mao and stalinபார்ப்பனியமும், முதலாளித்துவமும் இந்திய மக்களின் வாழ்க்கையை அழித்து நாசம் செய்து வரும் வேளையில், அதற்கு எதிராக ஓரணியில் நின்று ஒற்றைத் திசைவழியில் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய கம்யூனிச இயக்கங்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்து மோதலால் பல நூறு சிறு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. உழைக்கும் வர்க்கம் சாதியைக் கடந்து ஒன்றுபட்டு முதலாளித்துவத்தை வீழ்த்தி மூலதனத்தின் கொடும் பிடியில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பும் இயக்கங்கள், தங்களுக்குள்ளான கருத்து மோதல்களுக்கே இன்னும் முற்றுப்புள்ளி வைத்து, அதைக் கடந்துவராத போது இவர்கள் சொல்லும் பாட்டாளி வர்க்க ஒற்றுமை மட்டும் எப்படி சாத்தியமாகும்? சமீபத்தில் பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து மிகப் பெரிய பேரணியை நடத்தி தங்கள் ஒற்றுமையை நிரூபித்தன. இதே போன்று மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினால், அந்த விருப்பம் நிராசையாகவே முடியும் சூழல் தான் உள்ளது.

காரணம் இவர்களுக்கு மக்களை அரசியல்மயப்படுத்துவதைவிட யார் உண்மையில் மார்க்சியத்தை கடைபிடிக்கின்றார்கள் என்ற சண்டையே இன்னும் முடிவடையாமல் உள்ளது. அது முடிவடையப் போவதும் இல்லை. நான்கு சுவற்றுக்குள்ளாக உட்கார்ந்து தத்துவ அரட்டையை மட்டுமே கடைசிவரை அடித்துக் கொண்டு இருக்கப் போகின்றார்கள். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து பெரும் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், அதற்கு ஒன்றுபட்ட மையப்படுத்தப்பட்ட புரட்சிகர இயக்கம் ஒன்று நிச்சயம் வேண்டும். அது தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும், முற்போக்குக் குணம்கொண்ட தேசிய முதலாளிகளையும், அறிவுஜீவிகளையும் வென்றெடுக்க வேண்டும். அந்தப் பணி முழுமை பெறாதபோது, அது முடுக்கிவிடப்படாத போது, நாம் பேசும் சித்தாந்தங்கள் அனைத்துமே காற்றில் கரைந்து காணாமல்தான் போகும்.

மார்க்சியத்தில் மரபு வழி மார்க்சியம், மண்ணுக்கேற்ற மார்க்சியம் என பிரித்துப் பேசி அதிதீவிரமாக சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் இயக்கங்களைப் பார்த்தால் இது போன்ற இயக்கங்களின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என நம்மை சந்தேகிக்க வைக்கின்றது. காரணம் உண்மையில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ போன்றவர்களின் நூல்களை கற்றவர்கள் இது போன்ற அற்பத்தனமான சண்டையில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். நம்முன்னால் மாபெரும் புரட்சி நடந்த இரு நாடுகளின் அனுபவம் முழுவதும் எழுத்துக்களாக உள்ளது. குறிப்பாக லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோரின் எழுத்துக்கள் இதை முழுமையாகப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவில் லெனினும், ஸ்டாலினும் கடைபிடித்த வழிமுறைகளை மாவோ கடைபிடிக்கவில்லை. அவர் சீனாவின் தனிச்சிறப்பான நிலைமைகளை மதிப்பீடு செய்தே சீனப் புரட்சியைக் கட்டமைத்தார். இதற்காக மாவோ, ஸ்டாலின் உடன் பெரிய அளவில் முரண்படவும், அவரை விமர்சிக்கவும் செய்தார். இதை எல்லாம் தெரிந்தவர்கள் மார்க்சியம் என்பதை ஒரு வறட்டு மாறாநிலைக் கோட்பாடாக முன்நிறுத்த மாட்டார்கள்.

