தோழர் ரூபேஷ் கேரள சிறையிலிருந்து எழுதிய ஒரு மலையாள நாவலை கேர்ள் சிறைத்துறையும் அரசும் வெளியிட அனுமதி மறுக்கின்றன. அவர் சமீபத்தில் தமிழகத்தின் சிவகங்கை நீதிமன்றத்தால் ஒரு சிம் கார்டு வழக்கில் யு ஏ பி ஏ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சிறை வைக்கப்பட்டவர்களின் நினைவுக் குறிப்புகள்' என்ற அவரது நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படித்த பல கேரள இலக்கிய ஆளுமைகள் அவரது ஜனநாயக உரிமையை பறிக்கக் கூடாது என கருத்து தெரிவித்தனர். சிறையில் உள்ள அவர் தனது நாவலை வெளியிட வேண்டுமென கால வரையற்ற உண்ணாவிரதமும் இருந்தார். உண்ணாவிரதத்தின் போது முதலமைச்சரே வெளியிட அனுமதி தருவதாக ஒப்புக்கொண்ட போதும் இன்று வரை அந்த நாவல் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. அந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை படித்த பேராசிரியர் ஸ்ரீ குமார் எழுதிய கட்டுரை கவுன்டர் கரண்ட் ( countercurrents) என்ற இணைய இதழில் வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கமே பின்வரும் கட்டுரை.

ரூபேஷின் வெளி வராத நாவல் மற்றும் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் தாக்கங்கள்

‌-பேராசிரியர் ஸ்ரீகுமார் 

கேரளாவின் விய்யூர் மத்திய சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ், தனது சமீபத்திய நாவலை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். நாவலின் கையெழுத்துப் பிரதி தற்போது பொதுவெளியில் உள்ளது, மேலும் பல முக்கிய எழுத்தாளர்கள் அதைப் படித்துள்ளனர், இது ரூபேஷுக்கு ஆதரவான சமூக ஊடக இடுகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவல் சிறையில் இருந்து செய்யப்பட்ட அவரது முதல் இலக்கிய முயற்சி அல்ல; இதற்கு முன்பு கேரளாவில் 'வசந்தத்திலே பூமரங்கள்' மற்றும் 'மாவோயிஸ்ட்'. எனும் இரண்டு தலைப்புகளுடன் வெளி வந்த ஒரு நாவலை எழுதியுள்ளார் '

அவரது சமீபத்திய படைப்பான 'சிறை வைக்கப்பட்டவர்களின் நினைவுக் குறிப்புகள்' என்பது சமகால யதார்த்தத்துடன் ஒத்துப்போகும், குறிப்பாக ஸ்டான் சாமியின் சிறைவாழ்க்கையின் அனுபவத்தை எண்ணச் செய்யும் ஒரு ஆழமான அரசியல் உருவகக் கதையாகும். இந்த நாவல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வயதான காலத்தில் சிறைவைக்கப்பட்ட ஒரு பிரபலமான கவிஞரின் வேதனையான பயணத்தைப் பின்தொடர்கிறது. அவரது ஜாமீன் விண்ணப்பத்தின் சட்ட நடவடிக்கைகளை விரிவாக விவரிக்கிறது. இது நமது காலத்தின் அரசியல் காலநிலையை பிரதிபலிக்கும் ஒரு வழக்கிற்கும், ஒரு எழுத்தாளராக ரூபேஷின் படைப்பாழத்திற்கும் சான்றாக உள்ளது.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக சமூகத்தில், சிறைச் சாலை சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கக்கூடாது. மாறாக, அது அதன் கட்டமைப்புகளுக்குள் பதிக்கப்பட்டு, நீதி, குற்றம் மற்றும் தண்டனையின் சிக்கலான தன்மையை பிரதிபலிக்கிறது. சிறை முறை அதன் சுவர்களைத் தாண்டி நீண்டு, பரந்த சமூக மற்றும் அரசியல் இயக்கங்களை பாதிக்கிறது. சிறைவாசிகளுக்கு எழுதவும் வெளியிடவுமான உரிமை என்பது தனிப்பட்ட எழுத்துரிமையின் சிக்கல் மட்டுமல்ல, தண்டனையின் மனித பரிமாணத்தை அங்கீகரிப்பதற்கும் அதன் ஒப்பீட்டுத் தன்மையை தன்மையை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு முக்கிய அம்சமாகும். எழுத்து என்பது சிந்தனை, எதிர்ப்பு மற்றும் சுய மறுவாழ்வுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். மேலும் சிறைவாசிகளுக்கு தங்கள் எண்ணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை மறுப்பது அவர்களின் தண்டனையின் நியாயமான கூறு அல்ல. காஃப்காவின் 'தி ட்ரையல்' (The Trial) நாவலை கொண்டாடும் அதே சமயத்தில், சமகால சமூகத்தில் காஃப்காவிய யதார்த்தங்களில் வாழ்பவர்களை மௌனமாக்கும் முரண்பாடானது ஒரு அடிப்படை கபடத்தனத்தை வெளிப்படுத்துகிறது. இந்த முரண்பாட்டை தான் ரூபேஷின் நாவல் எதிர்கொள்ள முனைகிறது.

