Modi and Amit Shahமுன்னிருந்த பொருளாதாரச் சரிவும், அதன் பின்னிணைந்த கோவிட்-19 தாக்கமும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தில் கடும் வாட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் நம் பிரதமருக்கு மட்டும் பொருளாதாரத்தில் பசுந்துளிர்கள் தெரிகின்றனவாம். மத்திய பாஜக அரசு, கோவிட்-19ஐ சாக்காக வைத்து, மக்களின் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் சீரழிவுக் கொள்கைத் திட்டங்களை அவசர அவசரமாக யாருடைய ஒப்புதலும் இல்லாமல் நிறைவேற்றி வருகிறது.

விவசாயிகளையும், நுகர்வோரையும் கடுமையாகப் பாதிக்கும் வகையில் விவசாயச் சந்தையை முற்றிலுமாக தனியார் பெருநிறுவனங்களுக்குத் திறந்துள்ளது. இதனால் நிலத்தில் எதைப் பயிர் செய்ய வேண்டும் என்பது முதல் அதை என்ன விலைக்கு விற்பது என்பது வரை முடிவு செய்யும் அதிகாரம் முற்றிலுமாகப் பெரும் நிறுவனங்களுக்கே சென்று விடும், அது பணப் பயிர்களையே அதிகம் பயிர் செய்யும் போக்கை ஊக்குவிக்கும் என்பதால், நாட்டின் உணவு உற்பத்தியிலான தன்னிறைவுக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955ஐத் திருத்தி அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்கியதால் இந்த அத்தியாவசியப் பொருட்களும் ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படும் நிலையே ஏற்படவுள்ளது. இப்பொருட்களின் மீதான அரசின் கட்டுப்பாடுகள் முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் இந்த விளைபொருட்களை ஊக வணிகர்கள் விருப்பம் போல் பதுக்கி வைத்து, செயற்கையான பற்றாக்குறை ஏற்படுத்தி அவற்றின் விலையை உயர்த்த முடியும். இதன் மூலம் ஊக வணிகர்களும், இடைத்தரகர்களும் அரசின் முழு ஆதரவோடு கொள்ளை இலாபம் அடிக்க முடியும். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகப் பெரும் இன்னலுக்கு ஆளாக உள்ளனர்.

இதனால் நீலகிரியில் உள்ள உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உருளைக் கிழங்கு விதை கிடைப்பதில் சிரமமம் ஏற்படுவதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்விழக்கும் அபாயமும், உள்ளது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாய சங்கங்கள் சார்பில் ஜூன் 10ம் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தலைமை வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவருவதற்கான அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். பாஜக அரசு, மாநிலங்களிடம் இருந்த கூட்டுறவு வங்கிகளின் மீதான நிர்வாக அதிகாரத்தை, மத்திய வங்கியிடம் ஒப்படைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

ஆனால் இந்த நிர்வாக மாற்றத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் மாநில அரசுகளின் ஊழல் அரசியலால் வங்கிகளைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்றும் சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். மத்திய அரசு செய்யாத ஊழலா! மத்திய வங்கி சுயேச்சையாகச் செயல்பட முடிகிறதா? மத்திய அரசின் கைப்பாவையாக மத்திய வங்கி உள்ளது. அரசின் கட்டுப்பாடில்லாமல் முற்றிலும் சுயேச்சையாக, தாராளமய வர்த்தகத்திற்கு ஆதரவாக மத்திய வங்கி செயல்பட வேண்டும் என்ற பொருளில் இதைக் குறிப்பிடவில்லை.

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் பொருளாதார நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ அவ்வங்கியால் முடியாத போது இந்த நிர்வாக மாற்றம் என்பது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை உறுதிபடுத்தாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன் திட்டங்களை ஏதோ பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் போல் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியினர் செயல்படுத்தி வருகிறார்கள். இதற்கு ஓர் இணையத்தளமும் தொடங்கியுள்ளார்கள் (www.bankloanhelplinedsbjp.in). குறைந்தபட்சம் இதற்காவது எதிர்ப்புத் தெரிவிக்க முடிந்ததா மத்திய வங்கியால்? இந்நிர்வாக மாற்றம் மாநிலங்களின் சுயாட்சி அதிகாரத்தையும், கூட்டுறவுக் கோட்பாட்டையும் குழி தோண்டிப் புதைப்பதாகவே அமையும்.

