நம் நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் விடுதலை பெற்ற நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை விட இந்திய ஒன்றியம் தனித்துவம் கொண்ட நாடாக உலக அளவில் கோலோச்சுகிறது.

அதற்குக் காரணம் இந்நாட்டில் வாழும் எல்லா சமயத்தவர்களுக்கும் சம அளவில் உரிமைகள் வழங்கப்பட்டு இருப்பது தான்.

ஏனைய நாடுகளில் அந்நாட்டின் பெரும்பான்மை மதமோ அல்லது மொழியோ ஏனைய சிறுபான்மை சமூகங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதனால் இந்திய ஒன்றியத்தின் பெருமையை அந்நாடுகள் பெற முடியவில்லை.hindu nationalismஇந்திய விடுதலைக்குப் பிறகு மத சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆங்காங்கே பெரும்பான்மை மதவாத சிந்தனை வளர்ந்து வந்தாலும் சட்டரீதியாக சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்ந்து வருவதுதான் நமக்கான சிறப்பு.

அதேபோல் இந்தி மொழியின் மேலாதிக்கமும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத பண்பின் காரணமாக எல்லோரும் சமம் என்ற இந்திய இறையாண்மையின் அடிப்படையில் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் போற்றப்படுகிறது.

இந்தியச் சந்தை பன்னாட்டு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரம் அண்டை நாடுகளை விட நிலைத்தன்மையோடு திகழ்கிறது.

இந்தப் பெருமைகளை எல்லாம் அழித்து ஒழிக்கும் செயல் திட்டம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என்கிற முழக்கம். இது போன்ற செயல்பாடுகள் தேசத்திற்கு ஆபத்தானது.

மொழி, சமய பெரும்பான்மை வாதம் அண்டை நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை உருவாக்கியது. அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்தியாவிலும் வளர்ந்து வரும் ஹிந்தி ஹிந்துத்துவா என்ற ஒற்றைச் சார்பு சிந்தனைகள் இந்திய இறையாண்மையையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும்.

பல்வேறு இனம் மொழி சமயம் என்பதெல்லாம் தேசத்தின் பலம் . இதை பலவீனமாக கருதி ஒற்றை நிலைப்பாட்டிற்குள் தேசத்தை திசை திருப்புவது பெரும்பான்மை பாசிசம் ஆகும்.

அரபு நாடுகளைப் போல இந்திய ஒன்றியத்தை ஒற்றைச் சமய கோட்பாட்டுக்குள் திணித்து விட முடியாது. அங்குள்ள சூழலும் இங்குள்ள சூழலும் வேறு வேறு. முடியாட்சி கொண்ட அந்நாடுகளில் மாற்று இன குடியேற்றம் என்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் கூட மாற்றுச் சமய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு அனைத்து சமய நம்பிக்கைகளும் வளர்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகள் பல்வேறு சமயங்களின் மொழிகளின் பிறப்பிடம். பல இனக் குடியேற்றம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்று விட்டது.

அதனால் இந்த நாடுகள் ஒற்றை மொழிக்குள், ஒற்றைச் சமயத்திற்குள் சார்ந்து செயல்பட முடியாது. அப்படி செயல்படுவது தனிமனித பிறப்புரிமைக்கு எதிரானது.

ஹிந்துத்துவ அமைப்புகள் இந்திய ஒன்றியத்தை சனாதன் சார்ந்ததாகவும் சமஸ்கிருத மொழியின் ஆளுகையின் கீழும் நிலைநிறுத்த தொடர்ந்து போராடி வருகின்றன. இதை எதிர்த்து இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசும், பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் பெரும்பான்மை மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்திய ஒன்றியத்திற்குள் மிகச் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படும் சனாதன் தர்மம், குலதெய்வ வழிபாடு கொண்டவர்களையும், சமண, பௌத்த, சைவ, வைணவ இன்னும் பிற இந்திய தொல் சமயங்களை பின்பற்றும் மக்களை அவர்களின் மத நம்பிக்கைகளை தனது கோட்பாடு போல் சித்தரித்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமயங்களுக்கு எதிராக நிறுத்துகிறது.

இந்தியப் பெரும்பான்மை மக்கள் தங்களின் சமய தனித்துவத்தை இழந்து தங்களையும் அறியாமல் தங்களை சனாதன் என உணர்ந்து இம்மண்ணின் மக்களான இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களை எதிரிகளைப் போல எண்ணிட இந்த சனாதன் வாதிகள் பெரும் முயற்சி கொண்டு அதில் சிறிது வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு போன்ற அறிவிற் சிறந்த மாநிலங்களில் முற்போக்கு செயற்பாட்டாளர்கள் சனாதன் கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இதன் தாக்கம் இருந்தாலும் வட மாநிலங்களில் பிரிவினைவாத சனாதன் தர்மத்திற்கு பலியாகும் மக்களாக பெரும்பான்மையினர் உள்ளனர். அங்கும் திருமூலர், வள்ளலார், அம்பேத்கர், பெரியார் சிந்தனைகள் விதைக்கப்பட்டு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் சமரச சுத்த சன்மார்க்க நெறியால் சனாதனத்தை எதிர்கொண்டு இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை பாதுகாப்போம்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்.

Pin It