கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேசம்’, ‘தேசியம்எதிர்ப்பு

map 350தேசம், தேசிய இனம், தேசீயம் என்பவைகளின் போலித்தன்மைகள் குறித்து 1928 லேயே விளக்கியுள்ளார் பெரியார்.

“ஆங்கிலத்தில் நேஷன், நேஷனல், நேஷனலிசம் என்கின்ற பதங்களின் பொருள்களேதான் தேசம், தேசத்திற்குரியது, தேசீயம் என்கின்ற பதங்களாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட தேச சமூகத்தின் சுயமரியா தையைப் பொருத்த விஷயங்களையே தான் பெரிதும் குறிப்பிடுகின்ற முறையில் அவ்வார்த்தை ஏற்படுத்தப்பட்டதே ஒழிய வேறில்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை யாராவது தேசீயம் என்பதை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய சுயமரியாதையைப் பற்றியோ நன்மையைப் பற்றியோ ஏதாவது கவலை எடுத்துக் கொள்ளத்தக்க குறிப்பு அதில் இருக்கின்றதா என்பதும் மிகுதியும் கவனிக்கத்தக்கதாகும்.

இந்திய மக்கள் சமூகத்தைப்பற்றியும் தமிழ் மக்களின் சமூகத்தைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் சீர்திருத்தத்தைப் பற்றியும் ஒரு சிறிது கவலையும் இல்லாது தேசீயம் என்கின்ற வெறும் வார்த்தையை மாத்திரம் பாமர மக்கள் ஏமாறும் மாதிரி உச்சரித்துக் கொண்டு சிலரின் உத்தியோகத்திற்கும் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகித்துக் கொண்டு உண்மையான தேசீயமாகிய சுயமரியாதையைப் பற்றிக் கவலை எடுத்துக்கொண்டிருக்கும் இயக்கங் களையும் குறை கூறிக்கொண்டு “சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டியது தேசீயத்தின் கடமை” என்று சொல்வதில் எவ்வளவு தேசீயத் துரோகம் இருக்கின்றது என்பதை பொது மக்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.- தோழர் பெரியார், குடி அரசு - 06.05.1928

மேற்கண்ட கட்டுரையின் முழுமையான வடிவத்திலும், இந்திய தேசியம், தமிழ்த்தேசியம் இரண்டையுமே தனித்தனியாக அடையாளப்படுத்தி எதிர்க்கிறார். ஒருவேளை இந்தக் கட்டுரையின் பொருளானது தேசம், தேசியம் என்பவற்றுக்கு ஆதரவாகத்தான் உள்ளது என்று யாராவது உறுதிப் படுத்தினால்கூட, அந்த ஆதரவிற்கும் அடிப் படையாக இருப்பது, “பார்ப்பனர்களுக்கு எதிரான சுயமரியாதையே” என்பதையும், பெரியார் கூறும் ‘தேசியம்’ என்பது, பார்ப்பன, இந்து மதத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்ச்சி தான் என்பதையும் மறுக்கமுடியாது.

அதேபோல, தேசம், தேசியம் என்பதைக் கடுமையாக எதிர்த்துள்ள உரை இலங்கைப்பேருரை. ‘இந்திய தேசியம்’ என்ற கருத்தைப் பார்ப்பனர்கள் தங்கள் ஆயுதமாகக் கையிலெடுத்த காலத்தில் தேசியத்தைப் பற்றி பெரியார் எதிர்த்துப் பேசி யுள்ளார். அதனால், இந்த எதிர்ப்பு என்பது ‘தேசியம்’ என்ற கருத்தியலுக்கு எதிரானது அல்ல என்று எவரும் மறுத்துவிட முடியாத அளவிற்கு, உலகில் உள்ள மற்ற நாடுகளின் தேசியங்களையும் சான்றாகக் காட்டி, தேசியத்தை மறுக்கிறார்.

“தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை - பாமர மக்களைப் பலி கொடுப்பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க் தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று தங்கள் செல்வத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால் அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப் பதாயிருந்தால்- இங்கிலாந்து தேசத்து முதலாளிகள், இங்கிலாந்து தேசத்து ஏழைமக்களையும் பாமர மக்களையும் பார்த்து “ஓ இங்கிலாந்து தேசீய வீரர்களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது. இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம் செய்விப்பார்கள்.

தேசீயம், தேசீயம் என்பதும் முற்கூறியவைகளை போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில், தேசீய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொதுமக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும் பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத் திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம் பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூøயாகும். தேசீயம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.” - குடி அரசு- 20.11.32

மேற்கண்ட உரையிலேயே, இரஷ்யப் புரட்சியைக் குறிப்பிடுகிறார். பல்வேறு தேசிய இனங்களையும் - தேசங்களையும் உள்ளடக்கிய நாடு இரஷ்யா. அந்த ஒன்றுபட்ட இரஷ்யாவில் எந்த வகையான ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்றுகூறி, அந்தவகைப் புரட்சிக்கு ஆதரவாக நிற்கிறார்.

“கடவுள், மதம், தேசீயம் ஆகியவைகள் அழிக்கப் பட்ட அடியோடு இல்லாத இடங்களில் மாத்திரம் பணக்காரக் கொடுமையும், சோம்பேறி வாழ்க்கையும், பட்டினி கஷ்டமும், உயர்வு தாழ்வு நிலையும் காணப்படவில்லை. அவ்வூராருக்கு கடவுள், மத, தேச அபிமானம் இல்லை. மனித சமூக சமத்துவ அபிமானம் மாத்திரமே பிரதானமாய் காணப்பட்டது. அங்கு பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, அதிகாரி - குடி ஜனங்கள் என்கின்ற வித்தியாசமே காணப்படவில்லை.

அந்நாட்டு மக்களுக்கு ஆண் பெண் அடங்கலுக்கும் ஏற்பட்ட தைரியமும், உயிருக்குத் துணிந்த வீரமும் சமத்துவ உணர்ச்சியும் கடவுளையும் மதத்தையும் நம்பிய தேசாபிமானமுள்ள எந்த நாட்டாரிடமும் காண முடியாதாயிருக்கிறது.- தோழர் பெரியார், குடி அரசு - 20.11.1932

இவ்வாறு தேசம், தேசியம் என்பவைகளுக்கு எதிராக இருந்தபோதும் - பல தேசிய இனங்களின் அடையாளங்களுக்கு மாற்றான - ஒன்றுபட்ட இரஷ்யாவை, ஒற்றைத் தேசியத்தை ஆதரித்த போதும், ஆரிய - பார்ப்பன - இந்து மத இழிவுகளின் அழிப்பே அதற்கு அடிப்படையாக இருந்தது.

