சிறுகதையைப் பொறுத்தமட்டில் இது தமிழுக்கு ஒரு புதிய வடிவம். அச்சு ஊடகம், (இந்தியத்) தேசியம் ஆகியவற்றோடு வளர்ந்த வடிவம். கவுரவமான பெண்கள், அதிலும் குடும்பப் பெண்கள் குறித்த ஒரு வரையறையைத் தேசியம் கட்டமைக்கிறது. இன்னொரு பக்கம் அச்சு ஊடகம் எழுத்தில் ஒரு சனநாயகத் தன்மையை உருவாக்குகிறது. யாரும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. சமயங்களில் இரண்டும் முரண்பட்டுக்கொள்கின்றன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெங்களூர் புட்டலஷ்மி நாகரத்தினம்மாள் என்னும் தேவதாசி குலத்தில் பிறந்த அம்மை, சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தஞ்சை மன்னன் பிரதாப சிம்மனின் அரண்மனை நர்த்தகியாக இருந்த முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தாவனம்’ என்னும் கவிதை நூலை அச்சிட்டு வெளியிட்டபோது கந்துகூரி வீரேசலிங்கம் பந்தலு போன்ற தேசியவாதிகள் அதற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான எதிர்ப்பு இங்கே கருதத்தக்கது. நாகரத்தினம்மை பதிப்பித்த நூலைத் தடை செய்வதற்கு நமது உயர்சாதி/ஆண்/தேசியவாதிகள் அந்நிய அரசுடன் இணைந்து நிற்கவும் தயங்கவில்லை. இன்றளவும் பெண் கவிஞர்களின் எழுத்துக்களுக்கு எதிராக மேலெழும்பும் ஆண் குரலகள்களின் தேசியப் பின்புலம் யாரும் எளிதில் கண்டுணரக் கூடியதே. ஆக, பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சிக்கல்கள் தொடங்குகின்றன.
தேசிய எழுச்சியின் முதற் கட்ட்த்தில் பெரும்பாலும் உயர் சாதியினரே ஈர்க்கப்பட்டனர். இல்லாதபோதும் சற்றுப் பின்னர் இங்கே எழுச்சி கொண்ட சுயமரியாதை இயக்கத்தில் ஓப்பிட்டளவில் பிற சாதியினர் பங்கு பெற்றனர். 1930களில் வடநாட்டில் உருவான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதேபோல ஒரு மாற்று நீரோட்டமாக விளங்கிகிறது. 1857களில் எழுச்சியுடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட உருது மொழியில் உருவான முஸ்லிம் எழுத்தாளர்கள் இந்த மாற்று நீரோட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். 1857களில் ஏற்பட்ட எழுச்சி தமிழ்ச் சூழலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (1906களில் பெரும்பாலும் தலித்துக்கள், ஒரு குறிப்பிட்ட அளவு முஸ்லிம்கள் பங்குப் பெற்ற ஒன்று. அயோத்திதாசர் போன்ற தலித் சிந்தனையாளர்களின் உருவாக்கத்தில் இதன் பங்கு ஏதும் இருந்ததா என்பது ஆய்வுக்குரியது.)
சுயமரியாதை இயக்கத்தால் எழுச்சி பெற்ற மூவலூர் ராமாமிதம், முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் தவிர எழுதவந்த பிற பெண்கள் அனைவரும் உயர் சாதியினராகவே இருந்ததையும் நாம் பார்க்கத் தவறலாகாது. பெண் வாசகிகளாக உருப்பெற்றவர்களும் அவர்களே. பெண் எழுத்துக்களைப் பற்றி நாம் யோசிக்கும்போது பெண் வாசகிகள் யார் என்கிற கேள்வி தவிர்க்க இயலாத ஒன்று.
ஒரு சிறுகதை என்கிற வடிவத்திற்குள் எந்த அளவிற்கு அடங்கும் என்கிற கேள்வியைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் மூவலூர் ராமாமிருத்தின் கதையே (தமயந்தி) இந்த எல்லையைத் தாண்டி விரிவான கேள்விகளை எதிர்கொள்கிறது. தேவதாசிப் பிரச்சனை, புரோகிதர் ஆதிக்கம், மூடநம்பிக்கை எனப் பலவிஷயங்களை உசாவுகிறது.
கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சார்ந்த வை.மு.கோதை நாயகியின் மொழிநடைக்கும் ராமாமிர்தம் மொழிநடைக்கும் உள்ள வேறுபாடு கவனிக்கத்தக்கது. தாமரை, பாமா, சிவகாமி, அனுராதா ஆகியோரின் கதைகளையும் நாம் இப்படிக் காண முடியும். இவர்களின் அனுபங்கள் சற்றே விசாலமானவை.
- அ.மார்க்ஸின் முன்னுரையிலிருந்து..
மீதமிருக்கும் சொறகள்
பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41 - B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 0098
பேசி : 26359906, 26251968
விலை : ரூ.275