மாநிலங்கள் நிதி வருவாயின்றி சாராய விற்பனையின் மூலமும், லாட்டரி சீட்டுகளின் மூலமும் வருவாய் திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் கோவிட்-19ஆல் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தைச் சரிசெய்ய மாநிலங்கள் 20 லட்சம் கோடி நிதியை (10% ஜிடிபி அளவிற்கு) செலுத்த முன்வர வேண்டும் என நிதின் கட்காரி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசே 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு தருகிறோம் எனக் கடன் திட்டங்களை மட்டுமே அறிவித்துள்ள நிலையில் மாநிலங்கள் 20 லட்சம் கோடிக்கு எங்கே போகும்? கோவிட்-19இன் தாக்கத்தால், நிதிவளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த நிதி ஆண்டில் எந்தப் புதிய திட்டத்தையும் தொடங்க வேண்டாம் எனவும் நிதி அமைச்சகம் எல்லாத் துறைகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிதியாண்டில் செயல்படுத்துவதற்கான திட்டங்களும், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடுகள், நிதிச் சலுகைகள் குறைந்து விட்டால், மொத்தப் பொருளாக்க மதிப்பு (ஜிடிபி) 10.8% அளவிற்குக் குறையும் எனப் புள்ளியியல் நிபுணர் பிரனாப் சென் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி கூறுகிறது, வங்கிக் கடன்களின் வட்டிகளைத் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுமாம்! சரிதான், இது போன்ற குரல் பெருநிறுவனங்களின் வாராக் கடன்களை வட்டி மட்டுமில்லாமல் முதலோடு தள்ளுபடி செய்யும் போது ஏன் ஒலிக்கவேயில்லை?

அகில இந்திய உற்பத்திக் கூட்டமைப்பின் ஆய்வின் மூலம் 72% சிறு, குறு நடுத்தர நிறுவனங்களிலும், 42% கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு 9.25% குறைந்த வட்டியில் பிணையில்லாக் கடன் 3 லட்சம் கோடி வரை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்க ஒப்புதல் தந்தது. இதன் மூலம் 75 லட்சம் வரையிலோ அல்லது நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 15% அளவிலோ மூலதன உதவியை அரசிடம் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆறு மாதங்களுக்குள் 25 கோடி வரை நிலுவைக் கடன் வைத்துள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கடன் பெறத் தகுதியானவை என்பதால், கடன் நிலுவை இல்லாத போதும் தொழில் நடத்தப் பணம் இல்லாத நிறுவனங்களோ, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களோ இத்திட்டத்தின் மூலம் நிதி பெற இயலாத நிலையில் உள்ளன.

சிறு, குறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் திட்டத்தில் வங்கிக் கடனுக்கான தவணையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாகச் செலுத்தினால் மத்திய அரசு 2% வட்டி மானியம் தருமாம், அதுவும் 12 மாதங்களுக்குத்தானாம். இதைச் செயல்படுத்த வேண்டிய நேரமா இது? கடன் தவணையைக் கட்ட முடியாததால்தானே மத்திய வங்கி, கடன் தவணையை செலுத்துவதற்கு 6 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது? ஆனால் அதுவும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை. கிராமப் புறங்களில் நிதி நிறுவனங்களின் முகவர்கள், நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு அச்சுறுத்துவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

கோவிட்-19 முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்துள்ள நிலையில் பாஜக அரசு, 21 நாட்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திச் சாதனை படைத்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 பைசாவுக்கும், டீசல் லிட்டர் ரூ.77.72 பைசாவுக்கும் விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் தலைமைச் செயலாளரிடம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் விலையும் சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாராம் அது சரி, எங்களுக்கு அறிவுறுத்துவது இருக்கட்டும் உலகெங்கும் அது சீராகத்தான் உள்ளது, ஏன் உங்கள் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை எகிறிப் பாய்கிறது என ஒபெக் தலைமைச் செயலாளர் கேட்டால் இவர் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்?

