நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றது. தினம் தினம் அங்கிருந்து வரும் காணொளிகள் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டு இருக்கின்றது.

உடல் சிதைந்த குழந்தைகளின் பிணங்களும், உறுப்புகளை இழந்த குழந்தைகளின் கதறலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் பரிதவிப்பும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் ஆற்ற முடியாத பெருந்துயரமும் மனித சமூகம் இன்னும் விலங்கு நிலையில் இருந்து மீளவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

ஏறக்குறைய ஒரு மாதமாக நடைபெற்று வரும் போரில் இதுவரை 8000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் 3000 குழந்தைகளும் அடக்கம்.

குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் என மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை இஸ்ரேலிய யூதவெறி ராணுவம் குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருகின்றது. இதன் மூலம் இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்யும் தனது திட்டத்தை பகிரங்கமாக செயல்படுத்தி வருகின்றது.

உலகத்திற்கு ஜனநாயகத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவதாரம் எடுத்துள்ள ஏகாதிபத்திய நாடுகள் எல்லாம் இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்ப்பதோடு இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.palastine war victimsஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் வெளிப்படையாகவே இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கின்றார்கள். இவர்கள் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா அரசும் வெட்கமே இல்லாமல் இஸ்ரேலை ஆதரிக்கின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மோடி “இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய செய்தியால் இந்தியா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது, இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம்,” என்று அறிவித்திருக்கின்றார்.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு என்பது இந்திய மக்களுக்கும் இஸ்ரேலுக்குமான உறவாக ஒரு போதும் இருந்ததில்லை. அது இந்திய பார்ப்பனக் கும்பலுக்கும் இஸ்ரேலிய யூத இனவாதக் கும்பலுக்குமான உறவாகவே வளர்த்தெடுக்கப்பட்டது.

அடிப்படையில் நாடாற்ற யூத இனவெறியர்கள் எப்படி பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டார்களோ, அதே போல நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டம் இந்திய மக்களை தனது கருத்தியலால் அடிமைப்படுத்தி, இந்தியாவின் பூர்வகுடி மக்களைவிட தன்னை உயர்ந்த சக்தியாக கட்டமைத்துக் கொண்டு இன்றுவரை அரசியல் சமூக பொருளாதார மட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

அதனால் இந்திய பார்ப்பன சக்திகளின் நலனை முன்னிறுத்த வேண்டும் என்றால், இஸ்ரேலை ஆதரிப்பதைத் தவிர இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வேறு வழியே இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க நோக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களை அளிக்கும் நாடாகவும் இஸ்ரேல் இருந்து வருகின்றது.

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிற்கு மோட்டார் மற்றும் வெடிமருந்துகளை இஸ்ரேல் வழங்கியது. இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்த மூன்றாவது பெரிய நாடாக இஸ்ரேல் இருந்து வருகிறது.

ஏறக்குறைய மொத்த ஆயுத இறக்குமதியில் 8.7 சதவீதத்தை இந்தியா இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்கின்றது. ரஷ்யாவில் இருந்து 47.2 சதவீதமும், பிரான்சில் இருந்து 29.2 சதவீதத்தையும் இறக்குமதி செய்கின்றது.

இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகள் ஆயுத வியாபாரத்தில் கொடி கட்டிப் பறப்பவையாகும்.

உலக ஆயுத உற்பத்தியில் உலக நாட்டாமை அமெரிக்கா மட்டும் 40 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றது. ரஷ்யா 16%, பிரான்ஸ் 11%, சீனா 5.2% ,ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3 % கொண்டிருக்கின்றது.

அதனால்தான் ஆயுத வியாபாரிகள் எப்போதுமே போரை ஆதரித்து வருகின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு நாட்டை சின்னாபின்னமாக அழித்து மனித உயிர்களைக் கொன்று குவித்தால், அவர்களின் கல்லாபெட்டியில் பணம் கொட்டும்.

