கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நூல் வெளியீட்டு விழாவில் எஸ்.வி.ஆர். கேள்வி

தமிழ்ப் பண்பாடு என்று கூறிக் கொண்டு சாதியையும் - பெண்ணடிமையையும் ஏற்க முடியுமா என்று - ‘பெரியார் ஆக.15’ நூல் வெளியீட்டு விழாவில் எஸ்.வி.ராஜ துரை கேட்டார்.

பிப்.18-இல் ஈரோட்டில் நடந்த விழாவில் எஸ்.வி.ஆர். ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

பெரியாரியின் அத்தனை நூல்களும் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படல் வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் தமிழ்நாடு விடுதலை அல்லது சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறபோது நம் போன்றே இந்திய பார்ப்பன, பனியா சட்டங்களால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும், பிற தேசிய இன, மொழி பேசும் உழைக்கும் மக்கள், தலித், பெண்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒத்துழைப்பு தேவை. அது இன்றே நடக்கும் எனவும் நான் நினைக்கவில்லை.

ஒரு மார்க்சியவாதி என்ற கண்ணோட்டத்தில் இருந்து தேசிய சுயநிர்ணய உரிமை அல்லது விடுதலை என்பது முற்றும் முடிவான ஒரு முடிவாக நான் எண்ணவில்லை. மீண்டும் உலக சமுதாய விடுதலையை நோக்கிய ஒரு இடைக் காலப் பயணம் என்றே கருதுகிறேன்.

பெரியாரின் இலக்கு தமிழ்நாடு தான்

பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஊட்டம் பெற்ற தலைவர்கள் திராவிட நாடு என்றும், தென்னிந்தியா என்றும், தென்னாடு என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்தாலும்கூட, தமிழர்கள் தான் அவர்களின் “ஆடியன்ஸ்”. அதற்கப்பால் அவர்கள் போகவே இல்லை. தந்தை பெரியாரின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.

இந்தியாவில் எந்த ஒரு சாதி எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும்கூட பெரியார் இயக்கத்தைப் போல், மிகப் பெரிய தாக்கத்தை வேறு எந்த இயக்கமும் ஏற்படுத்தவில்லை.

அம்பேத்கர் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோரின் தலைவராகக் கருதப்பட்டாலும், அவருடைய நேரடித் தாக்கம் மராட்டியத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்கிறது. ஒரு பெயரளவுக்கு மற்றவர்களால் போற்றப்படலாம், உத்திரப்பிர தேசத்தில் அம்பேத்கர் பெயரைச் சொல்லிக் கொள்ளலாம் - ஆனால் அவர்கள் பின்பற்றுவது அம்பேத்கர் பாதையை அல்ல!

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என அவர் கூறியது மந்திரி சபை அமைத்து, எம்.எல்.ஏ., முதலமைச்சர், எம்.பி ஆவதற்காக அல்ல!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மற்றும் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் மேட்டுக்குடி அக்கறையோடு இருந்தவர்கள் அல்ல. அவர்களில் பலர் அடித்தட்டு மக்கள் மீது அக்கறைக் கொண்டவர்கள். அவர்கள் வெள்ளைக்காரர்களிடம் தமது கருத்துக்களைச் சொல்வதற்கு ஆங்கிலம் இன்றியமையாததாக இருந்தது.

சுயமரியாதை இயக்க முன்னோடிகளான லீலாவதி அம்மையார், குஞ்சிதம் அம்மையார், இராமநாதன், முத்துச்சாமி, வல்லரசு போன்றோரெல்லாம் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்கள்.

அதனால்தான் நீதிக்கட்சி ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தியது. இதே காரணத்திற்காகத் தான் பெரியார் ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை 1927 முதல் 1930 வரை நடத்தி வந்தார்.

வர்க்கப் போராட்டமும், சாதி ஒழிப்புத் திட்டத்தையும் ஒரு சேர மக்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கும் புரட்சிகர சக்திகளுக்கு, போதுமான அளவுக்கு தந்தை பெரியாரின் கருத்துகள் போய்ச் சேராமைக்கு, பெரியாரின் எழுத்துக்கள் நூல் வடிவில் ஆங்கிலத்தில் அதிகம் கிடைக்காததுதான் காரணம் என்று வலியுறுத்திக் கூறுகிறேன்.

மிகுந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்த ‘பெரியார் ஆகஸ்டு-15’ நூலை வெளியிடுகிறோம். இதற்கிடையில், இந்தியாவின் மிகச் சிறந்த சாதி ஒழிப்பு, வர்க்கச் சுரண்டல் ஒழிப்புவாதியான முனைவர் ஆனந்த் டெல்மும்ப்டே அவர்கள் நூலை மொழி பெயர்க்கும் பெரும் பொறுப்பும் என்னிடம் சேர்ந்து கொண்டது.