 இந்தக் கதை சாரத்தில் ஒரு மதிப்புமிக்க கவிஞரின் கைது மற்றும் அவர் சிறையில் அனுபவித்த சம்பவங்களின் அபத்தத்தை ஆவணப்படுத்துவதாகும். அமைப்பின் இடைவிடாத விமர்சகரான நாயகன், மனிதத்தன்மை அற்றதும் தன்னிச்சையானதுமான, ஒரு நீதி மற்றும் தண்டனை இயந்திரத்தில் சிக்கிக் கொள்கிறார். கதை பல அடுக்குகளில் விரிகிறது. இது சிறைப்பட்டிருக்கும் கவிஞரின் போராட்டத்தை, சிறை அதிகாரிகளிடம் அனுபவிக்கும் அவமானங்களை, சிலர் அவரது படைப்பை அங்கீகரித்து ரசிப்பதையும், மற்றவர்கள் எந்தவொரு சாதாரண குற்றவாளியைப் போலவே அவமதிப்புடன் நடத்துவதையும், அதிகாரிகளின் இத்தகைய மாறுபட்ட அணுகுமுறைகளை விவரமாக சித்தரிக்கிறது. வயதான பருவத்தில் அவரது பலவீனங்கள் மற்றும் அவரை விடுவிக்க அவரது பேத்தியின் தீவிர முயற்சிகள் நாவலின் மற்றொரு முக்கிய இழையை உருவாக்குகின்றன. நினைவுகள் மற்றும் பழைய நிகழ்வுகளை காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், கவிஞர் மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்ட தருணங்களையும் கதை மீண்டும் பார்வையிடுகிறது, அவரது தற்போதைய அடக்குமுறைக்கும் கடந்தகால அறிவுசார் மற்றும் கலைப் பாராட்டுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.

இந்த நாவல் நாயகனின் துன்பத்தை மட்டும் சொல்லவில்லை. அத்துடன் சிறை ஆட்சியின் முறையான குரூரத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. இது சிறைக் வாசிகளுக்கு வழக்கமாக நிகழும் மனிதத்துவ மறுப்பு, அவர்கள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உடல்ரீதியான சித்திரவதை, மற்றும் சிறை அதிகாரிகளின் விருப்பப்படி நிர்வாணப்படுத்தப்படுவது உட்பட அவர்கள் அனுபவிக்கும் கட்டற்ற அவமானங்களை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், சிறைக் கைதியான கவிஞர் பிணை மனு தாக்கல் செய்யும் போது நாவல் அதன் மிக தீவிரமான கட்டத்தை அடைகிறது, இது ஒரு பதட்டமான சட்டப் போராட்டத்தைத் தூண்டுகிறது. சிறை அதிகாரிகள் அவரது விடுவிப்பை கடுமையாக எதிர்க்கிறார்கள், நடவடிக்கைகளை ஒரு பெரிய அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்கள், இது நீதி, தண்டனை மற்றும் சட்ட முறைமையின் இருண்ட யதார்த்தங்களை மேலும் பிரதிபலிக்கிறது.

நாயகன் ஒரு சர்வதேச அளவில் அறியப்பட்ட இலக்கிய ஆளுமை, மதிப்புமிக்க சாகித்திய அகாதமியில் பதவி வகித்தவர், மற்றும் இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றவர். இருப்பினும், நாவலில், முற்றிலும் பலவீனமான மற்றும் அரசியல் ரீதியான அடிப்படையில் உருவான வழக்கில் கைது செய்யப்படுகிறார். அவரது சிறைப் படுத்தலுக்கான மூல காரணம் , மாவோயிஸ்ட் செயல்பாடுகளுக்கான முகமையாக சந்தேகிக்கப்படும் ஒரு அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு சந்தால் கவிஞர் முர்முவின் கைதுடன் தொடர்பு கொண்டது. முர்மு என்ற பெயர், பண்டித் ரகுநாத் முர்மு, சாது ராம்சந்த் முர்மு மற்றும் பலர் உட்பட, சந்தால் மொழியில் பாலினங்கள் தாண்டிய பல கடந்தகால மற்றும் தற்போதைய எழுத்தாளர்களின் மரபை எண்ணச் செய்கிறது. முர்முவின் லேப்டாப் பகுப்பாய்வின் போது, கவிஞர் முர்முவுக்கு நான்கு கடிதங்களை அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர், மேலும் முர்மு, தனது சித்தாந்த வளர்ச்சியை மிகவும் பாதித்த நபர் கைது செய்யப்பட்ட கவிஞர் தான் என்று ஒப்புக்கொண்டார்.

