கடந்த மாதம் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றிய 28 வயதுடைய அஜித்குமாரின் மரணம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான சம்பவம், காவல் சித்தரவதையைத் தடுக்கும் வகையில் விரிவான சட்டம் உடனடித் தேவை என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இதை நியாயப்படுத்த பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (National Human Rights Commission) ஆண்டு அறிக்கைகளில், காவல் நிலையங்களிலும், நீதிமன்றக் காவலிலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (1-04-2014 முதல் 31-03-2024 வரை) தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு, 20,093 காவல் மரணங்கள் மற்றும் 1,503 என்கவுண்டர் என மொத்தம் 21,596 மரணங்கள் நடந்திருப்பதாக, மாநில அரசுகளால் கீழ்க்காணும் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ளபடி தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
|
வரிசை எண் |
வருடம் |
காவலில் மரணங்கள்/ பாலியல் பலாத்காரம் குறித்து பெறப்பட்ட தகவல் |
என்கவுண்டர் மரணங்கள் குறித்து பெறப்பட்ட தகவல் |
மொத்தம் |
||
|
காவல் மரணங்கள் / பாலியல் பலாத்காரம் |
நீதிமன்ற காவலில் மரணங்கள் / பாலியல் பலாத்காரம் |
துணை இராணுவம் அல்லது இராணுவ காவலில் மரணங்கள் / பாலியல் பலாத்காரம் |
||||
|
1 |
2014 - 2015 |
133 |
1589 |
0 |
192 |
1914 |
|
2 |
2015 - 2016 |
152 |
1670 |
1 |
206 |
2029 |
|
3 |
2016 - 2017 |
146 |
1616 |
1 |
180 |
1943 |
|
4 |
2017-2018 |
148 |
1636 |
1 |
164 |
1949 |
|
5 |
2018-2019 |
137 |
1797 |
2 |
158 |
2094 |
|
6 |
2019-2020 |
114 |
1586 |
0 |
127 |
1827 |
|
7 |
2020-2021 |
103 |
1841 |
1 |
87 |
2032 |
|
8 |
2021-2022 |
175 |
2367 |
1 |
159 |
2702 |
|
9 |
2022-2023 |
168 |
2356 |
6 |
125 |
2655 |
|
10 |
2023-2024 |
160 |
2184 |
2 |
105 |
2451 |
|
|
Total |
1436 |
18642 |
15 |
1503 |
21596 |
இது கொலைசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே. அதுவும்கூட முழுமையான தகவல்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை; விடுதல்கள் பல இருக்கலாம். கை, கால் உடைக்கப்பட்டவர்கள், சிறிய, மிதமான மற்றும் கொடுங்காயத்திற்கு ஆளானோர் தரவுகள் எங்குமே பராமரிக்கப்படவில்லை. இதுபோன்ற விடுதல்கள் இருந்தாலும், இந்தப் புள்ளிவிவரங்கள், இந்தியாவின் காவல்துறை மற்றும் நீதிமன்றக் காவல்களில் நடைபெறும் மரணங்களின் பயங்கரமான நிலையை வெளிப்படுத்துகின்றன. சராசரியாக ஒவ்வொரு மாதமும் 180 பேர் காவலில் உயிரிழக்கின்றனர் என்பது, ஒவ்வொரு நாளும் 6 பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே உயிரிழக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது, ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட அமலாக்க அமைப்பில் நிலவும் மிகுந்த மோசமான நிலை மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிக்காட்டுகிறது. சராசரியாக, ஒவ்வொரு நாளும் ஆறுபேர் மரணமடைவது என்பது ஒரு போரில் அல்லது தீவிரவாத ஆக்கிரமிப்பு பகுதிகளில் கூட இதுவரை நடைபெறாத அளவுக்கு, மனித உயிர்களுக்கு மதிப்பேயில்லாமல் நடத்தப்படும், மோசமான மனித உரிமை மீறல்களை குறிக்கிறது. காவல்துறை மற்றும் நீதிமன்றக் காவல்களில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை கொடுமை மற்றும் சித்தரவதைகளுடன் தொடர்புடையவை. விசாரணைக்காக, வலுக்கட்டாயமாக ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக பல காவலர்கள் பல்வேறு வகையான சித்தரவதை முறைகளை கருவிகளாகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகின்றனர்.
