் பதிவு செய்தார். இதுவே எல் நினோ குறித்த முதல் பதிவாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இது நடக்கிறது. 13,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவளப்பாறைகளில் எல் நினோ தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல் நினோ 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. 1900-க்குப் பிறகு 26 எல் நினோக்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவுகள் உள்ளன.
விளைவுகள்: உலகம் முழுவதும் வெப்பநிலை மிகவும் அதிகரிப்பதுடன் மழை பொழிகின்ற தன்மையில் மாறுதல் ஏற்படும். சில பகுதிகளில் கடும் வறட்சியும் சில பகுதிகளில் கடுமையான மழையும் என்று காலநிலை மிகவும் குழப்பம் நிறைந்ததாகவும் பலவிதப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில்: இந்தியாவைப் பொறுத்தவரை பருவமழை பொழிவதில் பல மாறுதல்கள் ஏற்படும். எல்லாக் காலங்களிலும் இது நடக்கும் என்று கூற முடியாது. கடலில் இருக்கும் ஈரப்பதத்தையும் காற்றோட்டத்தையும் ‘எல் நினோ’ மாற்றுவதால் மேகங்கள் உருவாவது குறைந்து மழைவீழ்ச்சியை வெகுவாகக் குறைத்துவிடும். இதனால் பல்வேறு எதிர்விளைவுகளை நாடு சந்திக்க நேரலாம். நீண்ட காலத்திற்கு மழையின்றி வறட்சி நிலவக்கூடும். இதனால் வேளாண்மை பாதிப்பும் குடிநீர் மற்றும் உயிரினங்களின் நீர்த்தேவையை ஈடு செய்ய முடியாத அளவுக்கு நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர் மேலே வாராது. எனவே, மீன்பிடித்தொழில் மிகக் கடுமையாகப் பாதிப்படையும்.
காலநிலை: இது இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழலாம். சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும். குறிப்பாக 9 முதல் 12 மாதங்கள் இந்நிலை ஏற்படும். இது டிசம்பர் மாதத்தில் உச்ச நிலையை அடையும். அமெரிக்காவில் கால முன்னறிவிப்பு மையம் 01.06.2026 அன்று ‘எல் நினோ’ ஏற்படுவதாக அறிவித்தது. 2026-2027 வடக்கு அரைக்கோளக் குளிர்காலத்தில் ‘எல் நினோ’ வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ‘எல் நினோ’ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாகக் காலநிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆஸ்திரேலிய வானிலை அமைப்பின் கணிப்புப்படி 1950 முதல் காணப்பட்ட மிகவும் வலுவான எல் நினோக்களில் ஒன்றாக இது இருக்கலாம். சூப்பர் எல் நினோ ஏற்பட 63% வாய்ப்பு உள்ளது.
இலங்கையில்: இலங்கையில் எல் நினோவால் கடுமையான பாதிப்பு இருக்காது. இலங்கையில் இந்துமாகடல் அமைந்திருப்பதாலும் மத்திய மலைப்பகுதி ஈரப்பதத்தைத் தக்க வைப்பதாலும் இலங்கையில் எல் நினோ அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.
இலங்கையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சராசரியைவிடப் புவி வெப்பநிலை அதிகமாக இருக்கும். 2026-27ல் வடக்கு அரைக்கோளக் குளிர்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். சராசரியைவிட மழையளவு குறையும். மழை பொழியும் நாட்களின் எண்ணிக்கை குறையும்.
2027 பிப்ரவரிக்குப் பிறகே இலங்கையில் எல் நினோ பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியும் என்று கருதப்படுகிறது.
லா நினா (La Niña): லா நினா என்றால் ஸ்பானிஷ் மொழியில் சிறுமி எனப் பொருள்படும். இது பசிபிக் பெருங்கடலில் நிகழும் தட்பவெப்பநிலைச் சுழற்சியாகும். மத்திய மற்றும் கீழ் பூமத்திய ரேகைப் பசிபிக் கடலில் மேற்பரப்பு வழக்கத்தை விடக் குளிர்ச்சியடைவதால் இது உருவாகிறது. இது எல் நினோ சதர்ன் ஆசிலேஷன் (ENSO) சுழற்சியின் குளிர்ச்சியான கட்டமாகும். இது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இதன் விளைவாக அதிக மழை பெய்யவும் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
உயர்மட்ட ஆலோசனை: இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையில் எல் நினோவை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 2026 இரண்டாவது வாரத்தில் நடைபெற்றது. காலநிலைச் செயலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய, பேரிடர் மேலாண்மை மையத்தின் மேலதிக செயலாளர் முதித தர்மதிலக உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, நீர் வழங்கல், விவசாயம், மின் உற்பத்தி முதலிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதே போல இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நடவடிக்கைகள்: கடுமையான வறட்சி ஏற்பட்டால் நீராதாரங்களில் அழுத்தம் ஏற்படும். பெரிய நீராதாரங்கள் வறண்டு போனால் கடல்நீரைக் குடிநீராக்கி மக்களுக்கு வழங்கும் முயற்சிகளை முன்னெடுப்பது என்றும், ஏற்படக்கூடிய பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளையும் தயார் நிலையில் வைத்திருப்பது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை தேவை: வழக்கமாக நடைபெறும் பேரிடர் இது. எனவே அரசும் பிற அமைப்புகளும் மக்களும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த எல் நினோவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளலாம்.
- வழக்கறிஞர் தமிழகன், மாநில அமைப்பாளர், நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு திருச்சிராப்பள்ளி-620101.