இந்த எளிதில் உடைபடக்கூடிய தொடர்பு அவரது கைதை நியாயப்படுத்த போதுமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்டு, சட்ட அமலாக்க அதிகாரிகள் கவிஞரைக் குற்றம் சாட்ட கூடுதல் வழிகளைத் தேடினர். விசாரணை அதிகாரிகள் அவரது இலக்கியத் தொகுப்பை பகுப்பாய்வு செய்ய, அதாவது அவரது கவிதைகள் புரட்சிகர, தேசத்துரோக உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை நிரூபிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியபோது, ஒரு குறிப்பிடத்தக்க அபத்தமான மற்றும் கொடுமையான திருப்பம் நிகழ்ந்தது. இது தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு செயலியை நம்பிய பகுப்பாய்வு.

அரசு தரப்பு வாதத்தில் இந்த செயலி படைப்புகளில் குறிப்பிட்ட சட்ட விதிகள் மீறுப்படுவதை , எதார்த்த வகையிலும், உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்காத வகையிலும் பகுப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்த வழக்கில், அதிகாரிகள் கவிஞரின் படைப்புகளை ஆய்வு செய்ய மென்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 124A (தேசத்துரோகம்), 121A (அரசிற்கு எதிராக போர் திட்டம்), 153A (வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் எதிர்ப்பை ஊக்குவித்தல்), 153B (தேசிய ஒற்றுமைக்கு பாதகமான குறிப்புகள்) மற்றும் 505 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) பிரிவுகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை அடையாளம் காணும்படி செயலிக்கு குறிப்பாக ஆணை தரப்பட்டது. இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், அவர்கள் கவிஞரின் கொண்டாடப்பட்ட படைப்புகளின் ஒரு சிதைக்கப்பட்ட மற்றும் முற்றிலும் நகைப்புக்குரிய விளக்கத்தை வழங்கினர், அவரது எழுத்துக்கள் தேசிய பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்தன என்று வாதிட்டனர்.

தங்கள் கூற்றுக்களை மேலும் நியாயப்படுத்த, அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு அமைப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்று வலியுறுத்தினர், அது வெளிநாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, எனவே மிகவும் நம்பகமானது என்று வலியுறுத்தினர். இந்த செயலி வகைப்படுத்தப்பட்ட மூன்று மட்டங்களில் செயல்படுவதாக அவர்கள் கூறினர். முதல் வகை — அதிக நிகழ்தகவு — உடனடி ஆபத்தைக் குறிக்கிறது மற்றும் நபரின் அவசர கைது மற்றும் விசாரணை தேவைப்படுகிறது. இரண்டாவது வகை — நிகழ்தகவு — கைது தேவையில்லை, ஆனால் தொடர்ச்சியான கண்காணிப்பை கோருகிறது, இந்த செயல்முறை "டிஜிட்டல் ரோந்து" (digital patrolling) என்று குறிப்பிடப்படுகிறது, இதில் சட்ட அமலாக்கம் ஒரு நபரின் இணைய வழி மற்றும் இணையத்தில் இணைந்திடாத போதிலான செயல்பாடுகளை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்காக கண்காணிக்கும். மூன்றாவது வகை — குறைந்த ஆபத்து — இன்னும் குறைந்த தீவிரத்தில் சோதனை தேவைப்படுகிறது. முர்மு வழக்கு நடந்திருக்காவிட்டாலும் கூட, கவிஞரின் படைப்பு செயலியால் முதலாவது நிகழ்தகவு வகையில் நேரடியாக வகைப்படுத்தப்பட்டது, அதாவது அவரது கைது நியாயப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், கட்டாயமாகும். இது அசாதாரணமான மற்றும் ஆபத்தான முன்னுதாரணம் — இலக்கியத்தின் கணக்கீட்டு பகுப்பாய்வின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு சட்ட வழக்கு . இவ் வழக்கு கருத்து மாறுபாட்டை குற்றமாக்க, அறிவார்ந்த விவாதத்தை குற்றமாக்க, மற்றும் அரசு கட்டுப்பாட்டின் கருவியாக செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதிகரித்து நம்பியிருப்பதை நிரூபிக்கிறது.