தேசம்’, ‘தேசியம்ஆதரவு

உலகில் உள்ள அனைத்து தேசங்களையும், தேசியங்களையும் கடுமையாக எதிர்க்கிறார். அந்தக் கருத்தையே மறுக்கிறார். அதேசமயம். ‘இந்திய தேசம்’ என்பது, பல்வேறு தேசிய இனங்களை - பல்வேறு தேசங்களை இணைத்து உருவாக்கப்பட்டு -  அந்த இணைப்பு பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கருவியாக இருப்பதால் அதையும் எதிர்க்கிறார். ‘தேசம்’ என்ற கருத்தியல் இந்தியாவுக்குப் பொருந்துமா? என்று வினவி, தான் எதிர்த்த அதே தேசம், தேசியக் கருத்துக்களுக்கு ஆதரவான நிலையையும் எடுத்துள்ளார். 

“மதராஸ் ஒரு ‘நேஷன்’ அல்லவென்றும் அது தனித்து இருக்க முடியாது என்றும் தோழர் கே.பி.பிள்ளை சொன்னார். மதராஸ் ஒரு தனி நேஷனாய் இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் ‘திராவிடம்’. அதனுடைய நாகரிகம் ஆச்சார, அனுஷ்டானம் வேறு. வங்காளம், பம்பாய் வேறு. இங்கிலீஷ் ஆட்சியால் இங்கிலீஷ் பாஷையால்தான் ஒன்றுக்கொன்று நேச பாவமான அறிமுகமாவது ஆகி இருக்கிறது. இங்கிலீஷ் ஆட்சியும் பாஷையும் ஒழிந்து ஹிந்தி ஆட்சியும் பாஷையும் வந்தால் அன்றே மதராசானது ஜெர்மனி, இட்டாலி, பிரஞ்சு முதலிய ஏதோ ஒரு நேஷனுடன் கலந்துவிடும்.               - தோழர் பெரியார், குடி அரசு - 26.09.1937

“இந்தியா ஒரு ‘நேஷன்’ என்று சொல்வதைவிட, ‘திராவிடநாடு’ ஒரு ‘நேஷன்’, ஆந்திரநாடு ஒரு நேஷன், வங்காளநாடு ஒரு ‘நேஷன்’ என்று சொன்னாலும் பொருந்தும். உதாரணமாக திராவிட நாட்டை எடுத்துக்கொண்டால் திராவிடநாடு தனிக்கலை, தனிமொழி, தனி நாகரிகம், தனி ஆட்சியின் கீழ்  ஆயிரக்கணக்கான வருஷங்கள் இருந்து வந்ததென்று சரித்திரம் சாற்றுகிற தென்பதை யாராலும் மறைக்க முடியாது.

52 வித்தியாசமான ஆட்சிகளின் கீழ் இருந்துவரும் ஒரு நாட்டை ஒரு ‘நேஷன்’  என்று சொல்லி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தி அன்னியனிடமிருந்து விடுதலையடைந்து கொண்டு, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை சவாரி செய்யலாம் என்றால், இதை யார் ஒப்புக் கொள்வார்கள் என்று கேட்கிறோம். - குடி அரசு - தலையங்கம் - 28.01.1940

‘தேசம்’ என்பதை ஆதரித்த போதும், இன்றைய தமிழ்த்தேசியர்கள் பேசுவது போலக் கறாராக - தேசிய  இன வரையறைகளை வைத்துக்கொண்டு, மொழி அடிப்படையிலான தேசிய இன விடுதலையைப் பெரியார் முன்வைக்கவில்லை. ஆரியப் பண்பாட்டு எதிர்ப்பு - பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்ற அடிப்படையில், ‘திராவிடம்’ என்ற பெயரில் தான், தேசம், தேசியம் இவற்றை ஆதரிக்கிறார்.

சுயநிர்ணய உரிமைஆதரவு - எதிர்ப்பு

பார்ப்பன ஆனந்தவிகடன்,  கல்கி கிருஷ்ண மூர்த்தி, டி.டி.கிருஷ்ணமாச்சாரிகளும் இப்பார்ப் பனக் கும்பலால் தமிழ்த்தேசியத் தலைவர்களாக் கப்பட்ட சிலரும் 1947 இல் தான் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசத் தொடங்கினர். அதையும் 6 ஆண்டு களுக்குள் சுருட்டி வைத்துவிட்டு அமைதியாகி விட்டனர். தமிழ்நாட்டு அரசியலில் ‘சுயநிர்ணய உரிமை’ என்ற முறையிலான விடுதலைக்கும் பெரியாரே முதல் குரல் கொடுத்தார். 1940 லேயே சுயநிர்ணயஉரிமை என்ற பெயரில் போரைத் தொடங்கினார். 

“உண்மையிலேயே தமிழ்மகன் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்தால் தன்னைப் பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தித் தன்னை தாசிமகன், வேசிமகன், சூத்திரன் என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படாமலிருப்பானா என்று கேட்கிறோம. இந்த இழிதன்மை, மானங்கெட்ட வாழ்வு ஒழிய வேண்டுமானால் தமிழனுக்கு  சுய நிர்ணய உரிமையிருத்தல் வேண்டும் என்பது நன்கு விளங்கும்.

அதுபோலவே, தமிழ்நாடும், பிற நாடுகளுக்கு அதாவது ஆங்கிலேய நாடுகளுக்கு அடிமை யாயிருப்பது போய் வடநாடுகளுக்கு அடிமையாய் இருத்தலில் இருந்து விடுபட வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு சுய நிர்ணய உரிமையிருத்தல் வேண்டும் என்பது பளிச்சென்று விளங்கும்” -தோழர் பெரியார், குடிஅரசு - 11.02.1940

இந்தச் சுயநிர்ணய உரிமை என்ற பெயரிலும் கூட, தேசம், தேசிய இனவிடுதலை என்பவற்றைப் பெரியார் அடிப்படையாகக் கொள்ளவில்லை. ஆரிய, பார்ப்பன, இந்து மத இழிவுகளை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். அந்தச் சுயநிர்ணய உரிமை என்ற பெயரிலேயே பார்ப்பன ஆதிக்க முயற்சிகள் தொடங்கியவுடன், அந்தச் சுயநிர்ணயஉரிமையையும் எதிர்க்கிறார். அந்த எதிர்ப்பும் ஆரிய -பார்ப்பன - இந்துமத எதிர்ப் பையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

