சில தினங்களுக்கு முன்னால் மக்களவையில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் “..சமூகநீதிக் காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட விபி சிங் அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும், கான்சிராம் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். 2014ஆம் ஆண்டு கலைஞர் அந்த கோரிக்கை முன்வைத்தபோதே அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

இது அப்பட்டமாகவே பெரியாரை பார்ப்பன தேசிய மைய நீரோட்டத்தில் இணைத்திடும் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சதியாகும். தன் வாழ்நாள் எல்லாம் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரு மனிதனை, அவர் எந்த ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் எனப் போராடினாரோ, அதே கும்பலிடம் இருந்து அவருக்கான அங்கீகாரம் வேண்டும் எனக் கேட்பது அவரை இழிவு படுத்துவதோடு அவரின் கருத்துக்களை நீர்த்துப் போகச் செய்வதாகும்.

பெரியாருக்கு பாரத ரத்னாவைக் கேட்கும் திருமாவளவன் அவர்கள், பெரியார் தான் வாழ்வில் எந்த இடத்திலாவது பார்ப்பன இந்திய தேசியத்தை ஆதரித்துப் பேசி இருக்கின்றாரா என்று சொல்ல வேண்டும்.

“என் பிறவி காரணமாக, என் இழிவுக்குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடைய, என்னுடைய, தாய்நாடான தமிழ் நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழி செய்வதுமான ‘தனித்தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!” என்று சொன்ன பெரியாருக்கு…

periyar 468“தமிழ்நாடும், தமிழரும் தப்பிப் பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால், இந்தியக் கூட்டாட்சி என்கிற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ் நாடாக ஆக்கிக் கொண்டாலன்றி வேறு எக்காரணத்தாலும், எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது!” என்று சொன்ன பெரியாருக்கு…

“நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு, என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு, என் நடப்பு வேறு; உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?” என்று தன் வாழ்நாளில் இறுதியில் கூட இந்திய தேசியத்தின் மீது காறி உமிழ்ந்த பெரியாருக்கு பாரத ரத்னாவா?

திருமாவளவனுக்கு இது தெரியாதா? பெரியாரை இந்து மதத்துக்குள் சீர்திருத்தம் வேண்டி போராடிய ஒருவராகக் கட்டமைத்து அவர் தன் வாழ்நாள் எல்லாம் எந்த பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபட தனித்தமிழ்நாடு கேட்டாரோ அதை மறைத்து தன்னுடைய பாராளுமன்ற வாதத்திற்குள் அடைக்கப் பார்க்கின்றார்.

ஆனால் பெரியாரை ஓட்டு சீட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் முகத்தில் தரிசனம் செய்து ஏதாவது பிரசாதம் கிடைக்காதா என ஏங்கிக் கிடப்பவர்கள், பெரியாருக்கு பாரத ரத்னாவைக் கேட்ட திருமாவளவன் அவர்களுக்கு நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி பூரிப்பு அடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பாரத ரத்னா கொடுத்தால்தான் இந்தியா முழுவதும் பெரியாரைக் கொண்டு செல்ல முடியும் என முக்குகின்றார்கள்.

ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம். அது போன்று உள்ளது, உடன்பிறப்புகள் மற்றும் உடன்பிறப்புகளின் ஆவியால் ஆட்டுவிக்கப்படும் சில முற்போக்குவாதிகளின் கருத்துகள்.

“இவர்தான் பார்ப்பன பனியா இந்து தேசிய அரசின் கையால் பாரத ரத்னா விருது பெற்றவர். இவர் பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடியவர். இவரைப் படியுங்கள்” என்று சொன்னால் நம்மைப் பார்த்து காறித் துப்ப மாட்டானா?

பெரியார் இருந்திருந்தால் இது போன்றவர்களைப் பார்த்து "வெங்காயங்களா" என்றிருப்பார்.

சரி பெரியாருக்கு பாரத ரத்னாவைக் கொடுக்க வேண்டும் என திருமாவளவனே கோரிக்கை வைக்கின்றாரே... அப்படி என்றால் அது எவ்வளவு உயர்ந்த விருதாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.

பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுகிறது

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு முதன்முதலாக 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த மூவருமே பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாரத ரத்னா விருது பெற்ற 46 இந்தியர்களில் 29 பேர் பார்ப்பனர்கள் ஆவார்கள். 5 முஸ்லீம்கள், நான்கு காயஸ்தர்கள், மூன்று சூத்திரர்கள், மற்றும் தலித், பனியா, காத்ரி, பார்சி, கிருஸ்துவர் ஆகியோர் தலா ஒன்று பெற்றிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல பாரத ரத்னா விருது பெற்ற நான்கு பெண்களில், மூன்று பேர் பார்ப்பனர்கள் ஆவார்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் வெறும் 4 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் மொத்த பாரத ரத்னா விருதுகளில் 60 சதவீதத்தைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் உயர் சாதியினர்கள் மட்டும்தான்.

ஒரு பழங்குடியினருக்கு கூட இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

1955ல், இறந்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்ட பின்னால் கூட 1990 இல்தான் அம்பேத்கருக்கு அது வழங்கப்பட்டது. இந்திய மக்கள் தொகையில் 18 சதவீதம் உள்ள தலித்துகளில் அந்த விருதை வாங்க இத்தனை ஆண்டுகளில் ஒருவர் மட்டுமே தகுதியானவராகப் பிறந்திருக்கின்றார்.

பாரத ரத்னாவைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ எந்தக் கொள்கையும் பார்ப்பன பனியா ஒன்றிய அரசிடம் ஒருபோதும் இருந்ததில்லை. தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு லாபி செய்யும் வல்லமை உள்ள சிலருக்கே அந்த விருது வழங்கப்பட்டு வந்துள்ளது. ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் கூட பிரதமராக இருந்தபோதே பாரத ரத்னா விருது பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராஜா ராம் மோகன் ராய், ஜோதிராவ் பூலே, நாராயண குரு போன்றோருக்கு அந்த விருதுகள் வழங்கப்படவில்லை.

தற்போது மோடி அரசால் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள கர்பூரி தாக்கூர், லால் கிருஷ்ண அத்வானி, பி.வி.நரசிம்மராவ், செளத்ரி சரண் சிங், மற்றும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரில் மூன்று பேர் பார்ப்பனர்கள் ஆவார்கள்.

உண்மையில் விருது வாங்கிய ஒரு சிலருக்கு சாதியைக் கடந்து அதற்கான தகுதிகள் இருந்திருக்கலாம். மொத்தமாகப் பார்த்தால் விருது வாங்கிய 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்ப்பன பனியா தேசிய அரசியலுக்கு பக்க மேளம் வாசித்தவர்களாகவும், அதற்காக பாடுபட்டவர்களாகவுமே இருப்பார்கள்.

இப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பிம்ப உருவாக்கத்திற்காக கொடுக்கப்படும் ஒரு விருதை பெரியாருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்பதிலோ அதை நியாயப்படுத்துவதிலோ எள்ளளவு நேர்மை இருக்க முடியுமா?

தன் வாழ்நாள் எல்லாம், கடவுள் நம்பிக்கை அற்றவனாகவும் பகுத்தறிவுவாதியாகவும் வாழ்ந்த ஒருவனை அவன் இறந்த பின்னால், அவன் உடலுக்கு எல்லா வகையான சடங்குகளையும் செய்து, அவனது உடலைக் கொச்சைப்படுத்தும் சாதி சொந்தங்களுக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு?

அவர்களுக்கு சாதியைக் காப்பாற்ற வேண்டும்; இவர்களுக்கு தனித்தமிழ்நாடு கேட்ட பெரியாரை அதில் இருந்து விடுவித்து பார்ப்பன பனியா தேசியத்தில் பாராளுமன்றவாதத்திற்கு ஏற்றவராக அவரைக் கட்டமைக்க வேண்டும்.

ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளும், அவர்களின் கருத்தியல் கூலிப் படையாக செயல்படும் முற்போக்குவாதிகளும் எப்போதுமே மிகவும் ஆபத்தானவர்கள். குடிக்க காசில்லை இல்லை என்றால், வீட்டில் இருக்கும் அண்டா குண்டாவை விற்கும் குடிகாரனைப்போல சொந்த ஆதாயத்திற்காக கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி கொள்கைகளைத் திரித்தும் புரட்டியும் நீர்த்துப் போகச் செய்து விடுவார்கள்.

எனவே பெரியாருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனக் கேட்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் ஒரே நோக்கத்தில் இருந்துதான் கேட்கின்றார்கள். அது பெரியாரின் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு குழி தோண்டிப் புதைப்பதுதான்...

- செ.கார்கி

Pin It