இந்த அபத்தமான வாதத்தைச் சுற்றியே நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசின் செயற்கை நுண்ணறிவு செயலி மேற்கொண்ட பகுப்பாய்வின் கண்டறிதல்கள் என்று கூறப்படுவதை இந்நாவல் கவனமாக கட்டுடைத்து விரிவாக்குகிறது. நாவலின் இந்த அம்சத்தை குறிப்பாக விரும்பத்தக்கதாக ஆக்குவது அதன் படைப்பு புத்திசாலித்தனம் — யதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு கற்பனை உலகத்தை கட்டமைக்கும் திறமை. அதே நேரத்தில் அரசு அதிகாரவர்க்கத்தின் உள்ளீடற்ற பிரம்மாண்டத்தை இது அம்பலப்படுத்துகிறது. அரசாங்க நிறுவனங்கள் மிகைப்படுத்தப்பட்ட தீவிர கவனத்துடனும் முட்டாள்தனமான நகைச்சுவையுடனும் பணிபுரிவதையும் படம் பிடித்து காட்டுவதன் மூலம், எதிர்ச்சதிகாரத்தின் செயல் முறையை நாவல் அழுத்தமாக பதிவு செய்கிறது. அதாவது தேசிய பாதுகாப்பின் சொற்ஜாலங்களுக்கு பின்னர் பெரும்பாலும் காரணம் மற்றும் நியாயம் இருப்பதில்லை. அரசு மற்றும் அதன் நிறுவனங்களும் வலிமையான அமைப்புகளாகக் காணப்பட்டாலும் கூட, அவை உடையக்கூடிய, தன்னிச்சையான, முரண்பாடான தர்க்கத்தை நம்பியுள்ளன என்பதை இந்த நாவல் முறையாக வெளிப்படுத்துகிறது.

கதையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி கவிஞரின் படைப்பின் மீதான அரசு தரப்பு ஆய்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அநீதி மற்றும் ஒடுக்குமுறையை ஆவேசமாக விமர்சிக்கும் அவரது கவிதைகள், -அரசு எதிர்ப்பு பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஆதாரமாக திரிக்கப்படுகின்றன. கருத்து மாறுபாட்டை தேசத்துரோகமாக விளக்கும் நீதித்துறை மற்றும் அதிகார அமைப்புகளை நாவல் வன்மையாக நையாண்டி செய்கிறது., சுதந்திர சிந்தனைகளை குற்றமாக்க நடக்கும் எதார்த்த உலக முயற்சிகளை பிரதிபலிக்கிறது. நாவலின் மைய கருத்தானது, நவீன அரசுகள் குறிப்பாக ஜனநாயகத்தின் முகமூடியின் கீழ் பணி புரியும் அரசுகள், எவ்வாறு அறிவார்ந்த எதிர்ப்பிற்கு பதிலளிக்கின்றன என்பதுதான். அக்கருத்தை எதிர்கொள்வது அல்லது விவாதத்தின் மூலமாக அல்லாமல், கண்காணிப்பு, ஒடுக்குமுறை மற்றும் அப்பட்டமான தணிக்கை ஆகியவற்றின் மூலம்தான் பதிலளிக்கின்றன. நாவல் இறுதியில் ஒரு பெரும் துன்பப் பாதை குறித்து எச்சரிக்கிறது, இதில் தாராள வாதம் அற்ற ஜனநாயகங்கள் குடிமை சமூகத்தை அரிக்கின்றன, பேச்சு சுதந்திரம், படைப்பாளிகளின் சுதந்திரம் மற்றும் அரசியல் படைப்புத்திறன் போன்றவற்றிற்கான வெளிகளை சுருக்கிக் கொண்டே சென்று இறுதியில் ஒரு முழுமையான எதேச்சதிகார அரசாட்சியில் வீழ்வதற்கு வழி வகுக்கின்றன.

அதிகார வர்க்கம், ஒடுக்குமுறை, மற்றும் அதிகாரத்தின் அபத்தம் ஆகியவற்றை கையாளும்போது, இந்த நாவல் Franz Kafka இன் படைப்புகளுடன் ஆழமாக ஒத்துப்போகிறது. நாயகனின் இக்கட்டான நிலை, தனது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தாமலேயே, குற்றவாளி என தீர்மானிக்கும் ஒரு கொடூர சட்ட அமைப்பில் சிக்கிக் கொண்டுள்ள ஜோசப் கேயின் நிலையை ஒத்ததாக உள்ளது.