“இப்போது பார்ப்பனர்கள்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’, ‘தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப் படுதல் வேண்டும்’ என்றெல்லாம் பேசுகிறார்கள். எந்த அடிப்படையில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டதோ அந்த அடிப்படையைப் பார்ப்பனர்கள் தகர்த்துவிட்டனர். “நாங்களும் தமிழ் பேசுகின்றோம். ஆகையால்,  நாங்களும் தமிழர்களே என்று கூறத் தலைப்பட்டனர். இங்ஙனம் கூறுவதன் மூலம் இப்போது அவர்கள் எல்லாத்துறைகளையும் கைப்பற்றப் பார்க்கிறார்கள். எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒற்றுமையைக் குலைக்கும் என்று வம்பளக்கும் பார்ப்பனர்கள், தனியாக ஒரு மாகாணம் திராவிட நாட்டிற்குள் தோன்றுமானால், அங்கேயும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்துவர். அப்போது தமிழர்கள் இப்போதுள்ள இழிநிலையிலும், கேடுகெட்ட நிலைக்கு வந்து சேர நேரும்.”- விடுதலை, 26.04.1947

திராவிட தேசியம்

பெரியார் மீதும், அவர் பேசிய திராவிடம் மீதும் பார்ப்பனர்களும், பல பார்ப்பன அடிமைத் தலைவர்களும், தமிழ்த்தேசியத் தோழர்களும் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு என்னவெனில், “பெரியார் திராவிடத்தை ஆதரித்தார். அதனால் தான் காவிரி, முல்லைப்பெரியாறு நதிநீர்ச்சிக்கல்கள் வந்துள்ளன” என்பது தான்.

அதற்கு நாம் பதில் தரும்போது ‘திராவிடம்’ என்பதை நான்கு மாநிலங்களை அடிப்படையாக வைத்துப் பெரியார் பேசவில்லை. “திராவிடம் என்பது ஒரு ஆரிய - பார்ப்பன - இந்து எதிர்ப்புக் கருத்தியல்” என்று கூறுகிறோம். அந்தப் பொருளில் நானும் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.  திராவிடம் என்பது ஆரிய எதிர்ப்புக் கருத்தியல் என்பது உண்மைதான். அதேநேரம் பெரியார் “நான்கு மாநில ஒருங்கிணைப்பின் அடிப்படையில் திராவிட தேசியம்” என்ற நிலைப்பாட்டையும் முன்னெடுத்தார். உண்மைதான். அதை நாம் மறுக்கவோ - மறைக்கவோ வேண்டியதில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஒரிசா ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதிகள் இணைந்தது தான் சென்னை மாகாணம். சென்னை மாகாணத்தோடு இணையாத - தனி சமஸ்தானங்களும் திராவிட நாட்டுப் பகுதிகள்தான் என்றும் பெரியார் எழுதியுள்ளார். பெரியார் தனது திராவிட நாட்டின் எல்லையாக வரையறுத்த சென்னை மாகாண எல்லைக்குள்தான் கபினி, கிருஷ்ண ராஜசாகர், ஹேரங்கி, பெரியாறு அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இருந்தன. அந்த திராவிடநாட்டுக்குத்தான் பெரியார் போராடினார்.

அதை எதிர்த்துத் “தனித்தமிழ் அரசு” என்ற அடிப்படையில் இன்றைய மொழிவாரிமாகாணத் தமிழ்நாட்டைப் போராடிப் பெற்றவர்கள் மா.பொ.சி போன்ற தமிழ்த்தேசியர்கள் தான். நதிநீர்ச் சிக்கல்களுக்கு பெரியாரின் திராவிடநாடு முழக்கம் காரணமல்ல. மா.பொ.சி.யும் பார்ப்பனர்களும் கூட்டணி அமைத்துக் கோரிய தனித்தமிழ்அரசு தான் முழுமையான  காரணம். (இது தனி விவாதம். பிறகு விரிவாகப் பார்ப்போம்.)

திராவிடர் கூட்டமைப்பு

1939 இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் “திராவிடநாடு திராவிடருக்கே” என்று மாறுகிறது. தென்மாநிலங்கள் நான்கும் இணைந்தது தான் ‘திராவிட நாடு’ என்றும், “மொழிவாரி மாகாணங்களின் கூட்டமைப்பு” என்ற முறையிலும் அதை அறிவிக்கிறார். அதேசமயம் மிகக் கவனமாக ‘திராவிடர்’ என்ற அடையாளத்தில் பார்ப்பனர் களைத் தவிர்த்து, மற்ற அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கிறார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற போது எந்த அடிப்படையில் தனிநாடு கோரினாரோ, அதே அடிப்படையில் தான், திராவிட நாடு பிரிவினையையும் முன்னெடுத்தார். ஜாதி ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு, ஆரியப்பண்பாட்டு அழிப்பு என்பவையே இதற்கும் அடிப்படையாக இருந்தன.

“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலாகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் - இன்று திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது.

இந்த விஸ்தீரணத்துக்குட்பட்ட முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர் களும் ஆகிய எல்லோரும் திராவிடர் என்ற தலைப்பின் கீழ் வருவார்கள்.

...திராவிட நாட்டில் பல மொழிகள் இருக்கின்றனவே என்றால், இப்போது காங்கிரசு தீர்மானித்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டே, திராவிட தேசம் என்பது - அவசியப்பட்டால் திராவிட மொழி வாரியான மாகாணங்களைக் கொண்டதாக இருக்கும்.”-தோழர் பெரியார், குடி அரசு, 26.11.1939

“இந்நாட்டைப் பொறுத்தமட்டில், அதாவது தமிழ் நாட்டின் விடுதலையில், திராவிட நாட்டின் விடுதலையில், அக்கறையுடைய ஒவ்வொருவரும், இன்றே ஆரிய மதமாகிய இந்து மதத்திலிருந்த முதலில் விடுதலை பெற வேண்டும். 'அதற்காக நான் பாடுபடுவேன்" என ஒவ்வொரு வரும் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். இந்து மதத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் ஆரிய ஆதிக்கத்திலிருந்து, ஆரிய சூழ்ச்சியிலிருந்து, ஆரியத் தளையிலிருந்து விடுதலை பெறுவதாகும். தமிழர்களே! அந்நன்நாளை எதிர்பார்த்து ஆவன செய்யுங்கள்”.-தோழர் பெரியார், குடிஅரசு - 07.01..1940

பார்ப்பன - தமிழ்த்தேசியக்கூட்டு

பார்ப்பனர்களை விலக்கி, இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான நான்கு மாநில மக்கள் மற்றும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் அனைவரையும் ஒரே இனமாகக் கொண்ட திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் பெரியார் போராடுகிறார். அதன் விளைவாகத் தங்களது ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், மா.பொ.சி போன்ற தமிழ்த்தேசியர்களைத் தலைவர்களாக்கி,  ‘சுயநிர்ணயஉரிமை’ என்ற பெயரில் பார்ப்பன ஆதரவுத் தனித்தமிழ்நாட்டை முன்மொழிகின்றனர்.  ஒட்டுமொத்த இந்திய அரசுக்குக் கட்டுப்பட்ட  தனிநாடாக அதை உருவாக்க முயன்றனர். ம.பொ.சி எழுதுகிறார்,