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அனைத்து இயற்கை வளங்களையும் அம்பானி, அதானிகளுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து விட்டு, தேச பக்தி, தேச பக்தி எனக் கொக்கரிப்பதில் பொருள் ஏதும் உள்ளதா? பாஜக அரசு தேசபக்தியை நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் காட்ட வேண்டும்.

சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே தேசபக்தியை நிலைநாட்டி விட முடியாது. அதற்காக சீனத்தின் காலில் விழ வேண்டும் என்று கூற வரவில்லை. அமெரிக்காவின் காலில் விழுந்து கிடப்பது அல்ல தேசபக்தி.

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தை நவம்பர் இறுதி வரை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த திட்டம் 80 கோடிப் பயனாளர்களைக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் இதன் பயன்கள் அனைவரையும் சென்றடையவில்லை.

எளிய மக்களுக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை வெட்டுவதையே இலக்காகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரே ஏழைகளுக்கு நேரடிப் பண உதவி, நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை அளிக்கலாம் என நரேந்திர மோதிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் என்றால் பொருளாதாரம் அந்த அளவிற்குத் தாழ்வடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

ஆனால் இந்த இக்கட்டான நிலையும் பிரதமர் அவர்களுக்கு விளையாட்டாகத்தான் உள்ளது அவர் கூறுகிறார், தென்னிந்தியர்கள் பொழுது போக்கப் பல்லாங்குழி விளையாடுகிறார்களாம். பொருளாதாரத்தை பல்லாங்குழியாக்கி விட்டு, அவரால் மட்டுமே இவ்வாறு பேச முடியும். தனக்குரிய பொறுப்புகளையெல்லாம் நிறைவேற்றி விட்டு இவற்றைப் பற்றிப் பேசினால் அது வேறு.

நாட்டின் பிரதமர் பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு வெட்டிப் பேச்சே வேலையெனத் திரியும் போது அதை எப்படி ரசிக்க முடியும்? இந்தியாவில் ஸ்பானிய ஃப்ளூ காய்ச்சலால் 1918இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மொத்தப் பொருளாக்க மதிப்பு (ஜிடிபி) மீண்டு வர 4 ஆண்டுகள் ஆனது என பாரிஸில் உள்ள பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான கூட்ட்மைப்பு (ஓ.இ.சி.டி,) தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியானது பொருளாதார மீட்சி ‘U’ வடிவத்திலோ அல்லது ‘V’ வடிவத்திலோ அமையாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஜூன் 30 செவ்வாயன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, நாடு தழுவிய முடக்கத்தினால் தொழிற்சாலைகள் உழைப்பாளர் இல்லாமல், பணப் பற்றாக்குறையால் சிக்கித் தவித்ததால், பொருளாதாரத்தின் 8 முதன்மைத் துறைகளின் உற்பத்தி 2019 மே மாதத்தில் 3.8 சதவீதமாக இருந்தது, 2020 மே மாதத்தில் 23.4 சதவீதம் வீழ்ச்சி (-23.4) அடைந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாகத் தொடரும் இவ்வீழ்ச்சியானது ஏப்ரல் மாதத்தில் (-) 37 சதவீதமாக இருந்தது. 20ஆவது மாதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியும் மே மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. உர உற்பத்தியை (7.5%) தவிர்த்து, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய ஏழு துறைகளும் மே மாதத்தில் எதிர்மறை வளர்ச்சியே காணப்பட்டது.

உள்கட்டமைப்பு பிரிவில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய உற்பத்தி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 78.7 சதவீதம் வீழ்ச்சி (-78.7%) அடைந்த எஃகு உற்பத்தி மே மாதத்தில் 48.4 சதவீதம் சரிந்தது (-48.4%). ஏப்ரல் மாதத்தில் 85.3 சதவீதம் சரிவடைந்த சிமெண்ட் உற்பத்தி (-85.3) மே மாதத்தில் 22.2 சதவீதம் குறைந்துள்ளது (-22.2%) மின்சார உற்பத்தி 15.6 சதவீதமும் (-15.6%) சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 21.3 சதவீதமும் வீழ்ந்துள்ளது (-21.3%). தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (ஐ.ஐ.பி.) இந்த எட்டு தொழில்துறைகளின் பங்கு 40.27 சதவீதமாக உள்ளது.