அவர் இங்கிருக்கும் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத - தங்கள் மீது அடிமேல் அடிவிழுந்தும்கூட அதை எதிர்த்துப் போராட துணிவில்லாத, கோழைகளான, நேர்மையற்றவர்களாக - தலித் சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக, தலித் உரிமை பற்றிப் பேச தங்களுக்கு மட்டுமே உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவரைப் போன்றவர் அல்லர். பெரியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர், அவர்!

இந்த நூலை வெளியிடுவதற்காக நானும், தோழர் கீதாவும் ஏழு ஆண்டுகள் பெரியார் திடலுக்குச் சென்று உழைத்திருக்கிறோம். துருப்பிடித்த தகர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, ஒரு சிறிய மேசையில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாது குறிப்புகள் எடுத்து இந்த நூலைப் படைத்தோம். எங்களுக்கு எந்தவிதமான மானியமோ உதவிகளோ அங்கு கிடைத்ததில்லை. ‘ரிவோல்ட்’ ஆங்கிலப் பத்திரிகையை கண்ணால் ஒருமுறை பார்ப்பதே என் வாழ்க்கையின் வேட்கையாக நினைத்திருந்தேன். சிலருக்கு அதன் அருமை-பெருமை தெரியாது. அம்பேத்கருக்கும்-பெரியாருக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ‘ரிவோல்ட்’ இதழைப் பார்த்தால் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட சாதி என்று இல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட, இழிவுபடுத்திய அத்தனை சாதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்த தந்தை பெரியாரை பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கு மட்டும் பாடுபட்டார் என்று நாக்கூசாமல் சிலர் பேசுகிறார்கள்.

ஏன், அம்பேத்கர் பற்றிப் பேசுபவர்கள், பெரியார் பக்கம் வருவதில்லை? ஏனென்றால், அந்தக் கால கம்யூனிஸ்டுகள்கூட செரிக்க இயலாத தலைவராக தந்தை பெரியார் இருந்தார்.

பறையர் பட்டம் ஒழியாமல், சூத்திரப் பட்டம் ஒழியாது என்றவர் பெரியார். காரல் மார்க்ஸ் மனித குலம் முழுவதையும் விடுவிக்காமல், பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே விடுதலை செய்ய முடியாது என்பார். அதுபோலத்தான் தாழ்த்தப்பட்ட, தீண்டப்படாத மக்களை விடுதலை செய்யாமல் உன் விடுதலையை கனவால்கூடப் பார்க்க முடியாது என்பது பெரியாரின் அடிப்படையான கருத்தாக இருந்தது.

இதுபோன்ற மையக் கருத்துடன் வெளியிடப்பட்ட பெரியாரின் நூல் ஆங்கிலத்தில் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது.

பெரியாரின் இயக்கத்தின் பெயரால், திராவிட இயக்கத்தின் பெயரால் அவரது கருத்தைச் சொல்வதாகக் கூறிக் கொள்வோர், செய்யக்கூடிய குற்றங்கள், தவறுகள், பாவங்கள் அனைத்துக்கும் சொந்தமான சில தலித்துகள் பெரியாரின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். நாம் சொல்லாத வார்த்தைகளை நம் மீது திணிக்கிறார்கள்.

எது தமிழ்ப் பண்பாடு?

தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். நமக்கு அது தேவையே இல்லை. தமிழ்ப்பண்பாடு என்று கழிசடை தனத்தை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெண்ணடிமைத்தனத்தை வைத்துள்ள தமிழ்ப் பண்பாடு நமக்கு வேண்டுமா? ஈழத் தமிழர் மாநாடு நடத்துகிறார்கள், அதற்கு சீருடையோடு வருகிறார்கள். லண்டனில் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு இருக்க முடியுமா? சிலர் ஜிப்பா போடுகிறார்கள். அது நமது உடையா? சேர, சோழ, பாண்டியர்கள் ஜிப்பா அணிந்திருந்தார்களா? அந்தக் காலத்தில் பெண்கள் மேலே கச்சை; இடுப்பில் சிறிய துண்டு போன்று உடை அணிந்திருந்தார்கள். வேறு உடை அணிந்திருக்கவில்லை. அப்படித்தான் முற்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

எவ்வளவோ நல்ல விஷயங்கள், வடநாட்டிலிருந்து பெண்களை விடுதலை செய்ய வந்திருக்கின்றன. அதில் ஒன்று சுடிதார். வேட்டி, சேலை வேலைக்கு செல்வோர் அணியும் உடையா? குளிர்காலத்தில் அணியும் உடையா? 1931-ல் எல்லோரும் ஒரே மாதிரியாக ‘கிராப்’ வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார் பெரியார். அது முற்போக்கு சிந்தனையா அல்லது இவர்களின் கற்பனை கலந்த பழைய காலத்து தமிழர் உடையா?