மார்க்ஸும், எங்கெல்ஸும் தான் வாழ்ந்த நாட்களிலேயே மற்ற நாடுகளின் தனித்தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்து அவை ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிப் போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிப் போக்கு கொண்டவையாக இருப்பதைக் கண்டறிந்தார்கள். குறிப்பாக ஆசிய சமூகத்தைப் பற்றிய மார்க்சின் ஆய்வைச் சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளைப் போன்று அல்லாமல் இந்திய சமூகத்தின் நில உடைமைமுறை இருந்ததை மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுகள் மூலம் கண்டறிந்தார்.

“அந்தச் சிறிய மிகவும் புராதனமான இந்திய கிராம சமுதாயங்கள் அவற்றில் சில இன்று வரை நீடித்துள்ளன-நிலத்தைப் பொதுவில் வைத்திருப்பதையும், பயிர்த்தொழில், கைத்தொழில்கள் ஆகியவற்றின் ஒன்று கலத்தலையும், மாற்றமில்லாத உழைப்புப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். ஒரு புதிய சமுதாயம் அமைக்கப்படும் போதெல்லாம் இவ்வுழைப்புப் பிரிவினை தயாராக வரைந்து வைத்துள்ள வரைபடத் திட்டமாகப் பயன்படுகிறது. 100 முதல் பல்லாயிரம் வரையிலான ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒவ்வொரு சமுதாயமும் தனக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்து கொள்கிற கச்சிதமான முழுமையாக அமைகிறது. உற்பத்திப் பண்டங்களில் ஆகப் பெரும்பகுதி சமுதாயத்தின் நேரடி உபயோகத்துக்கு உரியதாகும். அது சரக்காக வடிவம் பெறுவதில்லை. ஆகவே இங்கே உற்பத்தியானது, இந்திய சமுதாய முழுமையிலும், சரக்குப் பரிவர்த்தனையால் ஏற்படும் உழைப்புப் பிரிவினையைச் சார்ந்ததல்ல. உபரி மட்டுமே சரக்காகிறது. அதிலும் கூட ஒரு பகுதி அரசின் கைக்குப் போய்ச் சேரும் வரை சரக்காவதில்லை; நினைவுக்கெட்டாத காலம் தொட்டு இவ்வுற்பத்திப் பண்டங்களின் ஒரு குறிப்பிட்ட அளவு பண்ட வடிவ நில வாரமாக (rent in kind) அரசின் கைக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இந்திய கிராம சமுதாயங்களின் அமைப்புமுறை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் மாறுபடுகிறது. சாமானிய வடிவமுடைய சமுதாயங்களில் நிலம் பொதுவில் உழப்பட்டு விளைச்சல் சமுதாய உறுப்பினர்களிடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. அதே சமயத்தில் நூற்பும் நெசவும் ஒவ்வொரு குடும்பத்திலும் துணைத்தொழில்களாக நடத்தப்படுகின்றன.

