“ஓரணியில் தமிழ்நாடு” என முதலமைச்சர் 04.07.2025 முதல் வீடு வீடாகவும், சாலைகளில் மக்களைச் சந்தித்து, மக்களுடன் கைகுலுக்கி அரசின் திட்டங்களையும் ஒன்றிய அரசின் துரோகங்களையும் விளக்கியும், அனைத்துத் தி.மு.க நிர்வாகிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துத்துத் தானும் மக்களைச் சந்தித்து வருகிறார்.
தேர்தல் வருகிறதே, அவர் ஏதேதோ செய்கிறார். நீங்கள் வீட்டிலேயே இருந்தால் எப்படி? என எடப்பாடியை உசுப்பிவிட்டார்கள் போல. அவரும் “மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்” என்று இறங்கிவிட்டார். முதல்வர் போனால் மக்கள் கூடுகிறார்கள். சந்திப்பு நடக்கிறது. எடப்பாடியார் போனால், ரசிகர்கள் கூடுகிறார்கள். ஆட்டம் பாட்டமும் நடக்கின்றன. கூடவே சரவெடியாக காமெடியும் தான்! உதவி: அவரே தான்!
கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என நினைத்து அங்கு தொடங்கி இருக்கிறார் தன்னுடைய உளறல்களை! கொஞ்சம் நஞ்சம் திராவிடச் சிந்தனை இவர்களிடம் ஒட்டி இருக்கிறது என்ற மக்களின் நினைப்பையும் சிதறடித்து வருகிறார் அவர். கோயில்களில் வரும் பணத்தை எடுத்துக் கல்லூரிகள் கட்டுகிறதாம் அரசு. இதை சதிச் செயலாகப் பார்க்கிறார்களாம் மக்கள். தமிழ் நாட்டு மக்களை இவ்வளவும் தான் புரிந்து வைத்திருக்கிறார்களா? அல்லது முழுக்க பா.ஜ.க. காரராக மாறிவிட்டாரா? எச்.ராஜா வுக்கு சற்றும் சளைப்பில்லாமல் பேசும் எடப்பாடிக்கு மக்கள் அளிக்கப் போகும் பதில் தான் 2026 தேர்தல்.
தமிழ் நாட்டில், முன்னாள் அ.தி.மு.க. முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய பழனியாண்டவர் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள், 48 பள்ளிகள் என 54 கல்வி நிலையங்கள் இந்து அறநிலையத் துறையின் பொருளால் நிர்வகிக்கப்படுகின்றன. “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” ஆலயம் பதினாயிரம் நாட்டலைக் காட்டிலும் புண்ணியமாகச் சொன்ன மண்ணல்லவா இது? தமிழ் நாட்டு மக்கள் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தால் தான் இன்று நாட்டில், உயர் கல்வியில் மிக உயர்ந்த இடத்தை தமிழ் நாடு அடைந்துள்ளது. இவை எல்லாம் எடப்பாடிக்கு தெரியாதா? அல்லது தமிழ் நாட்டு மக்களை அடகு வைத்துத் தன் தனிப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள பா.ஜ.க வின் குரலாக மாறி வருகிறாரா?
இன்னொரு கூட்டத்தில், பெண்களுக்கு கொடுக்கப்படும் ரூ.1000/- உதவித் தொகையை இவர்கள் போராடிய பிறகு 28 மாதங்கள் கழித்துதான் கொடுத்தார்கள் என்று அடித்து விடுகிறார். இவர்கள் எங்கே போராடினார்கள்? போராடுவதற்கு இது இவர்கள் கொண்டு வந்த திட்டமும் அல்லவே? மகளிர் உதவித்திட்டம் 1.06 கோடி பெண்களுக்கு எந்தப் போராட்டமும் இல்லாமல் தான் கொடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக கூடுதலாக தகுதியான பெண்களுக்கும் வழங்க இப்போது அறிவிப்பு விடப்பட்டுள்ளது.
போகும் வழி எல்லாம், “கொத்தமல்லி என்ன விலை?”, “நிலக்கடலை என்ன விலை?”, “எலுமிச்சை சாறு கொடுப்பா”, “ஆம்புலன்ஸுக்கு வழி விடுப்பா” என மக்களோடு இருப்பதாக பாவித்துக் காட்டும் எடப்பாடியாரே உங்கள் கறைகள் இன்னும் அழியவில்லை. நீட், புதிய கல்விக் கொள்கை, உதய் மின் கட்டணக் கொள்ளை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை என எதுவும் மக்கள் மனங்களில் இருந்து அகலவில்லை. உங்கள் பா.ஜ.க வுடனான கூட்டும் இப்போது நீங்கள் போட்டிருக்கும் சங்கி வேடமும் உங்கள் மகனைக் காப்பாற்ற நீங்கள் கட்சியையும் தியாகம் செய்ய தயாராகிவிட்டதை மக்களிடம் காட்டிக் கொடுக்குமே ஒழிய உங்களுக்கு எந்த பலனையும் தராது.
மதுரையில் முருக பக்தர் மாநாட்டில், பா.ஜ.க.வினர்,' அ.தி.மு.கவினர் முன்னிலையில், அ.தி.மு.கவின் கொள்கைத் தலைவர்களையும், பெரியார் மற்றும் அண்ணாவையே “அதர்மம்” என்றும் “நாத்திக நரிகள்” என்றும் காணொளிக் காட்சி வெளியிட்டதைக் கூட கண்டிக்காத எடப்பாடியார், கூட்டணி முதல்வரை பா.ஜ.க தான் முடிவு செய்யும் என்று சொல்வதற்கு வாலைக் குழைக்கும் இவர், கட்சியை எப்படி பா.ஜ.க. விடமிருந்து காப்பாற்றுவார்? கட்சியையே காப்பாற்றாதவர் எப்படி மக்களைக் காப்பாற்றுவார்? அடகு வைத்த கட்சியையே அமித்ஷாவிடமிருந்து மீட்காதவர் எப்படி தமிழகத்தை மீட்பார்?
உள்ளபடியே, இன்று அ.தி.மு.க.வின் மீது தி.மு.க விற்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கும் அக்கறையில் ஒரு துளி கூட எடப்பாடியாருக்கு இல்லை என்பதே உண்மை. பல்வேறு ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளால் சிக்கவைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க தலைமையும் அதன் அடிபொடிகளும் தன்மானத்தை இழந்து என்ன செய்தாலும் அவர்களுடைய சுற்றுப்பயணம் சந்திப்பாக, மாறாது. அது வெற்றுக் காட்சியாகவே முடியும்!
எடப்பாடியார் ரோட் ஷோவுக்குப் போகவில்லை, 'ரோட்டில் ஷோ'வாகப் போகிறார்.
- சாரதாதேவி