“சுயாட்சிபெற்ற இந்திய மாகாணங்கள் அனைத்தும் கொண்ட ஓர் ஐக்கிய சர்க்காரின் அவசியத்தை எனது நூலில் வலியுறுத்தியுள்ளேன். தேசீயவாதி என்ற முறையில் மட்டுமல்ல; தமிழன் என்ற உணர்ச்சியோடு பார்த்தாலும்கூட இந்திய சமஷ்டியில் தமிழ்நாடு தனது நன்மைக்காகவேனும் இணைய வேண்டியது அவசியம் என்றே நான் கருதுகின்றேன்”. - ம.பொ.சி.யின் தமிழ்முரசு ஏடு, செப்டம்பர் 1946

இந்தியாவுக்கும், பார்ப்பனர்களுக்கும் கட்டுப் பட்ட அந்த சுயநிர்ணயஉரிமைத் தீர்மானம் 14.01.1947 இல் நிறைவேறியது. கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகிய இரண்டு பார்ப்ப னர்கள் உட்பட சில வெள்ளாளப் பிள்ளை மார்களும், காமராசரும் இணைந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினர். தமிழ்நாட்டில் அப்போது மிகவும் செல்வாக்குப் பெற்ற பார்ப்பன - பனியா ஊடகங்களான தினமணி, ஆனந்தவிகடன், கல்கி அனைத்துமே பார்ப்பன - தமிழ்த்தேசியர் கூட்டணி முன்மொழிந்த சுயநிர்ணய உரிமையை வரவேற்றன.

“சுதந்திர சோசலிசத் தமிழரசு” என்ற பெயரில் அந்தப் பார்ப்பனத் தமிழ்நாடு பிரபலமாக்கப் பட்டது. தமிழ்நாட்டு அரசியலில், பார்ப்பன எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட தனி நாடு என்பதற்குப் பதிலாக - வெறும் ‘மொழி’ அடிப் படையிலான, ‘தேசியஇனம்’ அடிப்படையிலான தமிழ்த் தேசிய விடுதலை வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாதகமான - தேசிய இன அடிப்படையிலான தனிநாட்டு முயற்சியைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழ்அரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.”- விடுதலை 11.04.1947

“மொழிவாரி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பலதடவை எடுத்துக்காட்டியுள்ளோம். மீண்டும் கூறகிறோம்..... மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர் மட்டும் கலந்து கொள்ளக்கூடாது.” - விடுதலை 21.04.1947

திராவிடர்நலனே திராவிடதேசியம்

வெறும் மொழியின் அடிப்படையிலும், தேசிய இனம் என்ற அடிப்படையிலும் ஒரு நாட்டைப் பிரிப்பது என்பதைத் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களும், வெள்ளாளப் பிள்ளைமார்களும் தொடங்கி வைத்தனர். பொதுவாகப் பெரியார் தொண்டர்கள் இந்த வகையான பார்ப்பன எதிர்ப்பற்ற நாட்டுப் பிரிவினை முயற்சிகள் தோழர் அண்ணா காலத்தில்தான் தொடங்கின என்று பயிற்சி வகுப்புகளில் பேசியுள்ளனர். அது சரியான வரலாறு அல்ல. பெரியாரின் தனிநாட்டு முயற்சிகளில் ‘திராவிடர் கூட்டமைப்பு’ என்ன பொருளில் இடம்பெற்றதோ, அதே பொருளில் தான் அண்ணாவும் ‘திராவிட நாட்டைப்’ பேசியுள்ளார். (அண்ணாவின் கட்டுரை தனியே இடம் பெற்றுள்ளது)

பெரியார் முன்மொழிந்த ‘திராவிட தேசியம்’ முற்றிலும் பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கங்களுக்கு எதிராக இருந்தது என்பதை அவரது வரிகளிலேயே பார்ப்போம்.

“தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிட வேண்டும். (அத்.10 சு,96)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்திக்கு அதிமாக பொருள் சம்மாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும்         (அத் 10 சு 129)

சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். (அத் 11 சு 13)

அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம், மனு தர்ம சாஸ்த்திரத்தில் 11 ஆம் அத்தியாயம் 20 சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் – அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யா தவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்த்திரமே இந்து மதத்திற்கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக்கூடாதென்றும், அவை எப்படியாவது ஒழிக்கப்பட்டே ஆகவேண்டு மென்றும் அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திராவிடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர்கழக திராவிடநாடு எழுச்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரநாடு, கேரளநாடு, கர்நாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ்திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும். - குடி அரசு-கட்டுரை-20.09.1947

“தோழர்களே, நமது கழகம் ஒன்றுதான் இன்று இந்நாட்டில் உண்மைத் தேசிய இயக்கம். எனவேதான், இத்தேசத்திய பழங்குடி மக்களான திராவிடர்களின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டு வருகிறது. திராவிடர்களின் நலத்திற்காகவே திராவிடநாடு பிரிவினையும் கோரிவருகிறது. திராவிடர் இனநலத்திற்குப் பாடுபடுவதுதான் திராவிட தேசியமாகும். பார்ப்பன இன நலத்துக்குப் பாடுபடுவது பார்ப்பன - ஆரிய - இந்து தேசியமாகும்.”            - விடுதலை, 21.02.1950

“அவரவர் மொழியைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அவரவருக்கு உரிமை உண்டு.  இந்த உரிமை திராவிட சோஷலிஸ்ட் குடியாட்சியில் பாதுகாக்கப் படும். எந்த ஒரு மொழியும், மற்றொரு மொழிக்காரர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது. ஆனால், மொழி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு, ‘தனி ராஜ்ஜியம்’ என்ற பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு, அரிசிக்கும் நூலுக்கும், சட்டத்துக்கும், பணத்துக்கும் டில்லி ஆட்சியிடம் மடியேந்தி நிற்கின்ற தன்மையினால் யாருக்கு என்ன லாபம்? தமிழிலோ, தெலுங்கிலோ, கன்னடத்திலோ, மலையாளத்திலோ ஆட்சி நிர்வாகம் நடைபெற்று விட்டதனாலேயே உழைப்பாளியின் வயிறு நிறைந்துவிடுமா? குஜராத்தியும், மார்வாரியும் தமிழில் பேசித்தானே உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்? ஏன்? தமிழில் பேசித்தான் தமிழ்நாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டு உழைப் பாளிகளைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள்?” - விடுதலை 23.04.1952

தனிநாட்டைவிட ஜாதிஒழிப்பே முக்கியம்

தமிழ்நாடு தமிழருக்கே, திராவிடநாடு திராவிடருக்கே என்று தொடர்சியான பரப்பு ரைகள், போராட்டங்களை நடத்தினார். இந்துமகா சபாவோடு பொதுச்செயல்திட்டம், இஸ்லாமியர் களோடு பொதுவேலைத்திட்டம், இஸ்லாமுக்கு மதமாற்றம், திராவிடநாட்டுப் பிரிவினை என்றெல்லாம் பல்வேறு வடிவங்களில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்.

