கொண்டைஊசி வளைவுகளே அழகுதான். ஆனால் கொண்டைஊசி வளைவுகளுக்கு அழகு குரங்குகள்.
கூட்டமாய்க் குடும்பமாய் அமர்ந்திருக்கும் குரங்குகள் அத்தனை அழகாய் இருக்கும். நான் எப்போதுமே குரங்குகளை ரசிப்பவனாக, வியப்பவனாக, கொண்டாடுபவனாகவே இருந்திருக்கிறேன். பேருந்தில் ஜன்னல் ஓரம் என்பதே இயற்கைத்திரையில் இஷ்டத்துக்குச் சினிமா பார்ப்பது போல குரங்குகளையும் பார்ப்பதற்கே. ஒரு பக்கம் மலையும் மறுபக்கம் பள்ளத்தாக்குமாக கொண்டை ஊசி வளைவுகள் மேலே செல்லச் செல்ல அதைக் கண்டுணருவது கவிதை. தோள்களில் றெக்கை முளைத்துவிடும். கண்களோ ஆச்சரியம் எய்தும்.
வயதில் மூத்த குரங்கு.. சின்ன வயதுக் குரங்கு... குட்டிகள் என்று காணும் வளைவுகளில் எல்லாம் குரங்குகளைக் காணும் ஆசை ஒருபோதும் தீராது. சாம்பல் வண்ணத்தில் ஒரு சாகச ஓவியம் போலத் தெரியும் அவைகளை ஆச்சரியம் குறையாமல் பார்க்கிறேன். ஒரு குரங்குக்கு இன்னொரு குரங்கு பேன் பார்ப்பது... இரண்டு குரங்குகள் ஒட்டி ஒட்டி அமர்ந்து கொண்டிருப்பது... வயிற்றில் குட்டியோடு வண்டிகளை நோட்டமிடும் குரங்கு... இதில் தனித்த குரங்கு எப்போதுமே ஆச்சரியத்தின் உச்சம். ஒரு தியானத்தில் இருப்பது போன்ற தீவிரம் மிக அமைதியாக அதன் உடல்மொழியில் தவழ்ந்தபடி இருக்கும்.
பெரும்பாலும் அவைகள் வண்டிகளைப் பார்த்து அமர்ந்திருக்க, ஏதாவது ஒன்று அந்தப் பக்கம் திரும்பி அமர்ந்திருக்கும். கோச்சுக்கிட்டு உக்காார்ந்திருக்குதோ என்னவோ.
நாம் அவைகளை வேடிக்கை பார்ப்பது போல அதுங்களும் நம்மை வேடிக்கை பார்ப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.
குரங்கு மனிதனுக்கு மூத்தது. அதன் முகத்தில் இயற்கையின் கனிவைக் காண முடியும். அதன் தேகத்தில் காலத்தின் படிமத்தை உணர முடியும். ஆனால் அப்படிப்பட்ட குரங்குகளுக்குச் சுற்றுலாவாசிகள் உணவு, பழம் என்று தின்பதற்குப் கொடுத்துப் பழக்கி இருக்கிறார்கள். அது தவறான செயல். அப்படிப் பழக்குவது அதன் இயல்புத் தன்மையை முடக்கிவிடும். தன் உணவைக் காட்டில் தானே தேடி உண்ணும் அதன் வேட்கையைக் குறைத்துவிடும். கடந்த முறை செல்லும்போது சில குரங்குகள் கையை ஏந்திக்கொண்டு வண்டிக்குப்பக்கவாட்டில் ஓடி வந்ததைக் கண்டு உள்ளம் குறுகிப்போனேன். ஒரு மானுடம் செய்யக்கூடாத ஒன்றை யாரோ சிலர் செய்திருக்கிறார்கள். விளையாட்டுக்காக இருக்கலாம். வேடிக்கையாக இருக்கலாம். அதன் விபரீதம் புரியாமல் இருக்கலாம். ஆனால் போகிற போக்கில் பழக்கிவிட்டிருக்கிறார்கள்.
மனிதனிடம் பிச்சை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும் மிருகங்களுக்கு இல்லை. அதைத் தொல்லைப்படுத்தாமல் இருந்தால் போதும். அதன் உணவை அது பார்த்துக் கொள்ளும். ஆனால் வண்டி நகர்ந்து திரும்பும் வரை கூடவே கையேந்திக்கொண்டு ஓடி வரும் குரங்கு நம்மை நிலைகுலையச் செய்துவிட்டது. என்ன செய்து வைத்திருக்கிறோம் என்ற பதைபதைப்பைக் கூட்டிவிட்டது.