பெண்களின் நிலை:

ஐநா அறிக்கை:

உலக மக்கள் தொகையின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் பாலின மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம் (UNFPA) ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிக்கையில் 2013க்கும் 2017க்கும் இடையில், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 460,000 குழந்தைகள் பிறப்பின் போது காணாமல் போனதாகவும், காணாமல் போன இக்குழந்தைகளில் பாலினச் சார்புடைய பாலினத் தேர்வினால் மூன்றில் இரு பங்கினரும், பிறப்புக்குப் பிந்தைய பெண் இறப்பின் காரணமாக மூன்றில் ஒரு பங்கினரும் காணாமல் போனதாக இந்த அறிக்கை கூறுகிறது. (கடந்த காலத்தில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெற்றோரின் பாலினத் தேர்வின் காரணமாக மக்கள்தொகையில் காணாமல் போன பெண்களை “காணாமல் போன பெண்கள்” என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.)

கடந்த 50 ஆண்டுகளில் காணாமல் போன உலகின் 142 மில்லியன் பெண் குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் (46 மில்லியன்) இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், உலகளவில் காணாமல் போனவர்களில் 90% முதல் 95% வரை இந்தியாவையும், சீனாவையும் சேர்ந்தவர்கள் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகவும், 1,000 பெண் குழந்தைகளில் 13.5 பேர் இறப்பதாகவும், 5 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பில், ஒன்பதில் ஒருவர் இறப்பது பிறப்புக்கு பிந்தைய பாலினத் தேர்வின் காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது.

இந்தியாவில், கல்வி பெறாத பெண்களில் 51 சதவீதத்தினருக்கும், ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்றவர்களில் 47 சதவீதத்தினருக்கும் 18 வயதிற்குள் திருமணம் செய்யப்படுவதாகவும், இடைநிலைக் கல்வி பெற்ற பெண்களில் 29 சதவீதத்தினருக்கும், இடைநிலைக் கல்வியைத் தாண்டிப் படித்தவர்களில் 4 சதவீதத்தினருக்கும் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உலக அளவில், இந்த ஆண்டு, 4.1 மில்லியன் பெண்கள் பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று, 18 வயதிற்கு உட்பட்ட 33,000 சிறுமிகள் மிகவும் வயதான ஆண்களை திருமணம் செய்யத் தள்ளப்படும் நிலை காணப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

புளூம்பெர்க் அறிக்கை:

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாலின இடைவெளி மேலும் தீவிரமடைந்துள்ளதாக புளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில், சுகாதாரத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாய் இருப்பதால் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தும் அவர்களுக்கு அதிகமாய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பெண்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்களே உழைப்புச் சக்தியாக உள்ளனர். ஆண் பெண் ஊதிய இடைவெளிக்கான உலகளாவிய சராசரி 16%ஆக உள்ள நிலையில், இந்தியாவில் இது சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்தியப் பெண்கள் ஆண்களை விட 36% குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 49 சதவீதத்தினராக உள்ளனர், ஆனால் இந்தியப் பொருளாதார உற்பத்தியில் 18 சதவீதத்தினரே பங்களிக்கின்றனர், இது உலகச் சராசரியில் பாதி மட்டுமே. பிரதமர் நரேந்திர மோதி அவர்களால் 1.3 பில்லியன் மக்கள் கொண்ட இந்த நாட்டில் மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட தேச அளவிலான முடக்கத்தால், பல பெண்கள் மேலும் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் புளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

இப்படி ஒவ்வொரு வகையிலும் நாடு சரிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பற்றிய கவலையே இல்லாமல்தான் பிரதமர் மோதி பொருளாதாரத்தில் பசுந்துளிர்களைக் காண்பதாகத் தம்மைத்தாம் ஏமாற்றிக் கொள்வதோடு நம்மையும் ஏமாற்றி வருகிறார்.

- சமந்தா