தமிழ் நிலத்தின் மாமன்னன், தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தவன், கப்பற்படை கொண்டு வணிகம் வளர்த்தவன், மும்முடிச் சோழன் என்று பெயரெடுத்தவன் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆவது பிறந்தநாள் விழாவில் இந்தியாவின் தலைமை அமைச்சர் பங்கேற்று மாமன்னனின் புகழை பறைசாற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
கங்கை வரை படையெடுத்து வடக்கில் ஆட்சி செய்த மன்னர்களை வென்று கங்கைகொண்டான் என்ற பெயருடன் கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிக் கொண்டவர் மாமன்னர் ராஜேந்திர சோழன்.
தமிழ் நிலத்தின் மாமன்னன் என்று பறைசாற்றி விட்டு விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் கூட தமிழ் இல்லாமல் பார்த்துக் கொண்டது தமிழுக்குச் செய்யும் துரோகம்.
பேரறிஞர் அண்ணா உருவப்படத்துடன் இந்திய அரசு நாணயம் வெளியிட்ட பொழுது அண்ணாதுரை என்ற அவரது கையெழுத்தை தமிழில் பொறித்து வெளியிட்டது.
ஆனால் இன்று ராஜேந்திரனுக்கு புகழ் சேர்ப்பதாக கூறி அவர் உருவம் குறித்த நாணயத்தில் உப்புக்கு கூட தமிழின் ஓரெழுத்தும் பொறிக்கப்படவில்லை.
சோழனின் பெயரை தமிழ் ஒலிப்பின் அடிப்படையிலாவது "ராசேந்திர சோழன்" என்று எழுதி இருக்கலாம் அதையும் வடமொழி ஒலிப்பு முறையில் "ராஜேந்திர சோழா" என ஒலிக்கும் வகையில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருப்பது சோழன் புகழை பரப்புவதாகாது.
அருகிலுள்ள கர்நாடகாவில், ஆந்திராவில் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் கலந்து கொள்ளும் விழாக்களில் கன்னடம் தெலுங்கு மொழிகளில் பதாகை அமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். கேட்டால் இது பிரதமர் கலந்து கொள்ளும் விழா அதனால் பதாகை ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
தமிழ்! தமிழ்! என்று உலகெங்கும் சென்று பரப்புவதாக கூறிக் கொள்ளும் தலைமை அமைச்சர் இதை கண்டித்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் தமிழ் பதாகை இல்லை என்பதை விழா குழுவினருக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா? தமிழ்நாடு அரசு, அரசு விழாக்களில் பதாகைகளில் தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி இருக்க வேண்டாமா?
இந்தியாவின் மூத்த மொழி, உலக மொழிகளின் தாய்மொழி என்று தமிழின் பெருமைகளை எல்லாம் பாரத தேசத்தின் பெருமைகளாக உலகெங்கும் சென்று உரை நிகழ்த்தும் பிரதமர் இந்திய நாணயங்களில் தமிழை பொறிக்க வேண்டாமா?
அருகில் உள்ள இலங்கை நாட்டில் நாணயங்களில் தமிழ் இருக்கிறது, சிங்கப்பூர் நாணயத்தில் தமிழ் பொறிக்கப்பட்டிருக்கிறது. விடுதலை இந்தியாவில் விடுதலைக்காக வித்திட்ட முதல் விடுதலைப் போராட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலத்தின் மொழி இந்திய ஆட்சி பீடத்தில் இன்றும் நிலைநிறுத்தப்படவில்லை.
20 மொழிகளில் தாய்மொழியாக கொண்ட இந்தியாவில் நாணயத்தில் தமிழை மட்டும் எப்படி பொறிக்க முடியும் என்ற கேள்வியை உடனே கேட்பவர்களே! அப்படியானால் பல மொழி பேசும் இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியை மட்டும் காசில் அச்சேற்றி இருப்பது வஞ்சகமல்லவா?
இந்திய அரசு இந்தியை தவிர்த்து தமிழை இரண்டாம் தர மொழியாக தமிழர்களை இரண்டாம் தர குடியாக நடத்துகிறது என்றுதானே பொருள்!
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்தி மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தாய்த் தமிழுக்கு கொடுப்பதுதானே சரி. அதுதான் உண்மையிலேயே தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு!
ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை எழுப்ப உள்ள இந்திய அரசு புகழ்பெற்ற தமிழ் மன்னர்களான ஆரிய படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், கனக விஜயனை தோற்கடித்து அவர்களை கல் சுமக்க செய்த சேரன் செங்குட்டுவனுக்கும் சிலை எழுப்ப வேண்டும்.
மேலும், தமிழ் மன்னர்களின் பெருமையை தமிழ் நிலம் நன்கறியும். இவர்களின் பெருமையை பறைசாற்ற இந்திய ஒன்றியத்தின் தலை நகரத்தில் இவர்களுக்கு சிலை எழுப்புவது தான் சிறப்பாக இருக்கும்.
- நா. வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்