ஆனால், பார்ப்பனர்கள் மிக எளிதாக, தமிழன், தமிழ்த்தேசியம், தேசிய இனம் போன்ற போதைகளை ஏற்றி, ம.பொ.சி போன்றவர்கள் மூலமாக மீண்டும் தங்களது ஆதிக்கத்தைத் தொடரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பெரியார், இந்தத் திராவிடநாடே கூட வேண்டாம். ஜாதி ஒழிப்பே முக்கியம் என்றார்.

“திராவிடநாடு பெறாவிட்டாலுஞ்சரி; பார்ப்ப னீயத்தை ஒழிக்க முடியாவிட்டாலும் சரி; முதலாளித் துவத்தை அழிக்க முடியாது போனாலும் சரி; ஜாதியை ஒழிக்கின்ற ஒரே காரியத்தை வெற்றி கரமாகச் செய்து முடித்தாலும்கூடப் போதும். இது ஒன்றே திராவிடர் கழகத்தின் இலட்சிய வெற்றி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த ஜாதி வெறியானது, திராவிட இனத்தைச் சின்னாபின்னப்படுத்தி ஆரியத்துக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.”-விடுதலை, 28.08.1952

அரசியல் சூழல் மாறுகிறது. இந்தியா முழுவதும் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டன. பெரியார் அறிவித்த திராவிடநாட்டு எல்லையானது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு எனத் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. உடனே எந்தத் தயக்கமும் இல்லாமல் மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று போராட்டத்தைத் தொடர்ந்தார்.

பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியா தையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும் பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. - தோழர் பெரியார், விடுதலை’ 12.10.55

மற்ற மாநிலங்கள் பிரிந்த பிறகு, “தனித்தமிழ்நாடு” என்ற நிலை எடுத்தபோதும், அதற்கும் முதல் காரணமாகப் பெரியார் கூறுவது, மற்ற மாநிலத்தவருக்கு இந்துமத இழிவு குறித்த அக்கறை இல்லை என்பதுதான். இந்தக் காலத்தில், தானே வலிந்து, மிக வலுவாகப் பரப்புரை செய்த திராவிட நாடு கூட்டமைப்பைத் தானே எதிர்க்கத் தொடங்கினார்.

திராவிடக் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு

“இப்போது திராவிடநாடுதான், மற்ற நாலு நாடுகளும் சேர்ந்ததுதான் வேண்டும் என்ற உணர்ச்சி உண்டா? ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியே திராவிடநாடு பிரிந்தால் நமக்கு என்ன லாபம்? இன்று எப்படி தமிழ் நாடு, பார்லிமெண்ட்டில் மற்ற 14 நாட்டுக்கும் அடிமை யாக இருக்கிறதோ, அதேபோல் நாளை மற்ற 3 நாடுகளுக்கும் அடிமை யாகத்தான் இருக்க வேண்டி வரும்.

தமிழ்நாடு 3 கோடி ஜனத்தொகை மலையாளி 1.25 கோடி கன்னடியன், 2 கோடி ஆந்திரக்காரன் 3.5 கோடி இவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நிலை? அவர்கள் 6.75 கோடி; தமிழன் 3 கோடி; நாம் மற்றவர்களுக்கு மைனாரிட்டியாகத்தானே இருப்போம்?

அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பார்லிமெண்ட் மெம்பர்கள் 87 பேர்கள். நம் தமிழ்நாட்டிற்கு 41 பேர்கள்தான். அதே மாதிரி சட்டசபை மெம்பர்கள், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் சுமார் 600 பேர்கள். நமக்கு 207 தான்.

மற்றபடி கடவுள், மத சாஸ்திர இழிவு ஒழிப்பு உணர்ச்சியோ, இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியோ அந்த நாட்டுக்காரர்களுக்குக் கிடையாது. அப்புறம் எதற்காக ஒரே ராஜ்யம்? எதற்காகக் கூட்டு வேணும்?”- தோழர் பெரியார், விடுதலை 24.05.1960

‘திராவிடநாடு கூட்டமைப்பை’ ஆதரித்து அறிவித்த போதும், ‘திராவிடர்’ என்ற இனத் திற்கான வரையறையில் பார்ப்பனர்களைச் சேர்க்க வில்லை. ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராகவே ‘திராவிட மொழிவாரி மாகாணக் கூட்டமைப்பை’ அறிவித்தார். திராவிட நாடு கூட்டமைப்பை எதிர்த்த போதும் ஆரிய -பார்ப்பன- இந்து மதத்திலிருந்து விடுதலைபெறுவதை அடிப்படையாகக் கொண்டே ‘திராவிட நாடு கூட்டமைப்பை ’ எதிர்க்கிறார்.

இனத்தூய்மைவாதம்

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. அதன் பிறகு “திராவிட நாடு கூட்டமைப்பு” என்பதைப் பேசவில்லை. மீண்டும் தனித்தமிழ்நாடு போராட்டங்களைத் தொடங்கினார். தனித் தமிழ்நாடு என்றாலும், இன்றைய தமிழ்த்தேசியர் களைப் போல இனத்தூய்மைவாதத்தை அடிப் படையாகக் கொள்ளவில்லை.

