மனிதர்களை நம்புவதற்குத் தான் இத்தனை பிரயத்தனங்களும். பேராசை பட்டியலில் சேர்ந்து விட்ட போதிலும் மானுட இசையை மிக மெல்லிய கோட்டில் சந்தித்து விட முடியும் என்றே நம்புகிறேன். இருந்தாலும்... பெரும்பாறை திடும்மென பூலோகம் உருட்டுவதை வேடிக்கை பார்க்க முடியவில்லை. வெடிக்கிறது வானம்.

எத்தனையோ முறை பேசி விட்டோம். எழுதி விட்டோம். திட்டி விட்டோம். செருப்பாலும் அடித்து விட்டோம். பலன் இல்லை. எங்கேயாவது யாராவது அந்த திருட்டு வேலையை செய்தபடியே தான் இருக்கிறார்கள். பொருள் திருட்டுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். அறிவுத் திருட்டுக்கு ஒரே காரணம் தான்.... இயலாமை.

அது தான் அடுத்தவன் மூலமா புள்ளைய பெத்துக்கிட்டு அதுக்கு நான் தான் அப்பன்ங்கிறது...- இந்த மாதிரி மோசமான உவமைகளை சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். உறுதி களைய நேர்ந்தால் திருடர்களே பொறுப்பு.

எனக்கு தெரிந்து மாதம் ஒரு திருட்டு என் படைப்புகளில் நிகழ்கிறது. எழுதிய விரல்களும் சிந்தித்த மூளையும் பதறுவதைப் படைப்பாளிகள் அறிவார்கள்.

அம்மாம் பெரிய கட்டுரைய தூக்கி பதிய தெரிஞ்ச உனக்கு மூனே மூனு எழுத்து க வி ஜி இதை கூட சேர்த்துக்கணும்னு தெரியலல. இதுக்கு பேர் தான் எச்ச. கவிதை கட்டுரை கதை என்று திரும்பும் பக்கமெல்லாம் திருட்டு. எந்தக் குழுவில் போட்டாலும் அங்கொரு திருடன்/ திருடி புறங்கையை நக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். பெயரையே திருடின பொள்ளாச்சிக்காரி ஒருத்திய முந்தின வருஷம் பார்த்தமே.

எழுதுவது மூலம் தான் நம் எதிர்காலத்தை கட்டமைக்கும் திட்டத்தில் இருக்கும் நமக்கு இது போன்ற சில்லரைத்தனங்கள் எத்தனை மன உளைச்சலைத் தருகிறது என்று சொல்லால் சொல்ல முடியாது. சகா படைப்பாளர்களுக்கு புரியும். கையில் இருக்கும் தட்டு சோத்தை புடுங்கற மாதிரி அது.

பாஸ் உங்க கதை நல்லாருக்கு. நான் எடுத்துக்கிறேன். உங்க பேர் போட்டுக்கறேன். என்ன தரணுமோ தரேன் என்று சொல்ல எது தடுக்கிறது. எழுதுபவனை இந்த நாட்டில் தான் இப்படி இத்தனை கேவலமாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நோகாம நோம்பி கும்பிட அடுத்தவன் எழுத்து தான் கிடைச்சுதா. எந்தக் குழுவையும் நம்பி எதையும் பதிய முடிவதில்லை. ஒரு வரி சுருட்டு... இரு வரி திருட்டு என மொத்த எழுத்தையும் திருடி தன் பக்கத்தில் போட்டுக் கொள்வது மட்டுமின்றி கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாமல் தன் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். கண்ணாடி காரி துப்பாதா. அட கூட இருக்கற நண்பர்களாவது டேய் அறிவிலியே... உனக்கு எப்பிடி இப்படி எழுத வந்துச்சுனு சந்தேகப் படறது இல்லையா. கண்ண கட்டிக்கிட்டு மூளையை கழற்றி வெச்சுகிட்டு ஓடி ஓடி வாழ்த்த வேண்டியது. த்தூ..

காப்பி அடிக்க வாய்ப்பிருந்தும் தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் எழுதி வைத்து விட்டு வந்தவன் நான். இந்த மாதிரி திருட்டுப் பயலுகளை யோசிக்கையில் பதபதைக்கிறது.