ஆயுதங்களுக்காக வெளிநாட்டிடம் கையேந்தி நிற்கும் இந்தியா போன்ற நாடுகள் ஒருபோதும் ஆயுத வியாபார நாடுகளை பகைத்துக் கொள்வதும் இல்லை. அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்குமான வர்த்தக உறவுகள் நேரடியாக இந்திய கார்ப்ரேட்டுகளின் நலத்தோடு பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இஸ்ரேலுக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய நாடாக இந்தியா இருக்கின்றது. 1992 இல் இஸ்ரேலோடு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதில் இருந்து, இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

2022-23 நிதியாண்டில், இஸ்ரேலுக்கான இந்திய சரக்கு ஏற்றுமதி 7.89 பில்லியன் டாலராகவும், இந்தியாவுக்கான இஸ்ரேலிய ஏற்றுமதி 2.13 பில்லியன் டாலராகவும் இருந்தது. ஆசியாவில் இஸ்ரேலின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உள்ளது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டால் இந்தியா ஆளும் வர்க்கமான பார்ப்பன, பனியா கும்பலின் நலன்களும், இஸ்ரேலிய யூதவெறிக் கும்பலின் நலன்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு உறவாடிக் கிடக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதனால்தான் காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் அக்டோபர் 27 இல் வாக்கெடுப்பு நடத்திய போது, அதில் இந்தியா வாக்களிக்காமல் இனப்படுகொலை குற்றவாளி இஸ்ரேலுக்கு ஆதரவாக நடந்து கொண்டது.

மொத்த வாக்குகளில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் பதிவாகின. இந்தியாவைத் தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், இத்தாலி, ஸ்வீடன், யுக்ரைன், ஜிம்பாப்வே போன்ற நாடுகளும் இதில் பங்கேற்கவில்லை.

இதே போல 2014ல் நடந்த காஸா போரின் போது, பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை செய்ததைக் கண்டித்து 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் போதும் பி.ஜே.பி. அரசாங்கம் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய யூத இனவெறியர்கள் இனப்படுகொலை செய்வது இது முதன் முறை இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பல முறை இஸ்ரேல் அத்துமீறி இருக்கின்றது.

2008 டிசம்பர் 27ம் தேதி தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் 22 நாள் காசாவில் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

2012 நவம்பர் 14ல் ஹமாஸின் இராணுவ தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொன்றது. இதைத் தொடர்ந்து 2014 ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 3 இஸ்ரேல் நாட்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஏற்பட்ட போர் 7 வாரங்கள் நடந்தது. இதில் காசாவில் 2,100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

2021ல் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளுடன் மோதல் நடந்தது. இதில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இதற்குப் பதிலடியாக பாலஸ்தீனம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அதன்பிறகு 2022 ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேல் ராணுவம், அகதிகள் முகாமைத் தாக்கி 7 பாலஸ்தீனியர்களைக் கொன்றது. இதற்குப் பதிலடியாக பாலஸ்தீனம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

தற்போது நடக்கும் இந்தத் தாக்குதல் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் மிகவும் மூர்க்கத்தனமானதாகும். ஒரு தெளிவான இன அழிப்புத் திட்டத்தோடு இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் சிங்கள ராணுவம் எப்படி உலக நாடுகளின் துணையோடு ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்ததோ, அதே போல உலக நாடுகளின் துணையோடு பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய யூதவெறி அரசு படுகொலை செய்து வருகின்றது.

காஸாவில் இணைய மற்றும் தகவல் தொலைதொடர்பு சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பது அங்கிருக்கும் சுமார் 23 லட்சம் மக்களை இஸ்ரேலிய யூதவெறி அரசு படுகொலை செய்யத் திட்டமிட்டிருப்பதையே அம்பலப்படுத்துகின்றது.

நம் காலத்தில் நடக்கும் மிகப் பெரிய இனப்படுகொலைகளுக்கு நாம் சாட்சியமாய் இருக்கின்றோம். மனித சமூகம் இதுவரை அடைந்திருக்கும் நாகரீக அறிவியல் வளர்ச்சி எல்லாமே எப்படி ஓர் இன அழிப்பை வேடிக்கை பார்க்கின்றது, அதை எப்படி ஆதரிக்கின்றது என்பதை எல்லாம் கனத்த மனதோடு கண்டுகொண்டு இருக்கின்றோம்.

ஆனால் மனிதம் செத்துவிடவில்லை என்பதை இன்று உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நமக்கு உணர்த்துகின்றன. உலகம் முழுவதும் மதவெறியர்களும் இன வெறியர்களும் போர்வெறியர்களும் மக்களை ஒட்டச் சுரண்டி கொழுக்கும் பணவெறியர்களும் வீழ்த்தப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதையே இது போன்ற நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

- செ.கார்கி

Pin It