“இந்த நாட்டை நான் தான் ஆளணும்; நாங்கள் தான் ஆளணும் என்று நான் சொல்லவில்லை. எவன் ஆண்டாலும் சரி, இந்த நாட்டு மக்களை மனிதனாக மதிக்க வேண்டும். அதற்குப் பாடுபடவேண்டும். பாடுபட இடமளிக்க வேண்டும். இந்த இலட்சியத்தை முன்வைத்து யார் பாடுபட்டாலும், இதை எங்கெல்லாம் நான் கண்டாலும், அதற்கெல்லாம் நான் வலியப் போகிறவன், ஆதரிக்கிறவன்.”- சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டு உரை, விடுதலை.27.01.1959

உத்திரப்பிரதேசம் நீங்கிய தேசப்பட எரிப்பு

தனித்தமிழ்நாடு கோரி இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். அதற்கான அறிவிப்பில்,

“ஜாதி ஒழியவேண்டுமானால், அதற்கு மதம் இடம் தரவில்லை. பார்ப்பான் இடம் தரவில்லை. சட்டம் இடம்தரவில்லையானால், இவற்றிலிருந் தெல்லாம் பிரிந்துகொள்வது தானே?” -  இந்திய யூனியன் பட எரிப்பு அறிக்கை, விடுதலை 20.12.1958

என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1959 ஆம் ஆண்டு   ஒரு பிரச்சாரப்பயணத்தை மேற்கொண்டார் பெரியார். உ.பி மாநிலம் கான்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில்,

“இந்த ஆட்சியில் நாம் இருந்துகொண்டு சாதியை ஒழிக்க முடியாது...எனவே இந்திய தேசப்படத்தில் தமிழ்நாட்டை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டு மற்ற பாகத்தை நெருப்பு வைத்து எரிப்பது என்று தீர்மானித்து உள்ளோம். இப்படி எரிப்பதன் மூலம் உங்களின் உ.பி.யும் கூடத்தான் சேர்த்து எரிக்கப்படும். இதனால் மற்ற நாட்டை வெறுத்து எரிப்பது என்பதாகாது. நீங்களும் கூட சாதி ஒழிப்பிற்காக - பார்ப்பனர்களின் ஆதிக்க ஒழிப்பிற்காக நேரு ஆட்சியிலிருந்து விடுபட உங்கள் உத்திரப்பிரதேசத்தை மட்டும் கத்தரித்து எடுத்து விட்டு பாக்கிப் பகுதிகளைக் கொளுத்தலாம்.” - விடுதலை21.02.1959

என்றார். சாதி என்பது தமிழ்நாட்டில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்து மதம் உள்ள அனைத்து நாடுகளிலும் ஆதிக்கக் கருத்தியலாக இருக்கிறது. அதனால், உ.பி.யில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் நடத்திய போதும், அவர்களது ஜாதி இழிவு ஒழிய, அவர்களும் இந்தியப் படத்தைக் கொளுத்த வேண்டும் என்றார்.

தனிநாடு அவசியமில்லை

                இந்தியாவில் பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்த பிறகு, அதுவரை திராவிடநாடு கோரி வந்த தி.மு.க அந்தக் கோரிக்கையைக் கைவிட்டது. கோரிகைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று மட்டும் பேசி வந்தது. பெரியாரும் தனது தனிநாட்டு முயற்சியில் தீவிரத்தைக் காட்டவில்லை. அதற்கான காரணத்தை அவரே விடுதலையில் “நாட்டுப் பிரிவினை” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“திராவிடர்கழகத்தில் திராவிடநாட்டுப் பிரிவினை ஒரு கொள்கையாய் இருந்தாலும், காமராஜர் காங்கிரஸ் தலைவரானவுடன், சமதர்மம் - சோசலிசம் காங்கிரசின் கொள்கையாக ஆக்கப்பட்டு விட்டதால், அது தக்கபடி அமலுக்கு வந்தால், திராவிடநாடு பிரச்சனை அவசியமாக இருக்காது - அல்லது கூடாததாய் இருக்காது - என்று கருதி அதிகமாய்ப் பிரஸ்தாபிக்காமல் இருந்தோம்.”- விடுதலை 30.03.1967

காமராசர் ஆட்சி நீடித்தால் ஜாதி ஒழிப்பு, சமதர்ம வேலைத்திட்டங்களை நிறைவேற்றி விடலாம் என்று கருதி, தனது தனிநாட்டுக் கோரிக்கையை அதிகமாகப் பேசவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். 1965 - 1967 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக காங்கிரசு தோற்று, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இடையில் சில மாதங்கள் மட்டும் தனித்திருந்து தனித்தமிழ்நாடு முழக்கம் மீண்டும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

“வகுப்புநீதிக்காகவும், வகுப்புரிமைக்காகவும் தமிழர் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாடு, இந்திய யூனியனில் இருந்து பிரிந்து, சுதந்திரத் தமிழ்நாடாக வேண்டியது அவசியமாகும். 1968 ஏப்ரல் 14 ஆம் நாளை டில்லி ஆதிக்கக் கண்டனநாளை சுதந்திர எழுச்சிநாளாகக் கொண்டாடுங்கள்.”

என்று அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு பிரிவினைக்காக சென்னை, பெரியார் திடலில் 1968 ஏப்ரல் 14 ஆம் நாளில் டெல்லி ஆதிக்கக் கண்டன நாளை நடத்திக்காட்டினார்.

கீழ்வெண்மணிக்குத் தீர்வாகத் தனித்தமிழ்நாடு

இந்தச் சூழலில்தான், உலக அளவில் தமிழ் நாட்டை வெட்கித் தலைகுனிய வைத்த கீழ்வெண் மணிப் படுகொலைகள் நடந்தன. நாயுடுக்களின் ஜாதி ஆணவத்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் குழந்தை குட்டிகளோடு, ஆண், பெண் அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அப்போது பெரியார், கடுமை யாக எதிர்வினை ஆற்றவில்லை என்ற குற்றச் சாட்டைப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், பெரியார், கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடக்காமல் இருக்க, இந்தநாடு ஜனநாயகத் திலிருந்து மன்னராட்சியாக மாறவேண்டும் அல்லது அந்நியர்கள் ஆட்சி ஏதாவது வரவேண்டும் என்கிறார். முக்கியமாக, தனித்தமிழ்நாடு உருவாக வேண்டும் என்றார்.

“இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால், ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம்வரை கொண்டுவந்து விட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரசநாயகமாகப் போகவேண்டும் அல்லது தனித்தமிழ்நாடு பிரித்துத் தர வேண்டும். அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வரவேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -தோழர் பெரியார், விடுதலை 28.12.1968

கீழ்வெண்மணிப் படுகொலைகளுக்கு எதிராகத் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்த பெரியார், அந்த அறிக்கைக்குப் பிறகு, தனது இறுதிக்காலம் வரை, மரண சாசனமாக இறுதி உரை ஆற்றிய நாள்வரை “ஜாதி ஒழிப்புக்காகவே தனித்தமிழ்நாடு” என்ற தனது தொடக்கக் கால நிலைப்பாட்டில் மாறாமல் இருந்தார்.

இனஇழிவு ஒழியவே தனிநாடு

“நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக் காமல் நாம் இருக்க முடியுமா?

இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தான் இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசிமக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க கருதுபவர்களாவார்கள். ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாச்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம்”. -தோழர் பெரியார், 95 வது பிறந்தநாள் மலர் 17.09.1973

தமிழர்களே! பிரிவினைக்காகப் பிரிவினை கேட்கவில்லை. நான் சூத்திரன், தாசிமகன் என்ற இழிவுநீங்கப் பிரிவினை தவிர வேறு வழிஎன்ன? - விடுதலை, பெட்டிச்செய்தி 30.10.1973

பிரிவினை என்பது ஒரு கருவியே

இறுதிக்காலம் வரை தனிநாடு கோரினார். ஆனால், எந்த நிலையிலும், தேசிய இனவிடுதலை அடிப்படையிலோ, வெறும் மொழி அடிப் படையிலோ, தனிநாடு உருவானால் போதும், அதன் பிறகு எல்லாப் புரட்சியும் ஏற்பட்டுவிடும் என்ற அடிப்படையிலோ நாடு கேட்கவில்லை.

1958 ஆம் ஆண்டில் இருந்து இறுதிவரை, தனது பல உரைகளில் 1957 ஆம் சட்ட எரிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, அப்படி ஒரு பெரும் போராட்டம் நடத்திய பிறகும் அரசியல் சட்டத்திலிருந்து ‘இந்து லா’ வை ஒழிக்க முடியவில்லை. சாதியை ஒழிக்க முடியவில்லை. எனவே பிரிவினை கேட்கிறோம்.  “நாடு பிரிக்க வேண்டும் என்பதற்காக பிரிவினை கேட்கவில்லை” என்பதை ஏராளமான அறிக்கைகளிலும், உரைகளிலும் விளக்கியுள்ளார். ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்கிறேன்.

நானேகூடப் பிரிவினை கேட்கவில்லையே. எங்கள் மீதுள்ள இழிவு நீக்கப்படவில்லையானால், பிரிந்து போவது தவிர வேறு வழியில்லை என்றுதான் சொல்லுகிறோம். - விடுதலை 15.11.1973

இந்திராகாந்தி அம்மையார், மக்கள் நாட்டுப் பிரிவினை கேட்கக்கூடாது. இந்தியக் குடிமகனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் இருந்தால், இந்திய ஆட்சியில் பிராமணன் இல்லை, சூத்திரன் இல்லை, பார்ப்பானின் தாசிமகன் இல்லை. எல்லாக் குடிமக்களும் சமஅந்தஸ்து உள்ள சகோதரத் தன்மை உள்ள மக்கள் ஆவார்கள் என்று சட்டம் செய்யட்டும். ஜனாதிபதியைக் கொண்டு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யட்டும். அப்படி இல்லா விட்டால் பிரிவினைதான். பிரிவினை தான். பிரிவினை தான். முக்காலும் முடிவு ஆக வேண்டியது ஆகும். நான் இன்று பிரிவினை கேட்கவில்லை. கேட்கிறேன் என்றால்  நிபந்தனை இல்லாமல் கேட்கவில்லை. - விடுதலை, 23.11.1973

நாங்கள் பிரிவினைக்காகப் போராடுவது போலவும், பிரிவினைக்காகக் கிளர்ச்சி மேற்கொள்ளுவதாகவும் மத்திய ஆட்சி பொய்யாகக் காரணம் கற்பித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது.  நாம் நம்மீது புகுத்தப் பட்டுள்ள இழிவு - சட்டத்தில் நிலைத்து உள்ளதை மாற்று, எங்களை மனிதத் தன்மையுள்ள மக்களாக வாழவிடு என்றுதான் கேட்கிறோம்.

அப்படி மாற்ற இஷ்டம்  இல்லை என்றால் நீ ( மத்திய ஆட்சி) எங்கள் நாட்டைவிட்டு வெளியேறு; நாங்கள் எங்கள் நாட்டை ஆண்டு கொள்கிறோம். எங்கள் இழிவு, குறைபாடுகளைப் போக்கிக் கொள்கிறோம் என்றுதான் கூறகின்றோம்.- விடுதலை 14.12.1973

நாம் எல்லோரும் இன்றைய தினம் ஈனசாதியாய், சூத்திரர்களாய், பார்ப்பானின் தாசி மக்களாக இருக்கிறோம். இது எதில் இருக்கின்றது என்றால், சாத்திரங்களில் மட்டுமல்ல; சட்டத்தில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் உள்ளது. இதனை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு உள்ளோம் என்றால், முயற்சி என்றால், என்ன பண்ணியாவது ஒழிக்க வேண்டும் என்கின்ற முடிவில் இறங்கியுள்ளோம். நமது இழிவுக்குப் பரிகாரம் கிடைக்காவிட்டால், இந்திய ஆட்சியில் இருந்து நாம் விலகியாக வேண்டும். - விடுதலை 17.12.1973

தோழர் பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு 19.12.1973 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அந்த உரை மரணசாசனமாக வெளியிடப் பட்டுள்ளது. ஒலிவடிவிலும் கிடைக்கிறது. அதிலும் ஜாதி ஒழிப்பையே முதன்மையாக அறிவிக்கிறார். ஜாதி ஒழிப்புக்காகவே தனிநாடு என்பதையும் தெளிவாக விளக்குகிறார்.

ஆரிய - பார்ப்பன - இந்துமத அழிவே இலக்கு

பெரியார், தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய அனைத்து அரசியல், பொருளாதாரச் சூழல் களையும், சர்வதேச அரசியல் போக்குகளையும் தனது ஆரிய - பார்ப்பன - இந்துமத ஒழிப்புக் கொள்கைக்குச் சாதகமாக மாற்றப் போராடி யுள்ளனர்.  ஒவ்வொரு  மாற்றத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளார். கருவிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காத போது, எவ்விதத் தயக்கமும் இன்றி அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

“தமிழ்நாடு தமிழருக்கே” என்பதைத் தொடங்கினார். பின்பு எதிர்த்தார். இறுதிக்காலத்தில் மீண்டும் தொடங்கினார். சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதற்குரல் எழுப்பினார். பின்பு எதிர்த்தார். “தேசம், தேசிய இனம்” ஆகிய கருத்தியல்களை எதிர்த்தார். பின்பு ஆதரித்தார். மீண்டும் எதிர்த்தார். அகில இந்திய அளவில் திராவிடஸ்தான் கோரினார். அதற்காக வேலைத் திட்டங்களைத் தீட்டினார். இந்து மகாசபை யோடுகூட கூட்டுச் சேர்ந்தார். அதே திராவிடஸ் தானுக்காக ஜின்னாவோடும், முஸ்லீம் லீக் உடனும் கூட்டணி ஏற்படுத்தினார்.