Lenin and stalinஇவ்வாறு ஒரே வேலையில் ஈடுபட்டுள்ள வெகுஜனங்களின் பக்கத்திலேயே தானே நீதிபதியாகவும், காவல்காரராகவும், வரி வசூலிப்பவராகவும் இருக்கிற “ஊர்த் தலைவரையும்”, உழவுக் கணக்குகளை வைத்திருப்பவரும், அது தொடர்பான சகலத்தையும் பதிவு செய்பவருமான கணக்குப் பிள்ளையையும், குற்றவாளிகள் மீது வழக்கு தொடர்பவரும், வழிப்பயணம் செய்கிற அயலார்களைப் பாதுகாப்பவரும், அவர்கள் அடுத்த கிராமத்துக்குப் போவதற்கு வழித்துணையாகக் செல்பவருமான இன்னொரு அலுவலரையும், அண்டைச் சமுதாயங்களிடமிருந்து எல்லைகளைக் காக்கிற எல்லைக் காவல‌ரையும், பொதுக் குளங்களிலிருந்து பாசனத்துக்காக நீர் பங்கிடுகிற நீர்வளக் கங்காணியையும், மதச் சடங்குகளை நடத்தி வைக்கிற அந்தணரையும், குழந்தைகளுக்கு எழுதப்படிக்க மணலில் கற்றுக் கொடுக்கிற பள்ளி ஆசிரியரையும், விதைப்பதற்கும் அறுப்பதற்கும் சகல விவசாய வேலைகளுக்கும் நல்ல நாள், கெட்ட நாள் பார்த்துச் சொல்கிற பஞ்சாங்கப் பிராமணர் அல்லது ஜோதிடரையும், விவசாயக் கருவிகள் அனைத்தையும் செய்து கொடுக்கிற பழுது பார்க்கிற கொல்லரையும், தச்சரையும், கிராமத்திற்கான மண்பாண்டங்கள் அனைத்தையும் செய்து கொடுக்கிற குயவரையும், நாவிதரையும், துணிகளை வெளுக்கிற சலவைத் தொழிலாளியையும், தட்டாரையும் இங்குமங்குமாகச் சில சமுதாயங்களில் தட்டாரின் இடத்தையும் மற்றவற்றில் பள்ளி ஆசிரியரின் இடத்தையும் வகிக்கிற புலவரையும் காண்கிறோம். இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆட்களும் சமுதாய முழுமையின் செலவில் பராமரிக்கப்படுகின்றனர்.

…..இந்தச் சமுதாயங்கள் உற்பத்தி ஒழுங்கமைப்பின் எளிமையானது ஆசியவழிச் சமுதாயங்கள் மாற்றமின்றி அப்படியே இருப்பதன் இரகசியத்தை அறிவதற்கான திறவுகோலாகும். ஆசிய அரசுகள் இடையறாது சிதைவதற்கும், மீண்டும் நிறுவப்படுவதற்கும், ஓயாத அரசவம்ச மாற்றங்களுக்கும் நேர் எதிரானதாகக் கண்ணிற்படுகிறது. இந்த மாற்றமின்மை. சமுதாயத்தின் பொருளாதாரக் கூறுகளது வடிவமைப்பு அரசியல் வானத்தில் சீறியெழும் புயல்மேகங்களால் பாதிப்புறாமல் அப்படியே இருந்து வருகிறது." (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 8 -பக்கம் 169-170)

மேலும் இந்திய சமூகம் அடிமைப்படுவதற்கான அடிப்படைக் காரணத்தை ஆய்வு செய்யும் மார்க்ஸ் அதற்கான காரணமாக சாதியையும், மதத்தையும் கூறுகின்றார். “…..அந்த தேசம் ஹிந்து, முஸ்லிம் என்று பிளவுபட்டிருந்ததுதோடு, ஒரு குலமரபுக்கும், மற்ற குலமரபுக்கும் இடையே பிளவு இருந்தது. ஒரு சாதிக்கும், மற்ற சாதிக்கும் இடையே பிளவு இருந்தது. தன்னுடைய உறுப்பினர்கள் அனைவர்களிடையிலும் பொதுவாக ஒருவரை மற்றொருவர் வெறுப்பது நடைமுறை அரசியலமைப்புப்படி ஒருவர் மற்றொருவரை தனியே விலக்கி வைத்திருப்பது ஆகியவைகளின் விளைவாக ஏற்பட்டிருந்த ஒருவிதமான அமைதியான சம நிலையின் அடிப்படையில் அந்த சமுதாயத்தின் அமைப்பு இருந்தது. இத்தகைய ஒரு தேசம், இத்தகைய ஒரு சமுதாயம் ஆக்கிரமிப்புக்குப் பலியாகத்தான் வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிடலாம் அல்லவா?....” என்கின்றார். அதே போல “….இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் அறிவு ஆற்றலுக்கும் மிக முக்கியமான முட்டுக்கட்டையாக இருக்கும் இந்தியச் சாதிகளுக்கு அஸ்திவாரமாக விளங்கும் பரம்பரைக் குலத்தொழில் பிரிவினைகளை இருப்புப் பாதைகளை அமைப்பதிலிருந்து உருவாக்கப்படும் நவீன இயந்திரத் தொழில்கள் கலைத்துவிடும்…” என்கின்றார். (இந்தியாவைப் பற்றி-காரல் மார்க்ஸ்)

