சில நாட்களுக்கு முன்னால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டத்தை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் ‘மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதற்காக ரூ. 33.56 ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். லட்சக்கணக்கான மாணவர்களின் மனம் குளிர காரணமாகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி. திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்து போன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் சிறப்பான ஒன்றுதான். நிச்சயம் இது மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதோடு அவர்களின் கற்றலின் திறனையும் மேம்படுத்தும். ஆனால் இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இன்று அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வதற்கான காரணம் அவர்களின் வறுமை அல்ல என்பதையும், அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதே என்பதையும் எப்பொழுதுதான் இந்த அரசுகள் உணர்ந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை. கீழே இருக்கும் அட்டவணையைப் பாருங்கள்.
37579 அரசு பள்ளிகளில் 45,93,422 மாணவர்களும் 8328 தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் படிக்கின்றார்கள். அரசுப் பள்ளிகளைவிட நான்கு மடங்கு குறைவாக இருக்கும் தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளைவிட அதிகம் மாணவர்கள் படிக்கின்றார்கள். இது எப்படி சாத்தியமாகும்?
அரசுப் பள்ளிகள் |
அரசு உதவி பெறும் பள்ளிகள் |
தனியார்ப் பள்ளிகள் |
|
தொடக்கப் பள்ளி |
24,310 |
5021 |
5089 |
நடுநிலைப் பள்ளி |
7,024 |
1508 |
763 |
உயர்நிலைப் பள்ளிகள் |
3,135 |
589 |
2046 |
மேல்நிலைப் பள்ளி |
3,110 |
1210 |
3764 |
மொத்தம் |
37579 |
12382 |
8328 |
மாணவர்கள் |
45,93,422 |
22,25,308 |
64,15,398 |
ஆசிரியர்கள் |
2.27 லட்சம் |
77000 |
2.53 லட்சம் |
ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 2018-2019 ஆம் ஆண்டு தனிநபர் வருமானம் 1,42,921 ரூபாயாக இருந்தது. இது இந்தியாவில் 12 இடமாகும். 2019 -2020 ஆம் ஆண்டு இது 1,53,853 ரூபாயாக ஆக உயர்ந்தது. இந்திய அளவில் இது 6 வது இடமாகும். மாதம் 12,821 ரூபாயும் ஒரு நாளுக்கு 427 ரூபாயும்தான் இன்று சராசரி தமிழர்களின் வருவாயாக இருக்கின்றது.
தமிழ்நாட்டைவிட குறைவான பொருளாதார பங்களிப்பு செய்யும் கோவா, டெல்லி, சிக்கிம், சண்டிகர், புதுச்சேரி கூட தனி நபர் வருமானத்தில் முன்னிலையில் இருக்கின்றன.
இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு தொழிலாளி தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரும்பாடு. அப்படி இருக்கையில் எப்படி அவனால் தன்னுடைய குழந்தைகளை பல லட்சங்கள் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடிகின்றது?
கணவன், மனைவி என இரண்டு பேரும் வேலைக்குப் போயோ, கந்துவட்டிக்கு கடன் வாங்கியோ, நகைகளை அடமானம் வைத்தோ, சொத்துக்களை விற்றோதான் பெரும்பாலானவர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றார்கள்.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால் நடப்பிலோ அப்படி இருப்பதில்லை என்பதோடு பயன்படுத்துவதற்கே தகுதியற்ற சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலையில்தான் அரசு பள்ளிகளின் கழிப்பறைகள் உள்ளன.
மேலும் 1,000 - 2,000 பேர் பயிலும் பள்ளிகளில் கூட வெறும் ஒன்றிரண்டு தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளிக் கழிப்பறை பராமரிப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புறப் பள்ளிகளுக்கு மாதந்தோறும் ஒதுக்கப்பட்டு வந்த நிதியை அரசுகள் முறையாக வழங்காததுதான்.
இதனால் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைந்துள்ளதோடு இடைநிற்றல் விகிதமும் அதிகரித்திருக்கின்றது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9, 10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
மாணவர்களுக்கான கழிவறை வசதியைப் பொறுத்தவரை 99.74% பெற்று மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான 99.92% கழிவறை வசதியுள்ளது. தமிழ்நாடு அதன் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளாவுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கி 97.33% சதவீதமே உள்ளது.
2019- 20 ஆண்டு வெளியான கல்வி நிலை அறிக்கை (ASER) நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் அடிப்படை திறன்கள் இல்லை என்பதைக் காட்டுகின்றது. அந்த அறிக்கையின் படி கர்நாடகா, கேரளா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைவிட தமிழ்நாடு பின்தங்கியே இருக்கின்றது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசுகள் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆனால் திமுக, அதிமுக என மாறி மாறி வந்த அரசுகள் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்களே பெரிய கல்வி வள்ளல்களாக உருமாறியதுதான்.
2020 நிதியாண்டில், கல்வித் துறையின் சந்தை மதிப்பு இந்தியா முழுவதும் சுமார் 117 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த சந்தை மதிப்பு 2025 நிதியாண்டில் நாட்டில் 225 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கொழுத்த லாபத்தை கொடுக்கும் தனியார் கல்வியை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்டு அரசு பள்ளிகளை அம்போ என கைவிட்டனர்.
அரசுப் பள்ளிகளை மட்டுமல்ல கல்லூரிகளையும் அதிகப்படுத்தாமல் திட்டமிட்டு முடக்கினார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 785 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 105 அரசுக் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், மற்றவை அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகளே ஆகும்.
சாப்பாடு போடுவதும், முட்டை போடுவதும், இலவச பேருந்து சேவை வழங்குவதும் மட்டுமே கல்வியின் தரத்தை மேம்படுத்தாது என்பதையும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு மேம்படுத்தி தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை கொடுக்க இந்த அரசுகள் முயற்சிக்க வேண்டும்.
ஆனால் தனியார் பள்ளியின் பேருந்து எரிந்து போனதற்காக முதலைக் கண்ணீர் வடித்து நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையையே நாசமாக்கத் துணிந்த இவர்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முயற்சிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
- செ.கார்கி