அண்ணாவின் ஆட்சியில் பலன் பெற்றவர் - கலைஞர் ஆட்சியில் பயனடைந்தவர் - பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சியில் பயனடைந்தவர் ம.பொ.சி.! கொடுமையான எமர்ஜென்சியைக் கண்டிக்காதவர் ம.பொ.சி.! அப்படிப்பட்டவரை சிலம்புச் செல்வர் என்று பட்டமிட்டு அழைக்கிறார்கள்.

கோவலன்-கண்ணகி திருமணத்தை பார்ப்பானை வைத்து நடத்துகிறார்கள். அதைப் புகழ்கிறார் இளங்கோவடிகள். இன்னும் பார்ப்பனர் செய்வதைப் புகழ்வோர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் சிலம்பு கூறும் தமிழ்ப் பண்பாடு!

இந்த மாதிரியான பண்பாடு தேவையா என்றுதான் பெரியார் வினா எழுப்பினார்!

சாதி வேறுபாடு இல்லாத, ஆண்-பெண் பேதமற்ற, ஏழை-பணக்காரன் ஒழிந்த உலகத்தைக் காண விரும்பினார் பெரியார். அது குமரி ‘ஜில்லா’ அளவு இருந்தால் கூடப் போதும் என்றார்.

சோசலிசப் புரட்சி நடத்துபவன்கூட விந்திய மலை வரை இருந்தால் தான் புரட்சி நடத்துவேன் என்று கூற மாட்டான். கிடைத்த அளவுக்கு விடுதலை போதும் என்று நினைத்தார்.

டெல்லிக்கு அடிமையாக இருந்து என்ன பயன்? என்று மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது விமர்சனம் செய்தார். பார்ப்பன-பனியா, ஆரிய அடிமையாக இருக்கும் போது தட்சினப் பிரதேசமாக இருந்தால் என்ன? தட்சண இந்தியாவாக இருந்தால் என்ன? என்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதால் தமிழன் விடுதலை அடைந்துவிட்டானா? இடஒதுக்கீட்டில்கூட முடிவெடுக்க நமக்கு உரிமை இல்லாமல் போய்விட்டதே!

இந்திய தேசிய இனம் ஆதிக்க தேசிய இனம் என்று சில தமிழ் தேசியவாதிகள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நிலை இங்கு கிடையாது.

57 ஆண்டுகள் இந்திய சுதந்திரத்தில் தமிழ் முதலாளி வடநாட்டில் தொழில் தொடங்குகிறான் - டி.வி.எஸ். - சீனா விலும், ‘டாடா’ உலக நாடுகளிலும் தொழில் தொடங்குகிறார்கள். இந்திய கட்டமைப்பு அதற்கு உதவுகிறது.

அதை மாற்ற இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்படும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். புரட்சிகர இயக்கங்கள் கூறும் எல்லா வரையறைகளையும், விளக்கங்களையும் பெரியார் பயன்படுத்தியுள்ளார்.

ஏராளமான எதிரிகளால் இகழப்படுபவராகப் பெரியார் இருந்துள்ளார். நாம் வைக்கும் விமர்சனங்கள் நம்மை வளர்க்கப் பயன்பட வேண்டும் - எதிரிகளுக்கு சாதகமாகிவிடக் கூடாது.

அரசு பற்றிய பெரியாரின் பார்வையை விமர்சனம் செய்யலாம் என்றாலும் தான் ஆதரித்த காமராசர் ஆட்சியில் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெரியாரின் இறுதி நாளில் தனித் தமிழ்நாட்டுப் போராட்டத்தை அறிவித்தார். அவரது கடைசி 20 ஆண்டுகள் வரலாற்றை எழுத நினைக்கிறேன்.

பல்வேறு முரண்பாடுகள் கொண்டவராகப் பெரியார் சித்தரிக்கப்படுகிறார் - ஆனால் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் தான் பெரியார் எடுத்த முடிவுகளில் பிரதிபலித்தன.

நம் கருத்துகளைச் சொல்ல வலிமையான ஊடகம் இருக்குமானால் இந்தியா முழுவதும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை புரட்சிகர கம்யூனிஸ்டுகளை பெரியாரியலின் பக்கம் ஈர்க்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.”

இவ்வாறு தோழர் எஸ்.வி. இராஜதுரை உணர்ச்சிகர உரை நிகழ்த்தினார்.

தொகுப்பு : ‘கதிர்’