இந்திய சமூகத்தின் நில உடைமை முறை பற்றிய மார்க்சின் ஆய்வில் குறைபாடுகளும் விமர்சனங்களும் இருந்தாலும் இந்திய சமூகம் பெரும் புரட்சிகள் ஏதுமின்றி மோன நிலையிலேயே இருந்து வருவதற்கான அடிப்படையை இந்த ஆய்வு தொட்டு இருக்கின்றது என்று சொல்ல முடியும். அது இங்கே சாதி ரீதியான உழைப்புப் பிரிவினை இருந்தது என்பதையும், அது கட்டிக் காப்பாற்றப்பட்டது என்பதையும், அதுதான் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது என்பதையும்தான். மார்க்சிய தூய்மைவாதம் பேசுபவர்களுக்கு இந்தியாவின் தனிச்சிறப்பான தன்மை பற்றிய மார்ச்சின் இந்த ஆய்வு, குறிப்பாக சாதி பற்றிய மார்க்சின் கண்ணோட்டம், சாதி பற்றிய எந்தவித பிரக்ஞையும் அற்ற அல்லது அதை அப்படியே கடந்துபோக நினைக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு கடும் எரிச்சலை தரக்கூடியது. நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டியது மார்க்ஸ் மற்ற நாடுகளின் தனிச்சிறப்பான தன்மையை ஏற்று அங்கீகரித்தார் என்பதுதான்.

அதுமட்டுமல்ல உற்பத்தியும், பரிவர்த்தனையும் கூட நாட்டுக்கு நாடு மாறுபடும் தன்மையானது என்பதை எங்கெல்ஸ் அங்கீகரிக்கின்றார் “… எந்த நிலைமைகளின் கீழ் மனிதர்கள் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்கிறார்களோ அவை நாட்டுக்கு நாடும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும், தலைமுறைக்குத் தலைமுறையும் வேறுபடுகின்றன. எனவே அரசியல் பொருளாதாரம் எல்லா நாடுகளுக்கும் எல்லா வரலாற்று சகாப்தங்களுக்கும் ஒரே தன்மையுடையதாக இருக்க முடியாது…..” என்கின்றார். (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 10 -பக்கம் 199)

எனவே மார்க்சியம் என்பதை வறட்டுக் கோட்பாடாக பயன்படுத்த நினைப்பவர்கள் உண்மையில் இந்திய சமூகக் கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர்களாகத்தான் இருப்பார்கள். தான் வாழும் மண்ணின் தனித்தன்மையான குணாதிசயங்களை ஏற்று அதற்கு ஏற்றாற்போல மார்க்சியம் எனும் புரட்சிகர அறிவியல் கோட்பாட்டை விதைக்காதவர்களால் ஒரு நாளும் புரட்சியை மலரச் செய்ய முடியாது. அது போன்றவர்கள் ஏன் இன்னும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கான காரணமும் அதில்தான் அடங்கியுள்ளது. மரபு வழி மார்க்சியம் என்பது மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் வேரில் இருந்து கிளைப்பது ஆகும். அடித்தளம் இல்லாமல் மேற்கட்டுமானம் இல்லை. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் புறக்கணித்தால் அது அபத்தத்தின் மீது கட்டப்படும் வெற்று உரைகளாகவே இருக்கும்.

இன்னும் இருக்கின்றது...

- செ.கார்கி

Pin It