இரண்டாவதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau - NCRB) 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான தரவுகள், மூன்றாண்டுகளில் மொத்தம் 239 நபர்கள் (தடுப்புக்கு காவலில் இல்லாத (not on remand) 140 நபர்களும், தடுப்புக்காவலில் இருந்த (on remand) 99 நபர்களும்) இறந்ததாகவும் தெரிவிக்கிறது. இதில் 93 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 104 பேர் நோயால் இறந்ததாகவும், 14 பேர் காவல் சித்திரவாதியால் இறந்ததாகவும், 28 பேர் மற்ற காரணங்களால் இறந்தததாகவும் தெரிவிக்கிறது. இந்த தரவுகளுக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தரவுகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. இது பெரும்பாலான கொலைகளில் வழக்கு பதியப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் சித்திரவதை செய்த காவலர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
மூன்றாவதாக, இந்த மூன்றாண்டுகளில், இந்தியாவில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக, போலீசாருக்கு எதிராக 13,498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால் வெறும் 45 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழகக்த்தில் 326 வழக்குகள் காவலர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளன; ஆனால், 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இது போலீசாரின் தண்டனை அற்ற செயல்பாடுகளுக்கும், கண்காணிப்பு இல்லாமைக்கும் ஒரு வெளிப்படையான அடையாளமாக அமைகிறது. இது மிகவும் வருத்தற்குரிய நிலையை வெளிப்படுத்துகின்றன.
இதனை ஒரு சாதாரண புள்ளிவிவரமாக மட்டும் கருதாமல், புகார்கள் மற்றும் தண்டனைகள் இடையிலான இந்த பெரும் வேறுபாடுகளைக் களைய, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, சீரான சட்ட நெறிமுறைகள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதைக் கடமையாகப் பார்க்க வேண்டும். காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகள் தனிப்பட்ட சம்பவங்களல்ல; அவை அன்றாடம் நடைபெறும், சமூகத்தில் உள்ள ஒழுங்கமைவின் தோல்வியைக் காட்டுகின்றன. இந்திய அரசமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படும் நிலையைக் காட்டுகின்றன என்பதை நம்மை ஆட்சி செய்ப்பவர்கள் உணர வேண்டும்.
ஐந்தாவதாக, நிலையான இயக்க செயல்முறைகள் ( (Standard Operating Procedures), பல்வேறு நீதி மன்றத் தீர்ப்புகள் / வழிகாட்டுதல்கள் (Judgements / Guidelines), தேசிய மனித உரிமை ஆணையம் உட்பட பல்வேறு நிறுவனங்களால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் (Advisories) இருந்தாலும், அவை சட்டபூர்வமான கட்டுப்பாடு இல்லாதபோது, வெறும் பரிந்துரைகளாகவே உள்ளன; அவற்றைச் செயல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் அதை யாரும் கண்காணிப்பதுமில்லை. இது தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை அற்ற சூழலை உருவாக்குகிறது; பொது மக்களுக்கு, சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. சித்திரவதையின் மூலம் ஒப்புக்கொள்ளல்கள் பெறப்படும் போது, விசாரணை தவறான திசையில் செல்வதுடன், நிரபராதிகள் தண்டிக்கப்படும் சூழல் உருவாகிறது. பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும், உடல், மன, பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆறாவதாக, இந்தக் கொடுமைகளுக்குள்ளாகும் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர், சிறுபான்மையினர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது சட்ட செயல்முறைகளின் சீரழிவை மட்டுமல்லாமல், சமூகப் பாரபட்சத்தின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்படும் குரலற்ற சமூகத்தின் உரிமைகளை உரிய சட்டங்கள் மூலம் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
ஏழாவதாக, சித்திரவதைக்குள்ளாகும் பலர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும்பாலான நேரங்களில் எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இழப்பீடு வழங்கப்படுவதற்கான அரசு நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. சில விசேடமான வழக்குகள் அல்லது நீதிமன்ற உத்தரவுகள் மூலம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறதே தவிர, பெரும்பாலான சித்திரவதை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக விட்டுக்கொடுக்க நேரிடுகிறது. அதனால்தான், சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு உரிய இழப்பீடு, சட்டத்திலேயே கட்டாயமாக்கப்பட வேண்டும்.