நாடு பிரிக்கும் வேலைகளில் தொய்வு ஏற்பட்ட போது, பிற்படுத்தப்பட்டோரும் இனஇழிவு நீங்க இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று முழங்கினார். அகில இந்திய திராவிட நாட்டைக் கட்டிஎழுப்ப முயற்சித்தார். பிறகு அதை எதிர்த்தார். திராவிட தேசியத்தை முன்னெடுத்தார். திராவிட நாடு கூட்டமைப்பை முன்னெடுத்தார். பிறகு இவை இரண்டையுமே எதிர்த்தார். இறுதிக்காலங்களில் மீண்டும் தனித்தமிழ்நாட்டுக்காகப் போராடினார்.

இப்படி எவ்வளவோ மாற்றமான - முரண்பாடான - எதிர் எதிர் நிலைப்பாடுகளை எடுத்தார். ஆனால், எல்லா மாற்றங்களிலும், எல்லா முரண்பட்ட நிலைகளிலும் ஒரே அடிப்படையைக் கொண்டிருந்தார். பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனிய ஆதிக்கம், இவற்றுக்குக் காரணமான இந்து மதம், இந்து மதத்தைக் காப்பாற்றும் கடவுள், வேதங்கள், சாஸ்திரங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை -  இது ஒன்றுதான் பெரியாரின் அடையாளம் - பெரியாரின் உயிர்மூச்சு.

தனித்தமிழ்நாடு, திராவிட நாடு, சுயநிர்ணய உரிமை, திராவிடஸ்தான், அகில இந்திய திராவிடஸ்தான், திராவிடர் கூட்டமைப்பு எல்லாமே பெரியாரின் அடிப்படைக் கொள்கையைச் செயல் படுத்தப் பயன்படுத்தப்பட்ட கருவிகள். எதிர் காலத்தில் இதே கருவிகள் மீண்டும் பயன்படலாம் அல்லது புதிய கருவிகள் தோன்றலாம்.

தமிழ்த்தேசிய - தற்சார்பு முயற்சிகள்

இந்தியாவில், பிரிவினைவாதத் தடைக்குப் பிறகு, பெரியாரைத் தவிர வேறு எவரும் தனித் தமிழ்நாடு என்பதை மக்கள் விடுதலை என்ற நோக்கில் முன்னெடுக்கவில்லை. அதாவது, பார்ப்பன அதிகாரத்தையும் - பார்ப்பனிய சமுதாய அதிகாரங்களையும் எதிர்த்து, அதிலிருந்து விடுதலை பெறுவதை முதன்மையாக வைத்து எவரும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுக்கவில்லை. பயிற்சி வகுப்புகளிலும், அரங்கக்கூட்டங்களிலும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் பெரியாரின் தனித்தமிழ்நாடு குறித்துப் பேசினாலும், அதற்கான வேலைத் திட்டம் எதுவும் எந்தத் திராவிடர் இயக்கத்திலும் இல்லை.

அப்படி அதற்கான வேலைத்திட்டங்களைத் தீட்டினால், பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி, மத ஒழிப்புக்கருத்தைப் பேசுவதற்கேகூட ஆள் இல்லாத நிலைவந்துவிடலாம். இந்த நிலையில் 1936 ஆம் ஆண்டு பொதுவுடைமைக்கொள்கைக்குத் தடைவிதிக்கப்பட்ட போது, பெரியார் எடுத்த நிலைப்பாட்டைத் தான் இன்று அனைத்து திராவிடர் இயக்கங்களும் மேற்கொண்டுள்ளன.

...சர்க்காரார் பொதுவுடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப் பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது. அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம்கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும்.

...நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப் புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன்.

சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும் “வீரப்”பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.

...ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சு.ம. இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அநுகூல மாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடமை என்றோம். சர்க்கார் பொதுவுடமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது. மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்க மில்லாமல் போகவில்லை.- குடி அரசு - 29.03.1936

எனவே இந்தச் சூழலில், தனித்தமிழ்நாடு தான் பெரியாரின் கொள்கை. அதற்காகப் போராடாத இயக்கங்கள் பெரியாருக்குத் துரோகம் செய்கின்றன என்று யாராவது கூறினால், திராவிடர் இயக்கங் களின் தோழர்கள் கோபப்பட வேண்டியதில்லை. இந்து மதத்தையும், அது உருவாக்கியுள்ள ஜாதி, ஆணாதிக்கப் பண்பாடு, பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சிறிது இடமிருந்தாலும், அதற்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவதற்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய இனவிடுதலை, தற்சார்புத் தமிழ்நாடு, தமிழ்த்தேசியத் தற்சார்பு, தேசிய சுயநிர்ணயம், தமிழ்த்தேசியத் தன்னுரிமை போன்ற பலவகையான வார்த்தை விளையாட்டுக்களை அண்மைக் காலமாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையான வார்த்தை விளையாட்டுக்கள் எவற்றுக்கும் நாம் எதிரிகள் அல்ல. சொற்சிலம்பம் ஆடுவதை விட்டுவிட்டு அவர்கள் யாராவது செயலில் இறங்கி, தனித்தமிழ்நாடு என்று வெளிப் படையாக அறிவித்துப் போராடினால், நாம் வரவேற்போம்.

இந்தச் சொற்சிலம்பம் ஆடுபவர்கள் முன்னெடுக்கும் தேசியஇன அடிப்படையிலான தனிநாட்டைப் பெரியார் கோரவில்லை. இது போன்ற தேசியஇன விடுதலையைத்தான் 1946 இல் ம.பொ.சி. யை முன்வைத்துப் பார்ப்பன டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த விகடன்கள் முன்னெடுத்தன. பெரியாரியலை ஒழிக்கப் பார்ப்பனர்கள் திட்ட மிட்ட அந்த முயற்சியில், ம.பொ.சி. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பும் பேச வைக்கப்பட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியாரை எதிர்த்து மட்டும் அல்ல; பெரியாரை ஆதரித்தும் பெரியாரியலை அழிக்கத் துணிவார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்குப் புரியவைக்கிறது. திராவிடர் இயக்கங்களின் தோழர்கள் அந்த வரலாறுகளைக் கவனமாகப் படியுங்கள்.

சான்றுகள்:

‘குடி அரசு’ தொகுப்புக்கள், திராவிடர் கழக வெளியீடுகளான ‘வடநாட்டில் பெரியார்’, ‘பெரியார் களஞ்சியம்.6, தமிழ்க்குடியரசுப் பதிப்பக வெளியீடான, கவிஞர் கருணானந்தம் எழுதிய ‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ விடியல் பதிப்பக வெளியீடான, ‘பெரியார் இன்றும், என்றும்’, தோழர் எஸ்.வி.இராஜதுரை - வ.கீதா எழுதிய, ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’, ‘பெரியார் ஆகஸ்ட் 15’,  ‘மரபும் திரிபும்’ ஆகிய நூல்கள்.