காஃப்காவின் உலகம் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பற்ற, சிக்கலான அதிகார வர்க்க அமைப்பால் ஆளப்படுகிறது, அது எந்த நியாயமும் இல்லாமல் தீர்ப்பை வழங்குகிறது. அதுபோலவே, இந்த நாவலில் கவிஞர் ஒரு அபத்தமான, சேர்க்கை நுண்ணறிவு உருவாக்கிய குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படுகிறார், இங்கு மொழியே ஒடுக்குமுறையின் கருவியாக மாறுகிறது. 'The Castle' இல், காஃப்கா அதிகாரத்தின் மாயையைக் கண்டறிகிறார். அதிகாரம் சர்வ வல்லமை கொண்டது போல தோன்றுகிறது, போல் தோன்றுகிறது, ஆனால் இறுதியில் அது கைக்கு சிக்காததாகவும், , தன்னிச்சையானதாகவும் பல சமயங்களில் அர்த்தமற்றதாகவும் உள்ளது.நாவலானது, காஃப்காவின் படைப்புகளைப் போலவே, தனிநபர்கள் குற்றச்சாட்டு மற்றும் நியாயப்படுத்துதல் ஆகியவற்றின் முடிவில்லாத சுழற்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு உலகம் குறித்த பார்வையை வழங்குகிறது. அங்கு தர்க்கம் என்பது பகுத்தறிவுக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாற்றப்படுகிறது. மேலும், அரசியல் அதிகாரம் தன் வலிமையை நீதியிலிருந்து அல்லாமல், கட்டுப்பாட்டின் வன்முறையான வழிமுறைகளிலிருந்துதான் பெறுகிறது.

இந்த நாவலின் இதயம் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சர்வாதிகார விரிவாக்கத்தின் சகாப்தத்தில் சுதந்திரத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்த இருண்ட நையாண்டிப் பிரதிபலிப்பாகும். காவல்துறையின் சிந்தனை மற்றும் எதிர்ப்பை மவுனமாக்குவதற்காக தொழில்நுட்ப முன்னேற்றங்களை அரசு பயன்படுத்தும்போது, ஜனநாயகமும் ஒரு கற்பனையாக மாறும் என்று அது எச்சரிக்கிறது.ஜனநாயகமானது சட்டபூர்வமான ஆட்சி என்ற மாயையால் மட்டுமே நிலைநிறுத்தப்படுகிறது, தீவிரமான முயற்சிகளுக்குப் பிறகும் காரணம் இல்லாமல் அவரை தண்டிக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாத காஃப்காவின் கதாநாயகனை போலவே இந்நாவலின் நாயகனின் நிலையும் உள்ளது.

இங்கே பிரச்சினை என்னவென்றால், இந்த வழக்கு இலக்கிய தணிக்கை பற்றியது மட்டுமல்ல; தேசிய-அரசுக்கு சாத்தியமான அச்சுறுத்தல்களாக மேலும் மேலும் அதிகமான எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள் என்பது குறித்த ஆழமான, இந்திய அளவிலான கவலையை இது எடுத்துக்காட்டுகிறது. சர்வாதிகார வேட்கைகளுக்கும், உலகின் ஜனநாயக நாடுகள் நிலைநிறுத்துவதாகக் கூறிக் கொள்ளும் கருத்துச் சுதந்திரம் மற்றும் சமூக நீதியின் கொள்கைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பதற்றத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த சர்ச்சையின் விளைவு அதன் நீண்டகால சித்தாந்த கவலைகளை எதிர்கொண்டுள்ள இடது முன்னணி அரசின் ஜனநாயக விழுமியங்கள் மீதான அர்ப்பணிப்புக்கு ஒரு உடனடி சோதனையாக செயல்படும். கேரளாவில் உள்ள பல எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளபடி, சிறை அதிகாரிகளால் ரூபேஷின் நாவல் மவுனமாக்கப்படுவது வெறும் தணிக்கை செயல் அல்ல-இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். இது ஒரு நாவல் மட்டுமல்ல-இது எதிர்ப்பின் ஆவணம், அதிகாரத்தின் மீதான விமர்சனம் மற்றும் நீதி, சுதந்திரம் மற்றும் ஆக்கபூர்வமான வெளிப்பாடு ஆகியவற்றின் சந்திப்பு குறித்த ஆழமான விசாரணை. அது அடக்கப்படுவதானது, அதன் குரலை உடனடி கவனம் தரப்பட வேண்டிய ஒன்றாக ஆக்குகிறது.

T T Sreekumar, Ph.D, Professor | Department of Communication, School of Interdisciplinary Studies, Director (i/c), Educational Multimedia Research Center (EMMRC), The English and Foreign Languages University, Hyderabad

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.