எட்டாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது சாட்சியாளர்களுக்கு சட்டப்படி உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதும் மிகக் குறைவே. போலீசாரின் எதிர்மறை பழிவாங்கும் நடவடிக்கைகள், மிரட்டல்கள், சமூக அடக்குமுறைகள் போன்ற அச்சுறுத்தல்களை கா எதிர்நோக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சம்பவத்தைக் கண்டவர்கள், காவலர்களுக்கு எதிராக சாட்சி அளிக்கப் பயந்து மறுக்கின்றனர். இது ஒரு கொடூரமான தவறான நீதி சூழலுக்கு வழிவகுக்கிறது. சாட்சியாளர் பாதுகாப்பு இல்லாமல், ஒரு விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பே இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிச் செல்லும் சூழல் நிலவுகிறது. இதனால் பொது மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றனர், மேலும் அரசாங்க அமைப்புகளின் மீது நம்பிக்கையும் குறைகிறது. அதேபோல், சாட்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது நீதிமுறை செயல்முறைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முக்கிய அங்கமாக அமையும்.
இறுதியாக, ஐக்கிய நாடுகளின் சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான உடன் படிக்கை (UNCAT - United Nations Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) என்பது 1984 இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான சர்வதேச மனித உரிமை ஒப்பந்தமாகும். இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டில் சித்திரவதையைத் தடை செய்ய சட்ட ரீதியான கடமை கொண்டுள்ளன. எந்தவொரு சூழ்நிலையிலும், போர் அல்லது அவசரநிலை போன்ற நேரங்களிலும்கூட சித்திரவதையை நியாயப்படுத்த முடியாது என்று இது திட்டவட்டமாகக் கூறுகிறது. சித்திரவதை செய்பவர்களை இனம்கண்டு, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, தகுந்த தண்டனை வழங்க உறுப்பு நாடுகள் கடமைப்பட்டுள்ளன. இது ஒரு கடுமையான கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும்.
ஒரு நபர் ஒரு நாட்டில் சித்திரவதை செய்யப்படுவதற்கான நியாயமான ஆபத்து இருந்தால், அவரை அந்த நாட்டிற்கு நாடு கடத்தவோ, திருப்பி அனுப்பவோ அல்லது ஒப்படைக்கவோ கூடாது என்று இந்த உடன்படிக்கை வலியுறுத்துகிறது. சித்திரவதைப் புகார்களை உடனடியாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் விசாரிக்க உறுப்பு நாடுகள் கடமைப்பட்டுள்ளன. மேலும், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் பிற நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். சித்திரவதை செய்யப்பட்ட நபர் எங்கு இருந்தாலும், குற்றம் நடந்த இடம் எதுவாக இருந்தாலும், சித்திரவதை செய்தவர் எந்த நாட்டில் இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க நாடுகளுக்கு அதிகாரம் உண்டு. சித்திரவதையைத் தடுக்கவும், சித்திரவதை செய்யப்படும் இடங்களை முறையாகக் கண்காணிக்கவும், பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சித்திரவதைக்கு வழிவகுக்கும் நிலைமைகளை நீக்கவும், உறுப்பு நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா இதில் அக்டோபர் மாதம் 1997 ஆம் கையொப்பமிட்டது. ஆனால் இதுவரை ஏற்புறுதி (Ratify) செய்யவில்லை.
காவல் நிலையக் கொடுமைக்கு எதிராக ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவது வெறும் சட்டச் செயல்முறை அல்ல; இது ஒரு நெறிமுறை கடமையாகும். UNCAT உடன்படிக்கைக்கு ஏற்ப அமைக்கப்படும் இப்படியான சட்டம், கொடுமையை தெளிவாக வரையறுத்து, அதனை குற்றமாக்கி, கடுமையான தண்டனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மீள்நலப்படுத்தல், விரைவான மற்றும் நடுநிலையான விசாரணைகள் ஆகியவற்றை உறுதி செய்யும். மேலும், கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கி, இந்தக் கொடுமைகளை அரசே கடுமையாக எதிர்க்கும் என்ற உறுதியை அளிக்க வேண்டும். இந்தியா தனது சர்வதேச உறுதிமொழிகளை உள்ளூர் சட்டச் செயல்பாடுகளாக மாற்ற வேண்டிய நேரம் இது. காவலில் உள்ள மக்களது உயிரையும், மரியாதையையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசு சட்டத்தை இயற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்த வேண்டும். மேலும், மத்திய அரசு சட்டம் இயற்றும் வரை காத்திருக்காமல், மாநில அரசு சட்டத்தை இயற்றி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
- பாலமுருகன் பழனியாண்டி