நேற்று கூட நான் எழுதிய "நவரச நாயகன்" (https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/36897-2019-03-29-07-36-19) கட்டுரையை அப்படியே ஒரு வரி பிசகாமல் மறக்காமல் என் பெயரைத் தூக்கி விட்டு ஒரு நியூஸ் சேனல் போட்டுக் கொண்டது. பயபுள்ளைங்க 100 பகிர்வு. 300க்கு மேற்பட்ட விருப்ப குறியீடு. பின்னூட்டம்... சொல்லவே வேண்டாம். சும்மா குவியுது. அதே கட்டுரையை நான் பதிந்தால் 10 பேர் தாண்ட மாட்டாங்க. என்ன கணக்கு இது. பிரச்சனை நம்ம பேர் தான் போல.

பிறகு அடித்து பிடித்து அந்த குழுவின் தலைவருக்கு போன் பண்ணி... வயிறு பற்றி எரிய... நெஞ்சில் மாரடைப்புக்கு முந்தைய பதட்டத்தோடு விஷயத்தை சொன்னால்.. உங்களுதுனு ப்ரூப் பண்ணுங்க... எடுத்தர்றோம் என்கிறார். பண்பாகத்தான் பேச்சு இருந்தது. பொறுப்போடு தான் பேசுகிறார். ஆனால் நமக்கு அனல் பறக்கும் தானே. புரிந்து கொண்டு புரியாமல் பேசுவது போல தோன்றியது. என் படைப்பை என்னுதுனு சொல்ல நான் ப்ரூவ் காட்டணுமா. என்ன கண்றாவிடா இது. என் ரைட்டிங் ஸ்டைலே காட்டுமே. குட்டிக்கரணம் போட்டாலும் நம்ம ஸ்டைலில் எழுத முடியாது. திமிரா சொல்ல வேண்டிய இடத்தில் திமிராத்தான சொல்ல வேண்டி இருக்கு.

நல்லவேளை எப்பவுமே நமக்கு நம்ம தாய்வீடு "கீற்று" இருக்கிறது. கீற்றில் பதிந்து விட்டு தான் மற்ற பக்கம் பதிவது வழக்கம். அங்க சுளையா நம்ம நவரச நாயகன் உட்கார்ந்திருந்தார். கொத்தாக தூக்கி வந்து காட்டிய பிறகு... சற்று நேரத்தில் அதே கட்டுரையை வேறு மாதிரியாக மாற்றி நம்ம கட்டுரையை கிட்டத்தட்ட தூக்கி விட்டார்கள். நாம் விட்ட பாடல்களை எல்லாம் சேர்த்து... நம்மில் விடுபட்ட குறிப்புகளை ஒருங்கிணைத்து அந்தக் கட்டுரையை அப்படியே மெய்ண்டைன் பண்ணிக் கொண்டார்கள். எப்படி இருந்தாலும்.. கன்டென்ட் என்னது. ஆனால் போகட்டும். எழுத்து இல்லை. சந்தோஷம்.

நல்லபடியாக பதில் சொல்லி... தவறென்று தெரிந்ததும் அதை தவிர்க்க செய்த முயற்சிக்காக இந்த முறை பெயர் சொல்லவில்லை. அந்த மேலாண்மை நண்பர் கர்ட்டஸிக்கு கூட ஒரு சாரியோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. என்ன ஊடகப் பண்பாடு. கலாச்சாரம். கருமம் என்று தோன்றியது. தனக்கு தெரியாமல் இப்படி நிகழ்வதாக அவரே தடுமாறுகிறார். அப்புறம் எப்படி நியூஸ் சேனல் விளங்கும். இதே போல வேறு கட்டுரைகள் இருந்தால்... தெரிவியுங்கள். தூக்கி விடுகிறோம் என்கிறார். எனக்குத் தலையே சுற்றி விட்டது.

என் பெயரோடு உலகம் சுற்றும் என் கட்டுரைகளும் உண்டு. கேட்டு பதிந்து கொள்வார்கள். பார்க்கவே அத்தனை பசுமையாக இருக்கும். கேட்காமல் போட்டு விட்டு.... பிறகு அதை என்னுடையது என்று சொல்ல போராடச் சொல்வது ... இதெல்லாம் நல்ல பொழைப்பில் சேராது. மனம் கசிந்து தான் இத்தனை கடினமான வார்த்தைகளை பிரயோகப் படுத்த வேண்டியதாகி விட்டது. என்ன செய்வது. மீண்டும் சொல்வது...என் படைப்பை திருடினால் செருப்பால் அடிக்க தயங்காது என் எழுத்து.

- கவிஜி

Pin It