அதற்கு என்ன தெரியும்... நேற்று கிடைத்து இன்றும் கிடைக்கும் என்று அப்படியே காத்திருக்கப் பழகிவிட்டது. போகிற போக்கில் வீசி எறிந்துவிட்டுப் போன நினைவின்படி நாமும் ஏதாவது வீசுவோம் என்று எதிர்பார்த்து அப்படியே வண்டியோடு நகர்ந்தபடியே ஓடி வருகிறது.
ஒரு சிறு பிள்ளையைப் போலக் கையை ஏந்திக்கொண்டு அதுவும் கூன் நடையில் குரங்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சின்ன உயிர், சின்ன உடலில் ஒரு மாபெரும் பூதங்களிடம் கையேந்துவது அதுவும் கிட்டத்தட்ட பிச்சை. இரண்டு கால்களில் உடலை அசைத்து அசைத்து நடந்தும் ஓடியும்... கையை நெஞ்சுப்பக்கம் வைத்தபடியே கண்களில் பசியோ பழக்கமோ... அது கேட்கிறது. முடிந்தவரை ஓடி வந்து பிறகு கிடைக்காத போது அப்படியே நின்றபடியே வெறிக்கப் பார்க்கும் அந்தக் காட்சி... ஐயோ... மிகு பயங்கரம்.
மனிதனிடம் மனிதன் பிச்சை எடுப்பதே சகிக்க முடியாத ஆட்சிப் பிழை என்கிறோம். இதில் குரங்கு போன்ற உயிர்களும் அதையே செய்யும்படி ஆக்கி வைத்திருக்கும் மனிதனை என்ன சொல்வது. ஒரு மனிதனாக நொந்து கொண்டேன்.
அதுவும் இந்த பைக்காரன்களா... அவ்ளோ வேகத்தில் ரோட்டைத் திருப்பிக்கொண்டு போகிறான்கள். குரங்குகள் சாலையிலேயே அமர்ந்திருப்பது... நடந்து கொண்டிருப்பது இயல்பான ஒன்று. காடு அதனுடையது. அங்கே ரோடு போட்டுவிட்டோம் என்பதற்காக வேகம் என்னுடையது என்று சொல்வது சரியல்ல. குரங்கு நகர்ந்து கொண்டாலும் அதன் வால் வந்து சேர சற்று நொடிகள் பிடிக்கிறது. அதற்குள் முறுக்கிக்கொண்டு சென்று எதைப் பிடுங்கப்போகிறான் மனிதன்.
ஒரு பரிதாப நடையில் கையேந்தும் குரங்குகளை... மனதில் பதிந்த காட்சிப் பிழையாகவே நம்புகிறேன். அழிக்கவே முடியாத அதன் ஆற்றாமையே இங்கு கொட்டிக் கொண்டிருப்பது.
சுற்றுலாவாசிகள் உணர்ந்து கொள்ள வேண்டியது.. எந்த மிருகத்துக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது. சாலையோரத்தில் எதையும் வீசி எறியக் கூடாது. சத்தம் எழுப்பக் கூடாது.
போன முறை ஒரு ஐவர் பைக் அணி... சாலையொட்டி கேக் வெட்டி அத்தனை சத்தம். அதிலும் ஒருவன் பெண்குறியை அத்தனை சத்தமாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறான். இறங்கிச் சென்று கழுத்தில் மிதிக்க வேண்டும் போல இருந்தது. வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதால் இங்கே குமுறிக் கொண்டிருக்கிறேன்.
மலைகளில் பயணிப்பது சுகமளிக்கும் தான். அந்தச் சில்காற்றும்... மரங்களின் உயரமும்.. வனத்தின் அழகும்.. வளைவின் வசீகரமும் ஈர்க்கும்தான். ஆனால் கொண்டாட்டத்தை மிகைப்படுத்திக் கூவிக்கூவி காட்டினுடைய அமைதியைக் குலைக்காமல் இருக்க வேண்டுகிறோம்.
மறுபடியும் சொல்வது.. குரங்குகள் காட்டினுடைய குறும்புகள். போகிற போக்கில் ரசித்துவிட்டுப் போய்விட வேண்டும். உதவுகிறேன் என்று உபத்திரவம் செய்யக் கூடாது.
- கவிஜி